எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். நீதிமொழிகள்: 1:33.
எனக்கு அன்பானவர்களே!
மன அமைதியை அளிப்பவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை ஒரு விவசாயி தனது கைக்கடிகாரத்தை பெரிய வைக்கோல் போரில் தொலைத்து விட்டார்.அது சாதாரண கடிகாரம் அல்ல.ஏனெனில் அது அவருக்கு ஒரு உணர்வு பூர்வமான மதிப்பைக் கொண்டிருந்தது.
நீண்ட நேரம் வைக்கோலில் தேடிய பிறகும் அவரால் கண்டுபிடிக்க முடியாமல் களைத்துப் போனார். எனவே கொட்டகையின் வெளியே விளையாடும் குழந்தைகளின் உதவியை நாடினார்.
கடிகாரத்தைக் கண்டுபிடிக்கும் குழந்தைக்கு பரிசு கிடைக்கும் என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார். இதைக் கேட்டு, குழந்தைகள் வைக்கோலினுள் விரைந்து, சுற்றிலும் சென்றுத் தேடினர்.
வைக்கோல் முழுவதையும் தேடியும் குழந்தைகளால் கடிகாரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, விவசாயி தனது கைக்கடிகாரத்தைத் தேடுவதைக் கைவிட்டார்.
ஒரு சிறுவன் மட்டும் அவரிடம் சென்று, எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கேட்டான்.
விவசாயி அவனைப் பார்த்து, “ போய் தேடு” என்றுக் கூறினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அந்த சிறுவனின் விடாமுயற்சியையும், ஆச்சரியத்தையும் அவர் ரசித்தார். எனவே விவசாயி சிறுவனை வைக்கோலுக்குள் திருப்பி அனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து, பையன் கையில் கடிகாரத்துடன் வெளியே வந்தான்! ஆச்சரியப்பட்ட விவசாயி, எப்படிக் கண்டுபிடித்தாய்? என்றுக் கேட்டார்.
சிறுவன் சொன்னான் , “நான் எதுவும் செய்யவில்லை தரையில் அமைதியாக உட்கார்ந்து கடிகாரத்தின் ஒலியை கேட்பதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஒலி கேட்கும் திசையில் தேடினேன், கண்டுபிடித்தேன்” என்றான்.
விவசாயி மகிழ்ச்சி அடைந்து, சிறுவனுக்கு பரிசும் அளித்தார்.
ஒவ்வொரு நாளும் நம் மனதினுள் சில நிமிடங்கள் அமைதியாய் ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்தால்,அது நமது மனதை கூர்மை அடையச் செய்து, நம் வாழ்க்கையை நாம் எதிர்பார்க்கும் விதத்தில் அமைக்க உதவும்…!
வேதத்தில் பார்ப்போம்,
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
ஏசாயா 32:18
இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பி வந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.
எரேமியா 46:27
பின்பு அவர்கள் மிருதுச் செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப் பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.
சகரியா 1:11
பிரியமானவர்களே,
ஏன் இந்த அமைதியை அனைவரும் தேடுகிறார்கள்? அமைதி என்றால் என்ன? அப்படி என்ன உள்ளது இந்த அமைதியில்?
என்ன இருந்தால் இந்த அமைதி கிடைக்கும்?
பணம் இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா? பெரிய பதவியில் இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா? நிறைய படித்திருந்தால் இந்த அமைதி கிடைக்குமா ? நிறைய சொத்து சேர்த்து வைத்து இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா ? நிறைய குழந்தைகள் இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா? மேற்சொன்ன அனைத்தும் இருந்தும் பலர் இந்த அமைதியை தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அமைதி.. இந்த வார்த்தையை சில வருடங்கள் முன்பு வரை ஒரு சிலர் மட்டுமே எதிர்நோக்கி அதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்பொழுது உலகில் உள்ள பெரும்பாலானோர் இந்த அமைதியைத் தேடி, அதற்கான முயற்சியை எடுத்து வருகின்றனர்.
அமைதி என்பது அது ஆண்டவரால் கொடுக்கப்பட்ட ஒரு ஆனந்தமான தெய்வீக நிலை. தெய்வீக உணர்வு. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதை உணரவே முடியும்.
நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நாம் விரும்பியது நமக்கு கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் நாம் அமைதியுடன் இருக்க நம்மிடம் எதுவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. .
நம்முள் இருக்கும் ஆண்டவரின் அன்பை உணர்ந்தாலே போதும். பரிபூரண அமைதி கிடைக்கும். இன்றைய உலகம் சந்தித்து கொண்டு இருக்கும் பல பிரச்சினைகளில் ஒன்று அமைதியின்மை.
அமைதி என்பது உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்விலும் அவசியமானது. அந்த அமைதியை நாம் சட்டத்தால் உருவாக்க முடியாது.
ஆண்டவர் மேலுள்ள பய பக்தியாலும் அன்பாலும் மட்டுமே சாத்தியம் ஆகும்.
அமைதியை விரும்புவோர் ஆன்மிகத்தை நாடுகின்றனர்.
உடலின் மேல் உள்ள உணர்வை மாற்றி ஆன்மா மீது செலுத்தினால் அதனுடன் நாம் கலந்து அதுவாகவே மாறி ஆனந்த நிலைக்கு செல்கின்றோம்.
உலகில் பல மதங்கள் இருந்தாலும் அவை பின்பற்றுகின்ற வழிகள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தும் அமைதியையே அடிப்படையாக கொண்டுள்ளன.
அமைதியே ஆன்மிகத்தின் நோக்கமாகும்.
எனவே உலகில் அமைதி உருவாக வேண்டுமானால், ஆன்மிகம் அல்லது தெய்வ பக்தி அனைவருள்ளும் உருவாக வேண்டும்.
இறை நினைவும், இறை சிந்தனையும் இறை வடிவமாக உள்ள நம் ஆன்மாவுடன் நம்மை இணைத்து, நம் எண்ணங்களை, நல்ல சிந்தனைகளை தோற்றுவித்து நல்ல செயல்களுக்கு வழி வகுக்கும்.
இந்த அமைதியான வாழ்வை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் மட்டுமே தர இயலும். தேவனுக்கு செவிகொடுக்கிறவனே, ஆபத்திற்கு பயப்படாமல் அமைதியாயிருப்பான் என்று நீதிமொழிகள்: 1:33 -ல் வாசிக்கிறோம்.
ஆம், நமது வாழ்விலும் பல போராட்டங்கள் புயல் போல் நேரிடும் சமயத்தில், வைக்கோல் போர் அருகில் அமைதியாக அமர்ந்திருந்த சிறுவனைப் போல நாமும் கர்த்தருடைய பாதத்தில் அமைதியாய் அமர்ந்து அவர் வார்த்தைகளுக்கு செவி கொடுக்கும் போது, அச்சிறுவன் பெற்றுக் கொண்டது போல, நாமும் இழந்து போன அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்தகைய அமைதி நிறைந்த ஆசீர்வாதமான வாழ்வு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.