மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27:21
எனக்கு அன்பானவர்களே!
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
இந்நாட்களில் சோதனைகள் பல ரூபங்களில் நம்மைத் தாக்க நேரலாம்; வியாதியாகவோ, பண கஷ்டமாகவோ, சபலமாகவோ, துன்புறுத்தலின் வடிவிலோ நம்மைத் தாக்கலாம்.
ஆனால் ஒன்றை மறவாதீர்கள் உங்களுக்கு வரும் சோதனைக் களங்கள் எல்லாம், உங்களுக்கு சாதனைத் தளங்களே! நீங்கள்
சோதனைகளை தவிர்க்க நினைத்தால் பல சாதனைகளும் தவிர்க்கப்படும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இந்த உலகத்தால் எத்தனை விதமான சோதனைகள் உண்டாயிருந்தன, எந்த ஒரு சோதனையையும் தவிர்க்காமல் அத்தனையும் “ஆண்டவருடைய வார்த்தையினாலே” அவைகளை எதிர்கொண்டு ஜெயித்தார்.
நீங்கள் வாழ்கின்ற இடத்தில் வருகின்ற எந்த ஒரு சோதனையையும், “தேவனுடைய வார்த்தையை கொண்டு” எதிர் கொள்ளுங்கள். ஆண்டவரின் வார்த்தை உயிர் உள்ளது.அது யுத்தம் செய்யும்.
அது வெற்றியும் பாதுகாப்பையும் கொண்டு வரும் . ஆண்டவரின் ஜீவனுள்ள வார்த்தை உங்களுடன் இருந்து உங்களை வெற்றி அடையச் செய்யும்.
வேதத்தில் பார்ப்போம்,
மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
1 கொரிந்தியர்: 10:13.
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
யாக்கோபு:1:12.
வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குக் புடமும் சோதனை: மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
நீதிமொழிகள்: 27:21
பிரியமானவர்களே,
இந்த உலகில் நல்லவர்களாக வாழ நினைப்பவர்களுக்கு அநேக சோதனைகள் வருவது இயல்பு தான். ஆனால் அவற்றில் நாம் எவ்வாறு பொறுமையுடன் கையாளுகிறோம் என்பதை ஆண்டவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் “சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்’ என்றார். நாம் நம்முடைய வாழ்வில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் ஆண்டவர் நம்மை கைவிடமாட்டார் அவற்றில் இருந்து நம்மை வெற்றி பெற உதவி செய்வார் என்று முழுமனதாய் விசுவாசிக்க வேண்டும் .
நாம் இன்றளவும் தாவீதைப் பற்றியும், தானியேலை பற்றியும், யோபுவை பற்றியும் நாம் பேசிக் கொண்டு இருப்பதற்கு காரணம் என்னவென்றால், அவர்கள் எதிர்கொண்ட சோதனைகளும், அதன் வழியே, தேவ பெலத்தோடு அவர்கள் படைத்த சாதனைகளும் தான்!
நாம் இந்த உலகில் வாழும் காலத்தில் அனைவரோடும் அன்பாகவும், சமாதானமாகவும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். அப்போது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பிரியமான பிள்ளைகளாக வாழ முடியும்.
அவ்வாறு வாழும் போது, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும்,நாம் அவைகளை எதிர் கொண்டு சிறப்பாக வெற்றி பெற கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
ஆமென்.