ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார். உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதி செய்கிற தேவன். ஏசாயா :30::18
எனக்கு அன்பானவர்களே!
மனதுருக்கமுள்ள இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒருமுறை ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் தனது அதிகாரத்தை இழந்த போது, சகஊழியர்களுடன் அவரும் சிறையிலடைக்கப் பட்டார்.
அங்கு ஒருவர் அவருடனே மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட, தன்னை ஒருநாள் இந்த சிறையிலிருந்து தேவன் விடுவிப்பார் என்று விசுவாசமாயிருந்தார்.
ஒரு ஆண்டு காலம் அவர் காத்திருந்தார். அதன் பிறகு ஒருநாள் அவர் தனது பொறுமையை இழந்தவராய் அழுது புலம்பினார். “நான் ஒருவருட காலமாய் விடுதலைக்காக காத்திருக்கிறேன்.
நான் நிரபராதி. ஏன் அவர்கள் என்னை சிறையில் அடைத்தனர்? தேவன் எங்கிருக்கிறார்? அவர் நீதியுள்ள நியாயாதிபதி அல்லவா ? என்று ஒரு பைத்தியக்காரனைப்போல புலம்பிக் கொண்டிருந்தார் .
அந்த சமயத்தில் அங்கிருந்த கண்காணிப்பாளர் அவரை “உடனே அழைத்து, வாருங்கள் என்றார். ஒருவர் அவரிடம் சென்று சில பெரிய மனிதர்கள் உங்களை சந்திக்க காத்திருக்கின்றனர்.” என்று கூறினார்.
ரிச்சர்டுக்கு விருப்பமில்லை என்றாலும் தயக்கத்துடனே அங்கு சென்றார். அங்கே அவருடைய பழைய நண்பர்கள் நின்றிருந்தனர். அவர்கள், “நீங்கள் என்ன குற்றம் செய்திருந்தாலும், வந்திருக்கும் புதிய ஜனாதிபதி அவைகளை எல்லாம் மன்னித்து உங்களை விடுதலையாக்கி விட்டார்” என்று கூறினார்கள்.
அவர் காதில் விழுந்த அந்த விஷயத்தை அவரால் நம்ப முடியவில்லை. அவர் அழுது கொண்டே, “மனதுருக்கமும், இரக்கமும் நிறைந்த அன்பான தேவன் ஒருவர் பரலோகத்தில் இருக்கிறார்.” என் வேதனையை பார்த்தார் என்று தேவனை துதித்துக் கொண்டேயிருந்தார்.
எனக்கு அன்பான சகோதரனே, சகோதரியே,
இன்றைக்கு நீங்கள் உங்கள் வாழ்வில் நம்பிக்கை இழந்த நிலையிலிருக்கிறீர்களா? “கர்த்தர் உருக்கமும், இரக்கமும் நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்”
சங்கீதம்:103: 8. இந்த இரக்கம் நிறைந்த தேவன் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய சித்தமாயிருக்கிறார் என்பதை அவரிடத்தில் கேளுங்கள்.
அவருடைய மனதுருக்கம் அநேகருடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. தாழ்விலிருந்தவர்களை உயர்த்தியிருக்கிறது. நம்பிக்கையிழந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் தேவன் அவர்.
முடிவில்லாத அவருடைய இரக்கமும் மனதுருக்கமும், நிச்சயமாகவே உங்கள் வாழ்வில் அற்புதங்ளை நடப்பிக்கும்.
வேதத்தில் பார்ப்போம்,
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன்; அவர் அவன் மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக் கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
ஏசாயா: 55 :7.
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னை விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா :54 :10.
ஆனாலும் உங்களுக்கு இரங்கும் படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
ஏசாயா :30 :18.
பிரியமானவர்களே,
கர்த்தர் அன்பும் மனதுருக்கமும் கிருபையும் நிறைந்த தேவன். வேதத்தை நாம் எத்தனை முறை வாசித்தாலும் ஒரு காரியத்தை நாம் திரும்ப திரும்ப காண முடிகிறது. அது தேவன் ஜனங்கள் மீது வைத்திருந்த மனதுருக்கம்.
‘தேவனிடத்திலிருந்து ஒரு அற்புதத்தை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பீர்களானால் முதலாவது தேவனுடைய மனதுருக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.
மத்தேயு 9: 35,36 கூறுகிறது, “இயேசு திரளான ஜனங்களைக் கண்ட பொழுது, அவர்கள் மேல் மனதுருகி, சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.”
“இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து, ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாள் தங்கியிருந்து, சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்”
மத்தேயு: 15:32 என்று கூறினார்.
இயேசு கிறிஸ்து தனது வாழ்க்கையில் கண்ணீர் சிந்திய அநேகரை சந்தித்த போதிலும், இப்படி கண்ணீர் சிந்துகின்ற ஒரு தாயை சந்தித்த பொழுது தாமாகவே முன் சென்று அவளை பார்த்து மனதுருகி அழாதே என்றார்.
எத்தனை பெரிய ஆச்சரியம் இயேசுவிடம் யாரும் இந்த மரித்து போன மகனை எழுப்பும் படி கேட்கவுமில்லை, மன்றாடவுமில்லை. அவராகவே சென்று பாடையை தொட்டார். தொட்டதும் அதை சுமந்தவர்கள் நின்றார்கள்.
அப்பொழுது அவர், வாலிபனே எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். லூக்கா:7:12-15 என்று பார்க்கிறோம்.
பிரியமானவர்களே,
உங்கள் சூழ்நிலையை யாரும் காணவில்லை என்று கலங்காதிருங்கள். எந்த சூழ்நிலையாயினும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்திருக்கும் இயேசுவையே நோக்கிப் பாருங்கள்.
நமது ஆண்டவர் மனதுருக்கமுள்ள தேவன். இயேசு உங்கள் வேதனையை காண்கிறார். அன்று அந்த விதவைக்கு அந்த மகன் அவசியமாயிருந்தான்.சிறையில் இருந்த ஜனாதிபதிக்கு விடுதலை அவசியமாயிருந்தது.
இன்று உங்கள் அவசியம் என்னவென்று நமது ஆண்டவர் நன்கு அறிவார். உங்கள் கண்ணீரையும் கவலைகளையும் காண்கிற அன்பான தேவன் ஒருவர் உண்டு.
நம் மேல் மனதுருகி நமக்கு விடுதலையை அளிக்கிற இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்பதை உணர்ந்து ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.