Daily Manna 245

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? ஏசாயா 43 :19

எனக்கு அன்பானவர்களே!

புதியவைகளை வாழ்வில் நடப்பிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நம்முடைய கர்த்தர் சகலவற்றையும் புதிதாக்குகிறவர். நம்முடைய ஆண்டவர் செய்கிற ஒவ்வொரு காரியமும் எப்போதும் புதிதாகவும், ஆச்சரியமானதாகவும் இருக்கும்.

ஆகவே தான் அவர் சொல்லுகிறார் நான் வனாந்தரத்தில் வழியையும் அவாந்தரவெளியில் ஆறுகளையும் உண்டாக்குவேன். பொதுவாக வனாந்தரத்தினுடைய மிகக் கொடுமையான காரியம் என்னவென்றால் வழியை ஓரிடத்திலும் நாம் காண முடியாது.

எங்கு பார்த்தாலும் காடுகளாகவே இருக்கும். நீங்கள் வனாந்தரத்திற்குள்ளே நுழைந்து விட்டீர்கள் என்றால் எவ்வழியில் வந்தோம், எந்த பக்கமாக செல்ல வேண்டும் என்று நீங்கள் பிரயாசப்பட்டாலும், உங்களால் அறியவே முடியாது.

அது தான் வனாந்தரத்தின் பரிதாபமான நிலைமை. அதைப்போல கடந்த மாதம் உங்கள் வாழ்க்கை ஒரு வனாந்தரமாக இருந்திருக்கலாம். இந்த நாளிலே அதே வனாந்தரத்தில் கர்த்தர் உங்களுக்காக ஒரு வழியை உருவாக்குவார்.

கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள். அவ்வண்ணமாக கர்த்தர் உங்களுக்கு கூறுகிற மற்றொரு வார்த்தை அவாந்திர வெளியிலே ஆறுகளை உண்டாக்குவேன்.

அவாந்தரவெளி என்றால் பாலைவனம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி பாலைவனம் என்றாலே தண்ணீரற்ற வறண்ட பகுதி. ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லு கிறார் அந்த வனாந்தரத்திலும் அவரால் உங்களுக்காக ஆறுகளை உண்டாக்க முடியும்.

அன்றைக்கு ஏதோம் வனாந்தரத்தில் வாய்க்கால்களை வெட்ட வைத்து
(2 ராஜாக்கள் 3:8,17) ராஜாக்கள் முதல் மிருக ஜீவன்கள் வரைக்குத் தண்ணீர் பருக வைத்த நம்முடைய கர்த்தர், இன்றைக்கும் ஜீவிக்கிறார்.

அவரே உங்கள் வனாந்தரத்தை தண்ணீர் தடாகமாக மாற்றி, உங்கள் வாழ்க்கையில் அதிசயங்களை செய்து உங்களை உயர்த்தி நீங்கள் மகிழ்ந்து இருக்கும் படி செய்ய போகிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஏசாயா: 42 :9.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
ஏசாயா: 43 :19.

நான் படைக்கப் போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பது போல, உங்கள் சந்ததியும் உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா :66:22.

பிரியமானவர்களே,

கர்த்தர் வாக்கு மாறாதவராக, தம்மை விசுவாசிக்கிற மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

உங்களுடைய வாழ்க்கையில் எவைகள் எல்லாம் முடிந்து போனது என்று நினைத்து நீங்கள் கலங்கிக் கொண்டு இருந்தீர்களோ அவைகளை கர்த்தர் உங்களுக்கு புதிதாக துவக்கப் போகிறார்.

இனி நடக்கவே நடக்காது என்று நீங்கள் முடிவு கட்டி, முற்றுப் புள்ளி வைத்தவைகளுக்கு, கர்த்தர் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறார்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி எல்லா வாசல்களும் மூடப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, “இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்’’
(வெளி 3:8) என்று சொன்னவர், உங்களுக்கு புதிய வாசலைத் திறக்கிறார்.

கர்த்தருடைய வார்த்தைக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள். இதுவரை உங்களை தோல்வியடையச் செய்து வந்த எல்லாவற்றிலும் இருந்தும் கர்த்தர் உங்களை விடுவித்து உங்கள் வாழ்வில் புதிய துவக்கத்தைக் கொடுக்க விரும்புகிறார்.

இதுவரை நீங்கள் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வந்த காரியங்களை கர்த்தர் உங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்கப் போகிறார். விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் கர்த்தரை மட்டுமே சார்ந்து தேவனை நோக்கி, பாருங்கள்.

கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்யப் போகிறார்.
இல்லாததை உருவாக்கப் போகிறார்
நம்முடைய தேவன் “இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவன்’’
(ரோமர் 4:17) என்று வேதாகமம் கூறுகிறது.

பிரியமானவர்களே,
உங்களுடைய வாழ்க்கையில் இதுவரை எனக்கு எந்த மூலதனமும் இல்லாமல் நான் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் இருக்கிறேனே, யார் என்னை கை தூக்கி விடுவார்,? யார் எனக்கு உதவி செய்வார் என்று கலக்கத்தின் மத்தியில் நீங்கள் இருக்கலாம்.

இன்றைக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை விசுவாசியுங்கள், ஒன்றுமில்லாமையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்கின தேவன் வெறுமையாக இருக்கும் உங்கள் வாழ்க்கையையும் உருவாக்க வல்லவராக இருக்கிறார்.

கர்த்தர் தாமே இந்த புதிய மாதத்திலும் புதிய ஆசீர்வாதமான காரியங்களை நம் வாழ்வில் செய்து நம்மை காத்து வழிநடத்துவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *