விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; யாக்கோபு: 5 :15.
எனக்கு அன்பானவர்களே,
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஊரில் வில்லியம் என்கிற ஒரு மனுஷன் வாழ்ந்து வந்தான். அவன் யாருக்குமே பயப்படாத ஒரு மனிதனாகவே இருந்தான்.
ஏனென்றால் அவன் தன் மாமிசத்தில் காணப்பட்ட பலத்தையே அதிகமாக நம்பி இருந்தான். அவனுடைய எண்ணமெல்லாம் தன்னுடைய பலத்திற்கு முன்பாக எதுவுமே நிற்க முடியாது என்பது தான்.
வேதம் சொல்லுகிறது, மாமிசத்தின் மேல் நம்பிக்கை வைக்காதிருங்கள் என்று கூறுகின்றது. ஏனென்றால் மாமிசத்தில் தோன்றும் எண்ணங்கள் அழிவை மாத்திரமே உண்டு பண்ணும்,
இதனால் எந்தவொரு காரியத்தையும் தன்னால் செய்ய முடியும் என்கிற ஒரு ஆணவத்துக்குள் தன்னுடைய வாழ்க்கையை நடத்தினான்.
நாட்கள் சென்றது அந்த ஊருக்கு ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் ஊழியம் செய்வதற்கு வந்தார். கர்த்தருடைய கிருபை அவருக்கு அந்த ஊரில் மிகுந்த மரியாதைக்குரிய மனுஷனாக மாற்றியது,
அதுமட்டுமல்லாமல் அவரின் அன்பான வார்த்தையை கேட்டு அனேகர் ஆண்டவரிடம் பயபக்திக்குரியவர்களாக மாறினர்.
இதைப் பார்த்த அந்த மனிதன் தான் மற்றவர்களை பயமுறுத்தினால் மாத்திரமே தன்னைகண்டு பயப்படுகிறார்கள்.
மற்றப்படி யாருமே தனக்கு முன்பாக உண்மையாக பயப்படுவதில்லை என்கிறதான ஒரு கோப உணர்வு அவனிடம் காணப்பட்டது.
இதினிமித்தம் அந்த ஊழியக்காரரிடம் மோதும் படியாக கடந்து சென்றான், தேவையில்லாமல் அவரிடம் சென்று பிரச்சனைகள் உருவாக்கினான். ஆனால் அவர் ஒன்றுமே செய்யவேயில்லை.
இதனால் இந்த வாலிபன் இன்னும் அவர் மேல் எரிச்சல் அடைந்து அவரை பலமாக அடித்து உதைத்து விட்டான். இதற்கும் அவர் கோபப்படாமல் அமைதியாக சென்று விட்டார்.
ஊழியரை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த அந்த வாலிபன் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்க அவரை பின் தொடர்ந்து சென்றார்.
அவனுக்கு அவருடைய செயல்கள் ஆச்சரியமாக இருந்தது எப்படியென்றால் அந்த ஊழியக்காரர் தன்னை அடித்த அந்த வாலிபனுக்காக முழங்கால் படியிட்டு அவன் மனந்திரும்பும்படியாக ஜெபித்துக் கொண்டிருந்தார்.
இத்தகைய காரியம் அந்த வாலிபனுக்கு கோழைத்தனமாக இருந்தது. ஆகவே மேலும் மேலும் அவன் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் இந்த வாலிபனுடைய மாமிசம் ஆயுதம் விழுந்து போனது என்று தான் சொல்ல வேண்டும் இந்த வாலிபனைப் படுத்தப் படுக்கையாக்கி விட்டது, இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. நாட்கள் செல்ல செல்ல பயம் ஏற்பட்டது.
அந்த ஊழியக்காரோ அவனை தேடிச் சென்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவருடைய ஜெபம் அந்த வாலிபனை மறுபடியும் பலத்தோடு எழும்ப செய்தது.
இதைப் பார்த்த அந்த வாலிபனுக்கு ஒரு காரியம் புரிந்தது, இந்த உலகத்தில் மனுஷனால் உருவாக்கப்பட்ட ஆயுதம் பற்கள் இல்லாத ஆயுதம் என்பதை புரிந்து கொண்டான்.
ஆகவே அவன் ஒரு முடிவு எடுத்தான் என்னவென்றால் அந்த ஊழியக்காரரிடம் சென்று அந்த அழியாத, ஆயுதத்தை பெற்றுக் கொள்வதற்கு ஆவிக்குரிய பயணத்தை மேற்கொண்டான்.
வேதத்தில் பார்ப்போம்,
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர் :12:12.
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
யாக்கோபு :5 :15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
2 நாளாகமம்: 7 :15.
பிரியமானவர்களே,
ஜெப வாழ்வு தரும் இன்பத்தை நாம் வேறெதிலுமே பெற்றுக் கொள்ள முடியாது. ஜெபம் என்பது இயல்பாகவே மனிதனுடன் இரண்டறக் கலந்துள்ள ஒரு தன்மையின் வெளிப்பாடு.
அது என்ன? தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதன், தேவனைத் தேடி உறவு கொள்கின்ற இயல்பான தன்மையை உன்னத ஈவாக கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறான். ஆகையால் தான் எல்லோரும் பிரார்த்தனை பண்ணுகிறோம்.
அது மாத்திரமல்ல, உண்மையான ஜெபம் ஒரு ஆவிக்குரிய யுத்தத்தையே கிளப்பி விடுமளவுக்கு வல்லமையுள்ளது என்பதை தானியேலின் அனுபவத்தில் காண்கிறோம்.
பெர்சிய நாட்டு அதிபதி என்று தானியேல் புத்தகத்தில் பார்க்கும் போது அது ஒரு மனிதன் அல்ல, மிகாவேல் தூதனோடு போராடியதால் இது ஒரு விழுந்து போன தூதனுடனான ஆவிக்குரிய யுத்தம் என்பது விளங்குகிறது.
நாம் ஜெபிக்கும் போது சாத்தானின் எல்லைகள் எவ்வளவாக நடு நடுங்குகிறது தெரியுமா? ஜெபம் அத்தனை வல்லமைமிக்கது.
ஆனால் நமது ஜெபம் எப்படிப்பட்டது என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.
ஜெபம் என்பது நாம் தேவனுடைய மனதை மாற்றுகின்ற நேரமல்ல; தேவனுடைய நினைவுக்கேற்றபடி நம்மை மாற்றுகின்ற நேரம் அது. அதற்கு அவசர ஜெபங்களும், அவிசுவாச ஜெபங்களும் ஒன்றுக்கும் உதவாது.
ஜெபம் தாழ்மை நிறைந்ததாக, சுயத்தை அகற்றி தேவநோக்கம் செயற்பட வாஞ்சிக்கும் ஒரு மனதுடன் ஏறெடுக்கப்பட வேண்டும்.
அப்படிப்பட்ட ஜெபத்தைத் தான் தானியேல் ஏறெடுத்தார். முழுவதுமாக தன்னைத் தாழ்த்தி தேவனிடத்தில் சென்றார். நாட்கள் தாமதித்தாலும் உரிய நேரத்தில் பதில் தானியேலுக்குக் கிடைத்தது.
ஜெபம் என்கிற ஒரு ஆயுதம் நம்மிடம் இருக்குமானால் இந்த உலகத்தில் எந்தவொரு ஆயுதமும் நமக்கு முன்பாக வாய்க்காமல் போய்விடும்.
ஆகவே இயேசுவை பின்பற்றுகிறேன் என்று சொல்லுகிறவர்கள் கத்தியையும், கம்பையும், பழிவாங்குதல், எரிச்சல், பொறாமை, மேட்டிமை போன்ற ஆயுதத்தை எடுக்காமல் இயேசுவின் சிலுவையை மாத்திரம் எடுத்துக் கொண்டு பயணம் செய்யுங்கள்.
அப்பொழுது மாத்திரமே அவர்கள் உங்களிடத்தில் மெய்யான தெய்வமாகிய இயேசு இருப்பதை காண்பார்கள்.
கர்த்தர் தாமே நம்மோடு கூட இருந்து நம் ஜெபத்திற்கு பதில் தந்து காத்து வழிநடத்துவாராக.
ஆமென் .