தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்க மாட்டான். லூக்கா :14:27.
எனக்கு அன்பானவர்களே!
தேவ சித்தத்திற்கு நம்மை தகுதிப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
சிலுவை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஆம், சிலுவை என்றால் பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் என்றெல்லாம் அநேகர் சொல்வதுண்டு. ஆனால், அது மட்டுமல்ல. நாம் செய்ய வேண்டிய கடமைகளை நேர்த்தியாய் செய்வதும் சிலுவையே.
இந்தியாவை சேர்ந்த ஜேசுதாசன் என்பவரும், இங்கிலாந்தை சேர்ந்த பேட்டன் ஆகிய இருவரும் இங்கிலாந்தில் மருத்துவம் படிக்கையில் கூடி ஜெபம் பண்ணுவார்கள்.
அவர்கள் படிப்பு முடிந்தவுடன், நான் இந்தியாவிற்கு திரும்பி ஊழியஞ் செய்ய விரும்புகிறேன் என்று ஜேசுதாசன் சொன்னார். அப்போது பேட்டன் தானும் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்தார்.
பின்பு தனக்கு உண்டான அனைத்து சொத்துகளையும் விற்றார். தனக்கு அன்பான உறவுகளையும் விட்டுப் பிரிந்து, இயேசுவுக்காக தன்னை அர்ப்பணித்து ஜேசுதாசனுடன் இந்தியாவுக்கு வந்தார். அவர்கள் ஊழியம் செய்வது தான் தேவசித்தம் என்பதை அறிந்தனர்.
ஆனால், எந்த இடத்தில் ஊழியஞ் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் உண்மையாகவே தமது சித்தத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார்களா? என்பதை அறிய தேவன் அவர்களைச் சோதித்தார்.
அவர்கள் திபெத்தில் சாது சுந்தர்சிங் மாதிரி ஊழியஞ் செய்யலாம் என்று முயற்சித்தார்கள். ஆனால், முயற்சி தோல்வியானது. வட இந்தியாவில் எங்கேயாவது செய்யலாம் என்று பார்த்தார்கள் ஒரு இடமும் அமையவில்லை.
கடைசியாக, இரண்டு பேரும் தீர்மானித்தது என்னவென்றால், இரயிலில் பிரயாணப்பட்டு டெல்லியிலிருந்து இந்தியா முழுவதும் சுற்றி வருவோம். எந்த இடத்தை தேவன் காட்டுகிறாரோ, அந்த இடத்தில் நாம் மருத்துவ ஊழியத்தை ஆரம்பிப்போம் என்று சொல்லி, உமக்கு சித்தமான இடத்தைக் காட்டும் என்று ஜெபித்து தங்களை ஒப்புக் கொடுத்தார்கள்.
வட இந்தியாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்தனர். விசாகப்பட்டினம் வழியாக சென்னைக்கு வந்தார்கள். சென்னையிலிருந்து தெற்கே போகும் போது திருப்பத்தூர் அருகே இரயில் விபத்திற்குள்ளானது. விபத்திலே கை, கால்களை இழந்தவர்கள் எல்லாரும் மருத்துவ உதவிக்காக அலறினார்கள்.
உடனே ஜேசுதாசனும் பேட்டனும் ஒரு மருத்துவ முகாம் மாதிரி ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணி, அவர்களுக்கு சிகிச்சையை அளித்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களோடு பேசினார். “இது தான் நான் உங்களுக்கு வைத்த இடம் இதிலே என் ஊழியத்தை ஆரம்பியுங்கள்” என்று.
அப்போது தானே திருப்பத்தூரிலே அவர்கள் தங்கள் ஊழியத்தை ஆரம்பித்தார்கள்.
வேதம் சொல்லுகிறது, யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
லூக்கா 14:26.என்று
பேட்டன என்பவர் ஆண்டவருக்கு நல்ல சீடனாய் மாறினார்.
