Daily Manna 240

நல்யோசனை செய்து யுத்தம் பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங் கிடைக்கும். நீதிமொழிகள்: 24 :6.

எனக்கு அன்பானவர்களே!

ஆலோசனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர்.

அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.இவர்களில் யாராவது ஒருவர் அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லையேஎன்று இவர்களை ஏளனம் செய்து சென்றனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள்.

அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்க முடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்கார வைத்து இருவரும் புறப்பட்டனர்.

இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றி விட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், பையனை நடக்க விட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப் போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக் கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதை மேல் ஏறிக் கொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங் கெட்ட ஜென்மங்கள்!” என்று விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது.

கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

வேதம் சொல்லுகிறது சங்கீதம்: 32-8 -ல் நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று தெளிவாக கூறுகின்றன.

ஆனால் நாமோ . மனித சத்தத்திற்கு செவிகொடுத்து , வெட்கப்பட்டு நிற்கிறோம்.

வேதத்தில் பார்ப்போம்

கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
சங்கீதம் :33:11.

பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தை சம்பாதிப்பது எவளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவளவு மேன்மை!
நீதிமொழிகள்:16:16.

ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்: புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
நீதிமொழிகள்: 19:8.

பிரியமானவர்களே,

மனிதனாகப் பிறப்பதே சிறப்பிலும் சிறப்பு. அதில் முழு மனிதனாக வாழ்வது அரிதிலும் அரிது. மனிதம் பல்வேறு சூழ்நிலைகளில் முழுமை அடைகிறது.

மனிதம் பரிபூரணம் அடைய பல வழிகள் உண்டு. நாம் நம் வாழ்வின் நலனுக்காக எதை செய்ய முயற்சித்தாலும், அதற்கு முன் நம் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து அவரின் ஆலோசனை கேட்க வேண்டும்.

இவ்வாறு நடந்து கொள்பவரே வெற்றி அடைவார்கள். மனிதர்களில் மூன்று வகையினர் உண்டு முதலாவது வகையினர் முழு மனிதர்கள் ஆவர். இரண்டாவது வகையினர் அரை மனிதர்கள் ஆவர். மூன்றாவது வகையினர் மனிதர்களே இல்லாதவர் ஆவர்.

முதலாம் வகையினர் முழு மனிதர்கள் யாரென்றால், அவர்கள் தெய்வபக்தியும், அறிவும், தெளிவும், பிறரிடம் ஆலோசனைகளை கேட்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தான் மனிதர்களிலேயே முழு மனிதர்கள்’.

இரண்டாம் வகையினர் அரை மனிதர்கள். யாரெனில் சுயபுத்தி உடைய புத்திசாலியாக இருப்பார்கள்; எனினும் பிறரிடம் ஆலோசனை செய்ய மாட்டார்கள். தான் செய்வது தான் சரி என்று எல்லா விதத்திலும் சாதிப்பாவர்கள் ’.

மூன்றாம் வகையினர் மனிதர்களே கிடையாது. இவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால், இவர்கள் கடவுளை மதிக்க மாட்டார்கள் சுயபுத்தியும் கிடையாது. பிறரின் புத்தியையும், ஆலோசனைகளையும் கேட்கவும் மாட்டார்கள். பிறரை மதிக்கவும் நேசிக்கவும் மாட்டார்கள். பிடிவாத குணமும், இறுமாப்பும் நிறைந்தவர்களுமாய் இருப்பார்கள். ’.

இம் மூன்று வகையினரில் நாம் எந்த வகையினராக இருக்க விரும்புகிறோம்??
கழுதையை சந்தைக்கு கொண்டு போன தந்தை- மகன் வழிப்போக்கனின் வார்த்தையை கேட்டு பல கஷ்டங்களையும் கழுதையையும் ஆற்றில் விட்டு விட்டு திகைத்து நின்ற மனிதர்களை போலவா??

இன்றும் பல மனிதர்கள், பக்குவப்படாத மனிதர்களின் வார்த்தைகளை கேட்டு, அவர்கள் செயல்களைப் பார்த்து தானும் செய்யத் துணிந்து, அன்று அப்பா மகன் கழுதையை தொலைத்தது போலவே, இன்றும் அநேகர் தன் வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு திகைத்து நிற்கிறார்கள்.

வேதம் சொல்லுகிறது, உன் வழிகளிலெல்லாம் ஆண்டவரை நினைத்துக் கொள் அவர் உன் பாதையை செவ்வைப்படுத்துவார்.

ஆம், அவர் நம் பாதையை செவ்வை படுத்துகிறவர் மட்டுமல்ல எந்தவித சேதமும் இல்லாமல் சிறப்பாய் நடத்தி செல்லுபவர். நாம் எதை செய்தாலும் ஆண்டவரின் ஆலோசனைப்படி செய்வோம் வளமாய் வாழ்வோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு நல்ல ஆலோசகராக இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *