ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். சங்கீதம் :86:9
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பெரிய மனிதர்கள் என்றால் யார்? இதற்கு பல அறிஞர்களும் பல விதமான கருத்துக்களைக் கூறி இருக்கிறார்கள்.
“உண்மையான பெரிய மனிதருக்குரிய முதல் அடையாளம் பணிவு”
என்று சொல்லுகிறார் ரஸ்கின் என்ற அறிஞர்.
யார் ஒருவர் தன்னைப் பற்றி மிதமிஞ்சி நினைத்துக் கொள்ளுகிறாரோ, அவருடைய வீழ்ச்சிக்கு அவரே காரணமாகிறார்.
இறை நம்பிக்கை குடியிருக்கும் உள்ளத்தில் பணிவு நிறைந்து இருக்கும். அது வெளிப்பட வேண்டிய விதத்தில் வெளிப்படும். அதே வேளையில் இறை நம்பிக்கையும், தற்பெருமையும் ஒரு போதும் ஒன்று சேர வாய்ப்பில்லை.
பழம் நிறைந்த மரங்கள் தலை தாழ்ந்து வளைந்து நெளிந்து இருக்கின்றன. இதுபோன்று நீ பெரியவன் என்று மதிக்கப்பட வேண்டும் என்றால், பணிவுடன் நடக்க வேண்டும் என்பது சான்றோரின் வாக்கு ஆகும்.
பணிவு என்பது அடிமையாக இருப்பதோ, சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதோ, காக்காய் பிடிப்பதோ, காலில் விழுவதோ, எதற்கெடுத்தாலும் ‘ஆமாம்’ என்று கூறுவதோ,எதற்கு எடுத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டிருப்பதோ, உடலை கூனிக் குறுகி வளைப்பதோ அல்ல என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘பணிவு’ என்பது நல்லோர்கள், பெரியோர்கள் ஆகியோரின் குணமாகும்.
வேதத்தில் பார்ப்போம்,
உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
2 நாளாகமம் :34:27.
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள்.
சங்கீதம் :95:6
அவர்கள் அவரைப் பணிந்து கொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து.
லூக்கா :24:52.
பிரியமானவர்களே,
பணிவு என்பது கனிவை உருவாக்கும். பணிவு என்பது பாசத்தை வளர்க்கும், பிளவை தவிர்க்கும். பிரிவை குறைக்கும்.
ஒருவரிடம் பணிவு இல்லாத போது அந்த இடத்தை தற்பெருமை ஆக்கிரமித்து விடுகிறது.
தற்பெருமை உள்ளவனிடம் துளிக்குக் கூட பணிவை எதிர்பார்க்க முடியாது. ஒன்று இருந்தால் மற்றொன்று விலகி போய் விடும்.
‘பணிவு’ என்பது நல்லோர்கள், பெரியோர்கள் ஆகியோரின் குணமாகும். ‘தற்பெருமை’ என்பது சாத்தானின் தனிப்பெரும் நடவடிக்கையும், சர்வாதிகாரிகளின் போக்கும் ஆகும்.
பணிவு என்பது உடலில் வெளிப்படும் மாற்றமோ, உடல் அசைவோ, உடலில் தோன்றும் நடிப்போ கிடையாது. அது உள்ளத்திலிருந்து ஏற்படும் தன்னடக்கம், நாவடக்கம், கையடக்கம் ஆகியவை ஆகும்.
மேலும் பிறரை புண்படுத்தாமலும், மற்றவரை புரிந்து, மதித்து நடப்பதுமே பணிவு.
பணிவு என்பது இழிவோ, கோழைத்தனமோ அல்ல. அது உயர்வு தரும் அரும்பெரும் குணம்.
இறைவனுக்காக மற்றவர்களிடம் பணிந்து நடக்கும் போது வானமே குனிந்து நமக்கு குடை பிடிக்கும்.
ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நம்மோடு இருக்க வேண்டுமானால் நாம் பணிவு உள்ளவர்களாய் வாழ ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வோம்,
கர்த்தர் தாமே இத்தகைய நல்ல குணத்தை தந்து நம்மை வழிநடத்திக் காப்பாராக.
ஆமென்.