ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். நீதிமொழிகள்: 11:14.
எனக்கு அன்பானவர்களே!
ஆலோசனை கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பிறவியிலே குருடனாயிருந்த ஒரு மனிதனும், அவனது நண்பனும் பாலைவனத்தின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் வேறு வேறு வழிகளில் பயணத்தை ஆரம்பித்தவர்கள்.
பல மணி நேரத்திற்கு பின் இருவரும் சந்தித்துக் கொண்டவர்கள். அதன் பிறகு இணைந்து பயணம் செய்கின்றனர். பாலைவனத்தில் இரவில் வீசும் குளிர்காற்று உடலை நடுங்க வைக்கும். பகலெல்லாம் வெயில்.
ஒரு நாள் இரவு கடும் குளிர் அவர்களால் தாங்க முடியாத அளவுக்கு அவர்களை வாட்டி வதைத்தது. பொழுது விடிந்ததும் குருடன் அவசரமாக எழுந்தான்.
தட்டுத் தடுமாறிய படி தன் கம்பை தேடினான். அவனது கைக்கு கம்பு கிடைக்கவில்லை. அங்கே கம்பைப் போல் பாம்பு ஒன்று குளிரினால் கட்டை போல் விறைத்துப் போய் கிடந்தது. அதனை கம்பென்று நினைத்து கையில் பற்றிக் கொண்டான்.
ஆகா என்னுடைய பழைய தடிக்குப் பதிலாக மழமழப்பான அருமையான புதிய தடி கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தவன் நண்பனை எழுந்திருக்கச் சொல்லி குரல் கொடுத்தான்.
அவன் எழுந்து பார்த்த போது திடுக்கிட்டான். என்ன காரியம் செய்திருக்கிறாய்? நீ பாம்பை பிடித்திருக்கிறாய். அது உன் உயிரை பறித்து விடும். எனவே அதை உடனே கீழே வீசி விடு என்று கத்தினான்.
கண் தெரியாதவன், நண்பனே என் மீதுள்ள பொறாமையினால் நீ என்னிடமுள்ள அழகிய தடியை பாம்பு என்று கூறுகிறாய். நான் எறிந்தால் அதை நீ எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறாயா? என்று கேட்டு நகைத்தான்.
ஐயோ தாமதிக்காமல் உடனே அதை எறிந்து விடு அது பெரிய கரு நாக பாம்பு என்று கத்துவதை கேட்டு சிரித்த குருடன், என்னை ஏமாற்ற முடியாது.
என்னுடைய அதிஷ்டத்தினால் கிடைத்த இந்த நல்ல தடியை நீ என்னிடமிருந்து அபகரிக்கத் திட்டமிடுகிறாய். எனவே பொறாமைக்காரனான உன்னுடன் இனி நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டு துரிதமாக நடக்க ஆரம்பித்தான்.
சூரியன் உதிக்க ஆரம்பித்த உடன் உஷ்ணத்தினால் பாம்பின் விறைப்புத் தன்மை நீங்கியது. செத்ததுப் போல கிடந்த பாம்பு உணர்வு பெற்று பட்டென்று குருடனை கொத்தி கொன்றுப் போட்டது.
பிரியமானவர்களே,
நம்மில் பலரும் இப்படித் தான் அறியாமை என்ற குருட்டுத்தனம் நம்மிடம் நிறைய உண்டு. பலவித மாயைகளை வழவழப்பான அழகிய தடி என்று நினைத்து பற்றிக் கொள்ளுகிறோம்.
வேண்டாம் அது விஷமுள்ளது என்று பலர் எச்சரித்தும் அதை ஏற்க மறுத்து பிடிவாதமாக நடக்கிறோம். நாம் எவற்றை வழித் துணை என்று பற்றுகிறோமோ அவையே நம் அழிவுக்கும் காரணமாகி விடுகின்றது.
வேதத்தில் பார்ப்போம்,
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற் போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
நீதிமொழிகள்: 15 :22.
நல்யோசனை செய்து யுத்தம் பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங் கிடைக்கும்.
நீதிமொழிகள்: 24:6
கர்த்தருடைய ஆலோசனை நித்திய காலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
சங்கீதம்: 33 :11.
பிரியமானவர்களே,
ஆலோசனைகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவசியம் என்பதை உணர்ந்த சாலமோன் ராஜா, நீதிமொழிகளின் புத்தகத்தில் அதனைக் குறிப்பிட்டு எழுதுகிறான்.
சாலமோனுடைய வாழ்க்கையை நாம் பார்ப்போமானால், அவன் ஞானத்தில் சிறந்தவனாக இருந்த போதிலும், கர்த்தருடைய ஆலோசனையின்றி நடந்ததினால் அவன் வாழ்க்கையில் பல தோல்விகள்.
இன்று அநேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு வேதத்தின் ஆலோசனையையோ, ஊழியர்களின் ஆலோசனையோ தேவையில்லையென நினைத்து தாங்கள் நினைப்பது போல் வாழ்கின்றார்கள்.
இன்னும் சிலர் வேதம் தரும் ஆலோசனை தற்காலத்தில் நமக்குப் பொருந்தாது; அது அக்காலத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தான் பொருந்துமென கூறுவது உண்டு. இவ்வாறெல்லாம் இன்று கிறிஸ்தவர்கள் நினைத்து தங்களுக்கு எது சரியெனத் தோன்றுகிறதோ அதன்படி நடக்கின்றனர்.
ஆனால் வேதம் மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாக இருக்கும் (நீதி. 12:15) என்று கூறியுள்ளதைக் கவனிக்க மறந்து விடுகின்றனர். நமது வாழ்வில் தேவனிடத்திலிருந்து ஆலோசனைகளைப் பெறாமல் நாம் நடப்பிக்கும் எந்த காரியத்திலும் வீழ்ச்சிக் காணப்படும்.
இதினால் தான் ஆலோசனைகள் இல்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள் என நீதிமொழிகள் நம்மை எச்சரிக்கின்றன. எனவே அவரது ஆலோசனைகளைப் பெற அவர் பாதத்தில் காத்திருக்க கற்றுக் கொள்வோம்.
அருமையானவர்களே
ஆவிக்குரிய வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கும் நாம் தினமும் ஓடுகின்ற வழியை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்? அவைகள் கர்த்தருடைய ஆலோசனைக்கு உட்பட்ட வழியா என ஆராய்ந்து பார்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் ஆவிக்குரிய ஓட்டத்தை ஆராய்ந்து பாருங்கள். இவ்வளவு நாட்களும் உங்கள் எதிர்காலத்தை, உங்கள் முன்னேற்றத்தை நோக்கி ஓடிய ஓட்டங்கள் எல்லாம் உங்கள் பார்வைக்குச் செம்மையாக தோன்றியதாக இருந்தால் அதன் மூலமாய் விளைந்தது என்ன என்பதை சிந்தியுங்கள்.
உன் மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்ற கர்த்தருடைய ஆலோசனையை நித்திய காலமாக பின்பற்றி வாழுவோம்.
கர்த்தர் தாமே ஒவ்வொரு நாளும் தமது ஆலோசனையையும், ஆசீர்வாதங்களையும் தந்து நம்மை வழிநடத்துவாராக.
ஆமென்.