கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22.
எனக்கு அன்பானவர்களே!
தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த ஜிம் என்பவர், தன் வாழ்க்கையில் அனைத்து விதமான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் இழந்தவராக காணப்பட்டார்.
எனவே என்னுடைய நிம்மதியையும், என் குடும்பத்தினுடைய நிம்மதியும் இழப்பதற்கு காரணமாய் இருந்த இந்த குடிப் பழக்கத்திலிருந்து விடுதலையாக விரும்பினார்.
அவருடைய ஜெபத்தையும், கண்ணீரையும் கண்ட அருமை ஆண்டவர் அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தார்.
ஜிம் இயேசுவுக்கு தன் இருதயத்தை ஒப்புக் கொடுத்த பின், ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு தவறாமல் ஆலயம் சென்று, முழங்காலில் நின்று, “இயேசுவே, நான் ஜிம் வந்திருக்கிறேன்” என கண்ணீரோடு அவர் பாதத்தில் காத்திருப்பார்.
ஒருநாள் அவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மதியம் 12 மணி ஆனதும், இன்றைக்கு தன்னால் ஆலயம் செல்ல முடியவில்லையே என மிகுந்த வருத்தமடைந்து கலங்கினார்.
வேதம் கூறுகின்றது. நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார் ; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என்று சங்கீதம் 40:17 கூறுகின்றது.
திடீரென,”” ஜிம் கவலைப்படாதே நான் உன்னை பார்க்க வந்திருக்கிறேன் என்று ஒரு குரல் கேட்டது. அவருக்கு முன்பாக நின்ற இயேசுவை, கண்ட போது “ ஜிம் பரவசமடைந்தார். நான் பரலோக தரிசனத்தை கண்டதை நினைத்து மிகுந்த சந்தோஷமடைந்தார்
“நீதிமான்கள் கூப்பிடும் போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கி விடுகிறார்” (சங்கீதம் 34:17) என்ற வேத வசனத்தின்படி, தேவனுக்கு முன்பாக நாம் உண்மையாய் வாழும் போது,கர்த்தர் நம் கூப்பிடுதலை கேட்டு அருகில் நிச்சயம் வருவார். வருவது மட்டும் அல்ல, வந்தவர் நம் எல்லா இக்கட்டுகளுக்கும் நம்மை விலக்கி மீட்டுக் கொள்வார்.
அவரே நம்மை உருவாக்கியவர். அவர் நம்மை ஆதரித்து அநேக ஆசீர்வாதங்களை நமக்கு தரவல்லவர். அவர் இரக்கமுள்ளவராயிருக்கிறபடியால், நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிப்பார். அவருடைய இரக்கம் பெரியது, அவை அளவிட முடியாதது.
வேதத்தில் பார்ப்போம்,
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
சங்கீதம் :4 :3.
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
சங்கீதம் :145 :18.
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
எரேமியா: 33 :3
பிரியமானவர்களே,
.கர்த்தர்”. தம்மை நோக்கி, யார் கூப்பிட்டாலும், பாரபட்சமின்றி அவர்கள் அருகில் கர்த்தர் நிற்கிறார்.
ஆனாலும் “உண்மையாய்” என்று தாவீது குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும். “கடவுளே, கடவுளே” என்ற வார்த்தைகள் நமக்கு மிகவும் பழக்கப்பட்டு விட்டன. எதற்கொடுத்தாலும் கடவுளைக் கூப்பிட நாம் தயங்குவதில்லை.
ஆனால் மெய் மனஸ்தாபத்துடன், உடைந்த உள்ளத்துடன் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும் போது, அது வித்தியாசமான அனுபவத்தை நமக்களிக்கின்றது.
எகிப்திலே அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர் நானூறு வருடங்களாகக் கூப்பிடாமலா இருந்திருப்பார்கள்? ஆனால், எப்பொழுது ஜிம் மனம் வருந்தி ஆண்டவரை நோக்கி கூப்பிட்டது போல அவர்கள் உண்மையாகவே கூக்குரலிட்டார்களோ அப்போது தான் தேவனுடைய கரத்தைக் காண முடிந்தது.
இப்படியாக, உண்மையாய் கூப்பிடும் வேளைகளிலெல்லாம் சமீபத்தில் வந்து நிற்கும் கர்த்தர் நமக்கிருக்க, ஏன்? நம் துக்க சமயத்தில் மனுஷரை நாடி ஓடவேண்டும்?
வியாதியா, வியாகுலமா? சிறையிருப்பா, சீர்குலைந்துவிட்ட வாழ்க்கையா? விடுபடமுடியாத பாவங்களா, விழுந்துவிட்ட பள்ளத்தாக்குகளா? எதுவாயினும் முதலாவது, நாம் ஆண்டவரண்டைக்குச் செல்ல நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது நாம் போக வேண்டிய வழியையும், சந்திக்க வேண்டிய மனுஷர்களையும் அவரே நம் சமீபத்திலிருந்து காட்டுவார். மாத்திர மல்ல, பிரயோஜனமானவைகளை நமக்குப் போதித்து, நம்மீது தம் கண்ணை வைத்து அவரே நம்மை நடத்துவார்.
இன்னும் ஒரு காரியம். நாம் எப்போது அமர்ந்திருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும் என்ற ஞானத்தையும் அவரே நமக்கு அளிக்கின்றார்.
இப்படியொரு தேவன் நமக்கிருக்க நாம் ஏன் வாழ்வின் இயல்பான இடர்களைக் கண்டு துவண்டு போக வேண்டும்.
இப்போது சொல்லுங்கள் நாம் மெய்யாகவே பாக்கியவான்களல்லவா!
ஆகவே நாம் இவைகளெல்லாம் உணர்ந்து கர்த்தரை நோக்கி கூப்பிடுவோம். அவர் தருகிற மேலான ஆசீர்வாதங்களை இந்த ஓய்வு நாளில் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக…
ஆமென்.