கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். நாகூம்: 1 :7
எனக்கு அன்பானவர்களே!
இக்கட்டுகளில் நமக்கு உதவி செய்கிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வீட்டில் அப்பா, ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வதக்கி, தன் மகளிடம் சொன்னார்.
“மகளே, நம்முடன் சாப்பிட என் உறவுகளையும், நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் அழைத்து நாம் எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.
ஆனால் அவருடைய மகளோ, தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள்.
“தயவு செய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!” என்றாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.
வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு குடித்து கொண்டாட்டமாக கழித்தனர்.
திகைத்த தந்தை! தன் மகளிடம் திரும்பி, அவளிடம் கேட்டார்.
“இங்கு வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?” என்றார்.
மகள் சொன்னாள்.
“தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் தீ எரிவதாக நினைத்த தீயை அணைப்பதற்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல.
இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். ” என்றாள்.
நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும், உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக் கூடும்? என்றாள்.
பிரியமானவர்களே,
இன்றும் நமது உறவுகளும் அப்படித் தான். மனிதர்கள் பொதுவாகவே பலவீனமானவர்கள்
எதிர்பாராத நேரத்தில் ஆபத்துக்கள் பிரச்சனைகள் நெருக்கங்கள் வியாதிகள் வறுமைகள் வரும் போது உறவுகளையும், நண்பர்களையும் உதவியை நாடுவது உண்டு.
ஆனால் சிலர் உதவி செய்தேன் என்று வாக்கு கொடுப்பார்கள். ஆனால் மறந்து போய் விடுவார்கள்.
யோசேப்பு சிறையில் இருக்கும் பொழுது பார்வோனின் பான பாத்திரக்காரன் நான் உனக்கு உதவி செய்வேன், பார்வோனிடத்தில் உன் காரியத்தை அறிவித்து விடுதலை வாங்கி தருவேன் என்று வாக்கு கொடுத்தான், ஆனால் மறந்து போனான்.
மனிதர்கள் உதவி சில வேளைகளில் விருதாவாய் போய் விடுகிறது. . தேவன் ஒருவர் மாத்திரமே உண்மையுள்ளவர், வாக்கு மாறாதவர், இக்கட்டுகளில் உதவி செய்கிறவர்.
வேதத்தில் பார்ப்போம்,
நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக் காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
சங்கீதம் :37 :39.
கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
நாகூம்: 1 :7.
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர்.
சங்கீதம்: 32:7
பிரியமானவர்களே,
இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல் உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந்தனியாக வாழ்ந்து விட ஒருவராலும் முடியாது.
உறவுகள் பெரும் சுமையாக பல நேரங்களில் இருந்தாலும் உறவுகள் தான் மனிதனின் மிகப் பெரும் பலம்.
ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும்,இன்ப துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுக்கும் ஒன்று தான் உறவுகள்.
இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும்,
முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல் உறவுகளை முறித்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உறவுகள் என்றால் யார்? அவர்களால் என்ன பயன் என்பதை விளங்காமல் உறவுகளால் நமக்கு சிக்கலும், சிரமமும் தான் ஏற்படுகிறது என்று சொல்லி உறவுகளோடு சேர்ந்து வாழாமல் இருக்கிறார்கள்.
வேதம் சொல்லுகிறது
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான்: 4:20 என்று கேள்வி எழுப்புகிறது.
எனவே உறவுகளிடத்திலும் நம் ஆண்டவரிடத்திலும் உள் அன்போடு அன்பு கூறுவோம்.
ஆண்டவர் யாக்கோபை பார்த்து “நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதி :28:15) என்று சொல்லி தன் வாக்கை நிறைவேற்றினவர்.
நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேவனை நோக்கி கூப்பிடுங்கள். அவர் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு உதவி செய்ய முடியும். ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்
(சங்கீதம் :50:15) என்பது கர்த்தருடைய வார்த்தை.
தன்னை நோக்கி கூப்பிடுகிற யாவரையும் விடுவிக்கிறவர். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்(பிலிப்பியர் 4:6) அப்பொழுது அவர் எல்லா இக்கட்டுகளிலிருந்து உங்களை விடுவித்து பாதுகாப்பார்.
கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலமாக நம் யாவரையும் ஆசீர்வதித்து,
இக்கட்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்து வழிநடத்துவாராக.
ஆமென்