திருப்பத்தூரிலே ஒரு பெரிய ஆஸ்பத்திரி ஆரம்பிக்கப்பட்டு, அநேகம் பேருக்கு அங்கே சுவிசேஷம் சொல்லப்பட்டது.
ஆம், தேவனுடைய சித்தம் தாமதிக்கலாம். ஆனால் அதற்கு காத்திருப்பது தான் சிலுவையைச் சுமப்பதாகும்.
வேதத்தில் பார்ப்போம்,
தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு :10 :38.
அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்
மத்தேயு :16 :24.
அவர் தமக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரேயர்: 12 :2.
பிரியமானவர்களே,
நீங்கள் சுமக்க வேண்டிய சிலுவை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிலுவை என்றால் பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் என்றெல்லாம் அநேகர் சொல்வதுண்டு. ஆனால், அப்படி இல்லை. பாடுகள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு அம்சமாகும்.
கிறிஸ்துவுக்காக நாம் படும் பாடுகள் தான் நம்மைப் பரலோகத்திற்கு கொண்டு செல்லும் படிகளாகும். நமது மாம்சத்திற்காக நாம் படுகிற பாடுகள், அது ஒன்றுக்கும் உதவாது.
அது நம்முடைய மாம்சத்தை ஒடுக்குவதற்கும், கஷ்டப்படுவதற்கும் தானே ஒழிய ஆவியிலே நம்மை உயர்த்தாது. நம்மை பரலோகத்திற்குக் கொண்டு செல்லாது.
அந்த கஷ்டங்கள் சிலுவையல்ல; அது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஓர் அம்சமாகும்.நாம் சுமக்க வேண்டிய சிலுவை என்னவென்றால், அதை நாம் கிறிஸ்துவிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
அவர் சிலுவையில் அறையப்படும் முன்னதாக சீஷர்களோடு இராப்போஜனத்தை முடித்த பின்பு, அவர் கெத்செமனேயிலே தன்னை சிலுவைக்கு ஆயத்தம் பண்ணினதை நாம் நினைக்கும் பொழுது தான் சிலுவையென்றால் என்னவென்பதை நாம் கண்டு கொள்ள முடியும்.
முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார் மத்.26:37-39.
தன் சித்தம் வேறொன்றாய் இருக்க,பிதாவின் சித்தம் அவரை சிலுவையில் அறைவதாய் இருக்கிறது. இரண்டு சித்தங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருந்தபடியினால், இயேசுவானவர் மூன்று தரம் அதே வார்த்தைகளைச் சொல்லி சொல்லி ஜெபித்தார்.
குமாரன் கேட்கும் முன்பதாகவே எல்லாவற்றையும் அருளிச் செய்த பிதாவானவர் இந்த ஒரு இடத்தில் மட்டும் தன்னுடைய சித்தம் தான் நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, குமாரனின் சித்தத்திற்கு அவர் செவி கொடுக்கவில்லை.
அதை அனுமதிக்கவே இல்லை.
இயேசுவும் பிதாவின் சித்தத்தைத் தெளிவாக தெரிந்தபடியால் தன்னை சிலுவைக்கு ஒப்புக் கொடுத்தார்.
ஆகவே நாம் சுமக்க வேண்டிய சிலுவை என்னவென்றால், நம் இஷ்டம், நம் ஆசைகள், நம்முடைய சுயசித்தத்தை விட்டு விட்டு தேவனுடைய சித்தத்தையே ஒவ்வொரு நாளும் செய்வது தான் நம்முடைய சிலுவையாகும்
நம்மை ஒவ்வொரு நாளும் வனைபவரும், வடிவமைப்பதும் நம் இயேசு கிறிஸ்துவே என்பதை உணர்ந்து கர்த்தரின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து அவரின் சீஷர்களாய் மாறுவோம்.
கர்த்தர் தாமே இந்த ஓய்வு நாளில் மேலான நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் தந்து வழிநடத்துவாராக.
ஆமென்.