உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். ரோமர்: 12 :9.
எனக்கு அன்பானவர்களே!
அன்பின் இறைவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நாட்டை ஆளும் மன்னர் ஒருவர், முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டு மாடிப் பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு
அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.
மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருந்தது.
மாவு இடிக்கும் போது வீடே அதிரும் இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.
முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்குமாறு உங்கள் மனைவிக்குச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.
” இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்?” என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.
மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.
” கீழே என்ன செய்கிறாய்?” என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.
” கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் ” என்றார் முல்லா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி “என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ் வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா?” என்று கோபத்தோடு கேட்டார்.
” மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.
பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.
” நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது தான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்றார் தளபதி.
உடனே முல்லா “நான் எப்போதுமே எல்லாருக்கும் நண்பன் தான் ” என்று கூறி விட்டு கடந்து சென்றார்.
வேதத்தில் பார்ப்போம்,
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்பு கூருவது போல் பிறனிலும் அன்பு கூருவாயாக; நான் கர்த்தர்.
லேவியராக:19 :18.
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான்: 13:35.
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
பிலிப்பியர்: 2:2.
பிரியமானவர்களே,
நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்று இவ்வுலகோர் நம்மை காண்பது எதை வைத்து என்றால், நாம் மற்றவரிடம் காட்டும் அன்பு தான்.
அன்பு ஏன் அவ்வளவு முக்கியம் என்பதை இயேசு இவ்வாறு விளக்கினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.” யோவான் 13:35;
15:12, 17 என்று கூறுகின்றார்.
கிறிஸ்துவை பின்பற்றுவது சகோதர சிநேகத்தைக் காண்பிப்பதும் நெருங்கிய தொடர்புடையது.
உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு வகையான உடையினாலோ அல்லது, பழக்கங்களாலோ அடையாளம் கண்டு கொள்ளப்படுவதில்லை.
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் கனிவும் மென்மையுமான அன்பினால் தான் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார்கள்.
ஆனால் இன்றைக்கு அநேகர் தீமைக்கு தீமையை சரிகட்டுவேன் என்று சொல்கிற பழிவாங்கும் ஆவியை உடையவர்களாக இருக்கிறார்கள்,பழி வாங்குதல் எனக்குறியது என்று தேவன் சொல்கிறார்.
தீமையை வெறுப்பதே கர்த்தருக்கு பயப்படும் பயம்.
நீதிமொழிகள்: 8-13.
ஒருவன் தீமையை வெறுக்காமல் தேவனுக்கு பிரியமாய் வாழ முடியாது.
நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்நம் ஏது?ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? தேவனிடத்தில் அன்பு கூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்.
தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
1 யோவான் 4:20.
என்று வேதம் நம்மைப் பார்த்து கேள்வி கேட்கிறது.
ஆகவே நாம் வாழ்கிற இந்த நாட்களை பிறருடன் அன்பாகவும், ஜக்கியமாகவும், சகோதர உணர்வுடனும் வாழுவோம்.
எப்பொழுது பிறரிடம் அன்பாக இருக்கிறோமோ அப்பொழுதிலிருந்தே நம்முடைய சீஷத்துவ பணி ஆரம்பமாகிறது என்பதை மனதில் கொண்டு ஒவ்வொரு நாட்களும் மனமகிழ்வோடு வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்
ஆமென்.