தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம்:46:1
அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
எத்தியோப்பியாவில் ஏழு மனிதர்கள் சேர்ந்து, ஒரு பன்னிரண்டு வயது சிறுமியை, காட்டுக்குள் கடத்திச் சென்று, துன்புறுத்தினர்.
அவளுடைய கூக்குரலைக் கேட்ட ஒரு சிறு சிங்கக் கூட்டம், ஓடி வந்து, கடத்தல்காரர்களைத் துரத்தி விட்டு, அவளைப் பாதுகாத்தது.
எத்தியோப்பியா காவல் துறையினர், ஏழு நாட்கள் கழித்து அவளைக் கண்டு பிடித்த போது, மூன்று கருப்பு பிடரி முடியைக் கொண்ட சிங்கங்கள், அவளைக் காவல் காத்துக் கொண்டிருந்தன. காவல் துறையினரைக் கண்ட சிங்கங்கள், அவளை அவர்களுக்கு ஒரு பரிசாக விட்டு விட்டு, ஓடி மறைந்தன. காவல் துறை சார்ஜென்ட் இதனை ஒரு பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.
ஆம், கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப் போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
நமக்கு பிரச்சினைகள் நேரிடும் சமயத்தில் துணையாக நமக்கிருக்கும் கர்த்தரை உறுதியாய் சார்ந்து கொள்வோம்.
ஆம்,கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
வேதத்தில் பார்ப்போம்,
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.
சங்கீதம்: 40:17
கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம் பண்ணியிருக்கும்.
சங்கீதம்: 94:17
யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
ஏசாயா:41:14
பிரியமானவர்களே,
இந்த இளம் பெண்ணிற்கு ஏற்பட்டதைப் போன்று வன்முறைகளும், தீமைகளும் நம்மை சுற்றிலும் மேற்கொள்ளலாம். நம்பிக்கையற்ற நிலையில் பயங்கரத்துக்குள் நம்மை கொண்டு செல்லலாம்.
உங்களுடைய நிலைமைகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், எல்லா வேளைகளிலும் கர்த்தரை நம்புங்கள். சோதனை, உபத்திரவங்கள் ஆண்டவருக்கு சித்தமில்லாமல் இது உங்களை அணுகுவதில்லை.
ஆண்டவரின் பிள்ளைகளுக்கு சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்பதைக் குறித்து எள்ளளவும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.
உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். அவர் வல்லமையுள்வர்.
சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர், நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
நம்முடைய வாழ்க்கையில் சுற்றிலும் சத்துருக்கள் சூழ்ந்திருந்தாலும், அல்லது சத்துருக்களை போன்ற சோதனைகள் நமக்கு சூழ்ந்திருக்கும் போதும் நமக்கு அடைக்கலமானவராகிய இயேசுவை சார்ந்து கொள்வோம்.
அவரே நமக்கு துணை நின்று, நம்மை விடுவிப்பார்.
நமக்கு துணை செய்கிற இயேசு கிறிஸ்து நம்மோடு இருக்கிறார் என்ற விசுவாச உறுதியில் ஒவ்வொரு நாளும் வாழ கர்த்தராகிய தேவன் நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.