நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள். 2 சாமுவேல்: 19:1
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள்.அந்த , நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள்.
அதனைக் கண்டு அப்பா மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறி விட்டார்கள்.
ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்டவும் புத்தி சொல்லவும் ஒரு போட்டியை வைத்தார்.
நால்வரையும் ஆளுக்கொரு கொம்புகளை (குச்சி)கொண்டு வர சொன்னார்,
அவர்களும் கொண்டு வந்தார்கள். மூத்த மகனை அழைத்து அந்த நான்கு கொம்புகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.
பிறகு ஒவ்வொருவரையும் அழைத்து அந்த கட்டிய கொம்புகளை உடைக்க சொன்னார்.
யாராலும் முடிய வில்லை.
பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவ்வொன்றாக உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.
ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறன் என்றார்.
நீங்கள் நாலு பெரும் நான்கு கொம்புகளை போலத் தான். ஆனால் நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் உங்களை யாரும அசைக்க முடியாது என்று கூறினார்.
நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் என்னவென்று புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழ தொடங்கினார்கள்.
நமது கர்த்தருடைய வேதம்
யோவான்: 17:11-ல் இவ்வாறு கூறுகின்றன. பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப் போல ஒன்றாயிருக்கும் படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக் கொள்ளும் என்று நம் அன்பான இயேசு கிறிஸ்து பிதாவிடம் வேண்டிக் கொள்ளுகின்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
சங்கீதம்:133:1.
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலை பாதகனாயிருக்கிறான். மனுஷ கொலை பாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
1 யோவான்: 3:15.
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன். தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான்:4:20.
பிரியமானவர்களே,
எறும்புகள் முதல் யானைகள் வரை… ஆதி மனிதர்கள் முதல் முந்தைய தலைமுறை வரை…. குழுக்களாக வாழும் நன்மைகளைக் குறித்து நன்கு உணர்ந்து வைத்திருந்தனர்.
இணைந்து வாழ்வது தான்,தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் என எல்லா உயிர்களும் தெரிந்து வைத்திருக்கின்றன.மனிதனைத் தவிர.
ஆன்மீக காரியங்களிலும் குழுக்கள் சிறந்தவை தான். கிறிஸ்து இயேசுவும் தமக்கென சீடர்களைத் தெரிந்து, குழுவாகவே ஊழியம் செய்தாரெனில் குழுக்களின் மேன்மை பெரிதல்லவா?
கிறிஸ்துவுக்குப் பின் சீடர்களும் குழுக்களாகவே ஊழியத்தைத் தொடர்ந்தனர்! கர்த்தரும் நம்மை சபையாக, ஒரு குழுவாக பார்ப்பதில் மகிழ்கிறார்! தனிமை ஓர் பயங்கரமான சிறை! அதை உடைக்க உறவுகள் தேவை! தாங்குவதற்கு கரங்கள் தேவை! அதற்கே குழுவும் ஐக்கியங்களும் உதவுகின்றன.
சகோதரர்களுக்கு
ஒரு மனம் தேவை! விட்டுக் கொடுக்கும் பண்பு தேவை! பாராட்டும் மனம் தேவை! தவறுகளைக் கண்டிக்கும் தைரியம் தேவை! அப்போது தான் ஒரு சமநிலை உண்டாகும்!
ஒரு சிலராய் இணைந்து ஒரு மனமாய் ஜெபிப்பது, குழுவாய் ஆராதிப்பது, பலவீனரைத் தாங்குவது, பரிசுத்தம் வாஞ்சிப்பது, சபை கூடிவருவது, போன்றவற்றில் கர்த்தர் வாசம் செய்கிறார்!.
அதிலே மகிழ்ச்சி நிலவும்! காரணம், அது ஒரு குடும்ப உணர்வு, அதிலே, கர்த்தர் தலைவர்! குழு உணர்வை விரும்புவோம். தனிமை என்னும் போதையை தவிர்ப்போம்!
ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக் கடவோம். ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
அன்பில்லாதவன் தேவனை அறியான். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
நீ உன்னை நேசிப்பது போல்,பிறரை நேசி, இந்த இரண்டு வரிகளில் ஐக்கியத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை ஆண்டவர் விளக்கியுள்ளார். ஆண்டவரிடத்திலும்,பிறர் இடத்திலும் அன்பாகவும் ஐக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பது ஆண்டவருடைய கற்பனை. இந்த கற்பனையை நாம் நிறைவேற்ற வேண்டுமானால் நமக்குள் தேவனுடைய கிருபை தேவைப்படுகிறது இந்த தேவ கிருபையால் மட்டுமே, நமக்குள் மகிமையான ஐக்கியத்தை உருவாக்கித் தர முடியும்.
எனவே நாம் ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து, அவர் கிருபையையும் சமாதனத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நாமும் மற்றவர்களுக்கு சமாதானம் கொடுக்க முடியும் .
தனிமை என்னும் போதையை தவிர்த்து, அனைவரிடமும் ஒற்றுமையோடு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.