உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. எரே:5:25
அன்பானவர்களே!
ஒருவன் இன்னொருவனிடம் கேட்டான், “உன் வாழ்க்கையில் உன்னுடைய மிகப்பெரிய எதிரியாக யாரைக் கருதுகிறாய்?” என்று. “எனக்கு நானேதான் மிகப்பெரிய எதிரி” என்று மற்றவன் பதிலளித்தான். இது ஒரு உண்மையானக் கூற்று. ஒரு மனிதனுக்கு வெளியில் பலவிதங்களில் பல எதிரிகளும், விரோதிகளும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அவனுடைய மிகப்பெரிய எதிரி அவனுக்குள்ளேயேத்தான் இருக்கிறான்.
மனிதனுக்கு பிறரால் வரும் தீங்குகளைவிட அவனால் அவனுக்கு ஏற்படும் தீங்குகள் தான் மிக அதிகம். சமுதாயத்தில் பிறரால் வீழ்கின்றவர்களைவிட தங்களால் வீழ்கின்றவர்களே அதிகம்.
ஆம், இயற்கையாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுக்கு அதிகக் கேடானவைகளை செய்கின்ற ஒரு தீய எதிரி இருக்கிறான். இவனைத்தான் பாவ மனிதன் என்று வேதம் சொல்கின்றது. இவனை உள்ளான மனிதன் என்றும் சொல்லலாம்.
இந்த பாவமனிதன் பாவம் செய்கின்ற இயற்கைத் தன்மை உடையவன். இவனிடத்திலிருந்து தான் தவறான குணங்கள், ஆகாத சுபாவங்கள், தப்பிதமான சிந்தனைகள், கேடான ஆசைகள், தீமையான செயல்பாடுகள், பொல்லாத நோக்கங்கள் போன்றவைகள் உருவாகின்றன. இவைகள்தான் ஒரு மனிதனுடைய சமாதானத்திற்கும், சந்தோஷத்திற்கும், நலமான வாழ்க்கைக்கும் எதிரிகளாக செயல்படுகின்றன.
தவறானவைகளை சிந்திக்கவும், செய்யவும் தூண்டுகின்ற ஒரு தீய உந்துவிசையின் பெயர்தான் பாவமனிதன். இந்தத் தீமையான தூண்டு விசை இயற்கையாக எல்லா மனிதர்களுக்குள்ளும் செயல்படுகிறது. எனவேதான் மனிதனிடம் சராசரியாக நற்குணங்களைவிடத் தீயச்செயல்களையும், நல்ல எண்ணங்களைவிட தீய எண்ணங்களையுமே அதிகமாகப் பார்க்க முடிகின்றது.
அன்பு, தாழ்மை, பொறுமை, தயவு, நற்குணம், சாந்தம், இச்சையடக்கம், இரக்கம், தூய்மை போன்றவைகள் தான் ஒரு மனிதனுக்கு தேவையானவையும் மிகுந்த ஆசீர்வாதமுமானவையுமாகும். ஆனால் பெரும்பாலும் மனிதனிடம் வெருப்பு, விரோதம், கோபம், கசப்பு, பேராசை, பெருமை, வைராக்கியம், தீய ஆசைகள், தீய எண்ணங்கள் ஆகியவற்றையேப் பார்க்க முடிகின்றன.
இயற்கையான மனித இருதயம் கடவுளின் வழிகளுக்கு எதிராகவும், தேவ நியாயங்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதால் வாழ்வில் கடவுளின் அருளும், ஆசீர்வாதமும் இல்லாமல் போகிறது. எனவேதான் பணமுள்ளவன், பணமில்லாதவன், படித்தவன், படிக்காதவன் என்ற வேறுபாடின்றி சராசரியாக எல்லா மனிதர்களிடமும் பலவித வேதனையான காரியங்களைப் பார்க்க முடிகிறது.
தவறாக யோசிக்கவும், தவறாகச் செயல்படவும், தவறாக முடிவெடுக்கவும் தூண்டுகின்ற இந்த உள்ளான பாவமனிதன் அழிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதன் தூய்மையான வழிகளில் நடந்து வாழ்க்கையில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் காணமுடியும். ஆனால் பாவமனிதன் என்ற தீய வல்லமையை அழிக்கும் சக்தி மனிதனுக்குக் கிடையாது.
கடவுள் தான் இதற்கு உதவி செய்ய முடியும். இதற்காகவே கடவுள் இயேசு என்ற பெயரில் மானிடராக இந்த பூமிக்கு வந்தார். தம்மை பாவ நிவாரண பலியாக சிலுவையில் கொடுத்ததின் முலமாக மனிதனுக்குள்ளிருக்கும் பாவம் அழிக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தினார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்ற பாவமாகிய அரக்கனை அழித்து மனிதனுக்கு அமைதி, சந்தோஷம், நம்பிக்கை, பரிசுத்தம், நிறைவு, நித்திய வாழ்வு ஆகியவற்றை தருவதற்கே இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது, எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது, எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
ஏசா :59:12
எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
ரோமர் :4:7
கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்.
ஏசா: 1:18
பிரியமானவர்களே,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை நம்முடைய இருதயத்திற்குள் அனுமதிக்கும் போதுதான், அவர் நமக்குள் வந்து பாவத்தை அழிக்க முடியும். எனவேதான் “பிசாசின் கிரியைகளை அழிக்க இயேசு வெளிப்பட்டார்” என்று வேதம் சொல்கிறது.
பிரியமானவர்களே, நீங்களும் உங்களின் உள்நிலையை உணர்ந்து தவறுகளை உருவாக்கும் பாவ இயற்கையை அழிப்பதற்காக இயேசுவை உங்களுக்குள் ஏற்றுக் கொண்டால், ஆச்சரியமும், மகிழ்ச்சியுமான விளைவுகளைக் காண்பீர்கள். அப்போது பாவம் வெளியேறும். அப்போது உங்களுக்குள் கடவுளின் உறவையும் அன்பையும் அனுபவிக்க முடியும். அதன் விளைவாக நீங்கள் நற்குணங்களும், நற்பண்புகளும் உடையவர்களாகி பிறருக்கும் ஆசீர்வாதமானவர்களாக மாறுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் உள்ளான மாற்றம் ஏற்பட்டு, கடவுளின் கருணையினால் சகல ஆசீர்வாதங்களையும் காண கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஆமென்