இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மத்: 4:15
அன்பானவர்களே!
ஒரு சமயம் அட்லாண்டிக் கடலில் ஒரு பயணக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஓர் இளைஞனுக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
காய்ச்சல் அதிகமாகிக் குளிரில் மிகவும் நடுங்க ஆரம்பித்தான். கப்பலில் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த கட்டிலில், கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். தாங்க முடியாத குளிராக இருந்ததால் முனகிக் கொண்டே படுத்திருந்தான்.
தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது போல உணர்ந்தான். கம்பளியால் மூடிப் படுத்திருந்ததால் அவனுக்கு அந்தக் குரல் என்ன சொல்கிறது என்பது விளங்காமல் இருந்தது.
சற்றே போர்வையை விலக்கிக் காதைத் தீட்டிக் கொண்டு அந்தக் குரல் என்ன சொல்கிறது என்பதைக் கேட்க முற்பட்டான். இப்போது அவனால் அந்தக் குரல் சொன்னவற்றைக் கேட்க முடிந்தது.
மெல்லிய, கெஞ்சும் குரலில் அந்த வார்த்தைகள் ஒலித்தன. யாரோ கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டார்கள். தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று..
இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் வருத்தமுற்றான். நானே உடல் நிலை சரியில்லாமல் படுத்துக் கிடக்கின்றேன்.
என்னால் எப்படிக் கடலில் விழுந்தவனைக் காப்பாற்ற முடியும்? இப்போது நான் என்ன செய்வது எழுந்து போய் யாரையாவது கூப்பிடலாம் என்றால், அதற்குக் கூட என்னிடம் தெம்பு இல்லையே என்று எண்ணி மிகவும் கவலைப்பட்டான்.
திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது அறையிலிருந்த சிறிய ஜன்னலைப் பார்த்தான். மெல்ல எழுந்து, அறையில் இருந்த லாந்தர் விளக்கு ஒன்றை ஏற்றினான். பிறகு அதை எடுத்துக் கொண்டு போய் அந்த ஜன்னலருகே வைத்துவிட்டு, தனது படுக்கையில் தூங்கிப் விட்டான்.
மறுநாள் சற்றே உடல்நிலை தேறிய நிலையில் கப்பலின் மேல் தளத்துக்கு வந்து கடலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அப்போது அங்கே ஒரு மனிதன் கப்பல் ஊழியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
நான் இருட்டில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்லத் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தேன். மிகவும் இருட்டாக இருந்ததால் வழியேதும் தெரியவில்லை. அப்போது இந்தக் கப்பலின் ஒரு ஜன்னலில் இருந்து ஒரு லாந்தர் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அதனால் மீட்புப் படகில் ரோந்து வந்து கொண்டிருந்த மாலுமிக்கு, அந்த வெளிச்சத்தின் மூலமாக எனது கைகள் தென்பட அவர் என்னைக் காப்பாற்றி இந்தக் கப்பலில் ஏற்றிவிட்டார். அந்த விளக்கு வெளிச்சம் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்ற சொல்ல, அந்த ஊழியர் மிகவும் வியப்படைந்தார்.
அதைவிட வியப்படைந்தது அந்த இளைஞன் தான். நடுங்கும் குளிரிலும் தான் செய்த ஒரு சிறிய செயல் ஒரு மனிதனின் உயிரையே காப்பாற்றியிருக்கின்றதே என்று எண்ணி எண்ணி வியந்து போனான்.
நான் என்னைப் பற்றி அற்பமாக நினைத்திருந்தேன். ஆனால் கடவுள் என் மூலம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். எனவே இனி நான் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
வேதத்தில் பார்ப்போம்,
செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும், அவன் இரக்கமும் மனஉருக்கமும்
நீதியுமுள்ளவன்.
சங்:112:4
இருளிலே நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது.
ஏசா: 9:2
கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப் போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப் போலவும் இருக்கும்.
ஏசா: 30:26
பிரியமானவர்களே!
மனுகுலத்தை மூடிய பாவ இருள் மனிதனை தேவசித்தம் செய்யவிடாமல், உண்மையான ஆண்டவரை தேடவிடாமல் இழுத்துப் போட்ட பாவம் என்னும் இருளை போக்கவே இந்த பூமிக்கு இயேசு கிறிஸ்து வந்தார்.
“உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. நீங்கள் யாராக இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும், என்ன இருள் உங்கள் வாழ்கையில் இருந்தாலும், உங்கள் இருளை வெளிச்சமாக்க இயேசு என்னும் மெய்யான ஒளி வல்லமையுள்ளதாயிருக்கிறது.
இயேசு என்னும் மெய்யான ஒளி,
உங்கள் வாழ்கையின் இருளை மாற்றி அவர் வெளிச்சமாக்குவார்.
இயேசு கிறிஸ்து ஒரு மதத்தை ஸ்தாபிக்கவோ, அல்லது மதத்தை பரப்பவோ இந்த உலகத்திற்கு வரவில்லை.
இயேசுவை ஏற்றுக்கொள்வது மதம் மாறுவதல்ல. உலகத்திற்கு ஒளியாக இருக்கிற இயேசுவை நம் வாழ்கையில் எற்றுக்கொள்ளும் போது, உலகத்தை உண்டாக்கின இறைவனே நம்மில் வந்து, நமக்குள் வாசம் பண்ணுகிறார்.
நம்முடைய வாழ்கையில் இருள் நீங்கி, வெளிச்சம் உண்டாகிறது. மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை ஒளியாக நம் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வோமாக.
ஆமென்.