பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப் பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. பிரசங்கி: 5 :10
எனக்கு அன்பானவர்களே!
திருப்தியாய் நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மனிதன் தனக்கு தெரிந்த ஒரு குருவிடம் வந்து “குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.
‘‘அப்படியா?’’‘‘
ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல என்றான்.
’’குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போட்டு விடு. அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்து சொல்’’ என்றார்.
குரு சொன்ன படியே செய்தான். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத் தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே… அதான் எப்படி என்று தெரியவில்லையே என்றான்.
’’‘‘அது தான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகி விட்டான். ஆனால், ஒன்பது காசுகள் தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான்.
வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான் என்றான்.
குரு சிரித்துக் கொண்டே சொன்னார்.
’’‘‘இருப்பதில் நாம் திருப்தி அடையாவிட்டால், நமக்கு இருக்கும் நிம்மதியும் போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.
வேதத்தில் பார்ப்போம்,
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
சங்கீதம்: 107:8.
அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள்:12 :14.
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
யோவேல்: 2 :26.
பிரியமானவர்களே,
“கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’’ என்று சொல்லி கேட்டிருப்போம். இது ஒருவிதத்தில் உண்மை தான். சாப்பிடுவதற்கு, துணிமணிக்கு, வீடு என்று எல்லாவற்றுக்கும் பணம் தேவை.
ஒரு வணிக பத்திரிகையின் ஆசிரியர் சொல்கிறார்: “பணம் தான் சமுதாயத்துக்கு ரொம்ப முக்கியம் . . .
இருந்தாலும், பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியாது. பணத்தை வைத்துக் கொண்டு, சாப்பாட்டை வாங்கலாம் பசியை வாங்க முடியாது, மருந்தை வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது,
ஆடம்பரத்தை வாங்கலாம் அன்பை வாங்க முடியாது.
வேலைக்காரர்களை வாங்கலாம் விசுவாசத்தை வாங்க முடியாது என்று நார்வே நாட்டு கவிஞர் அர்னா கர்பார்க் கிறுகின்றார்.
வாழ்வதற்கு பணம் தேவை தான், ஆனால் பணமே வாழ்க்கையாகி விடக் கூடாது. இந்த உண்மையை உணரும் ஒருவர் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வார்.
“பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக் கொண்டு பலவித வேதனைகளால் தங்களையே ஊடுருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று
1 தீமோத்தேயு:6:10-ல்
பார்க்கிறோம்.
பணம் வைத்திருப்பது தப்பில்லை ஆனால், பணத்தின் மீது ஆசை வைத்திருப்பது தான் தப்பு. பணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது உறவுகளுக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம்.
பணம் சம்பாதிக்கவே கூடாது என்றோ, பணக்காரர்கள் எல்லாரும் மோசமானவர்கள் என்றோ பைபிள் சொல்வதில்லை. பணம் வைத்திருப்பது தவறில்லை. ஆனால், பணமே கதி என்று இருப்பது தான் தவறு. பணத்தைப் பற்றி பைபிள் நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கிறது.
எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லி முடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
பிரசங்கி: 1:8 என்று ஞானியாகிய சாலமோன் கூறுகின்றார்.
இருப்பதை வைத்து திருப்தியோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு பணக் கஷ்டமே இருக்காது என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் பணத்தைப் பற்றிய கவலையிலேயே மூழ்கிவிட மாட்டார்கள்.
பைபிள் ஆலோசனை: “செல்வந்தனாக முயன்று உனது உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதே.”—நீதிமொழிகள் 23:4, (ஈஸி டு ரீட் வர்ஷன் மொழிபெயர்ப்பில் இதனை குறிப்பிடுகிறது).
நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு “மனநோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
துரிதமாய் பணக்காரராக வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறவர்கள் நிறைய பிரச்சினையில் மாட்டிக் கொள்கிறார்கள்” என்று தி நார்சிஸிஸம் எபிடெமிக் என்ற புத்தகம் சொல்கிறது.
கர்த்தருடைய வேதம் கூறுகின்றன எபிரேயம் 13:5.-ல்
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
ஆகவே நாம் போதும் என்கிற மனதுடன் வாழுவோம்.
அப்பொழுது நமக்கான ஆசீர்வாதங்களும், உயர்வுகளும் எவ்வித தடையும் இன்றி நமக்கு கிட்டும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களையும், உயர்வுகளையும் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.