Daily Manna 265

உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து நீதிமொழிகள்: 3 :5

எனக்கு அன்பானவர்களே!

நம்பிக்கையின் நங்கூரமாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒருவர் பாலைவனம் போன்றதோர் இடத்தை தாண்டி தன் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. ஊரைச் சுற்றி ஒரே வறட்சி நிலவி இருந்தது.

அப்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுக்கவே தண்ணீரை தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்படியோர் வறட்சி நிலவி இருந்தது.

அப்போது தூரத்தில் ஒருவருடைய நிலம் மட்டும் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.உடனே அந்த வழிப்போக்கன் அங்கு சென்று கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டு இருந்தவனிடம் தண்ணீர் கேட்டு பருகினார்.

உடனே அந்த வழிப்போக்கன் நன்றி என்று கூறி விட்டு, ஊரே வறட்சியில் இருக்கும் போது உன்னுடைய நிலம் மட்டும் இப்படி பச்சை பசேல் என்று இருக்கிறது என்றால் உனக்கு இறைவனின் கொடை அதிகம் இருக்கிறது என்று சொன்னான்.

உடனே அந்த விவசாயி ஐயா, இந்த நிலமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊரைப் போன்று வறண்டு தான் கிடந்தது. என்னுடைய கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும், இறைவனின் அருளால் தான் இன்று இப்படி காட்சி அளிக்கிறது என்று பணிவாக கூறினான்.

மேலும் ஐயா நான் இந்த நிலத்தை பதபடுத்திய போது இந்த நிலம் மட்டும் பதப்படவில்லை, உடன் என் மனமும் பக்குவப்பட்டது என்றான்.

இது போன்ற விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும், இறைவனின் அருளும் இருந்தால் நாம் ஈடுபடும் காரியமனைத்திலும், மட்டும் இன்றி வாழ்விலும் வெற்றி பெறலாம் என்று அந்த வழிபோக்கன் புரிந்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு கடந்து சென்றான்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
எரேமியா: 17:7

நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.
சங்கீதம்: 4 :5.

கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
சங்கீதம் :71:5.

பிரியமானவர்களே,

நம்பிக்கையற்ற உலகில் ஒவ்வொரு நாளும் தேவ கிருபையினால் வாழ்ந்து வருகிறோம். பலதரப்பட்ட போராட்டங்கள், நெருக்கங்கள், பொருளாதார பிரச்சினைகள் என பலவிதங்களில் மக்கள் மிகுந்த கஷ்டத்தின் வழியாய் கடந்து போகிறார்கள்.

ஒரு மனிதன் உயர்வதற்கு விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பலவற்றை உள்ளடக்கியதாக இருந்தாலும், அவை எல்லாமே தன்னம்பிக்கை என்ற அடித்தளத்திலிருந்து தான் உருவாகின்றன.

தன்னம்பிக்கை என்பது மனிதன் வாழ்வில் வெற்றி பெற மிக அவசியமான ஒன்றாகும். நம் வாழ்வில் என்ன தான் பல ஏமாற்றங்கள், தோல்விகள், சோகங்கள், துரோகங்களை எதிர் கொண்டாலும் எந்த சூழ்நிலையிலும் தன்னமிக்கையை மட்டும் ஒரு போதும் இழக்க கூடாது.

புற்றுநோயை குணப்படுத்தப் பயன்படும் ரேடியத்தைக் கண்டுப்பிடித்தவர் மேடம் கியூரி.இதைக் கண்டுப்பிடிக்கிற முயற்சியில் தளர்ச்சியும்,சோர்வும் ஏற்படும் அளவுக்கு சிக்கல்களும், சிரமங்களும் ,
இடர்பாடுகளும் இருந்தன.

ஆனாலும் மேடம் கியூரி மிகுந்த தன்னம்பிக்கையோடு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து ரேடியத்தைக் கண்டுபிடித்தார்.பல ஆண்டு கால ஆராய்ச்சியில் எந்த ஒரு காலகட்டத்திலும் அவர் தன்னம்பிக்கையை கை விடவில்லை.

இந்த கண்டுபிடிப்பு தனிப்பட்ட முறையில் அவருக்கு மட்டுமல்ல விஞ்ஞான உலகிற்கு கிடைத்த வெற்றியாக மாறியது.
இக்கண்டுப்பிடிப்புக்காக அவர் நோபல் பரிசும் பெற்றார்.

உங்கள் வாழ்க்கையும் பல நெருக்கம் நிறைந்ததாக காணப்படும் என்றால் கர்த்தருக்குள் உங்களைத் திடப்படுத்திக் கொண்டு ஆண்டவர் மேல் நம்பிக்கையாயிருங்கள்.

‘‘அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்’’.
சங்கீதம் 112:7,
‘‘நான் நம்புகிறது அவராலே வரும்’’ சங்கீதம்: 62:5
என தாவீது கூறுவது போல, ‘‘நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது’’

நீதி.23:18 சொல்வது போல, ஆண்டவரை மனப்பூர்வமாய் நம்பி, தொடர்ந்து செயல்பட்டால் வெற்றிகள் நம்மை தேடி வரும்.

ஆம், இத்தகைய நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *