Daily Manna 292

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது. யாக்கோபு:1:17

எனக்கு அன்பானவர்களே,

நன்மைகளை தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு அழகிய கிராமத்தில் ஒரு விவசாயி தன் ஒரே மகனோடு வாழ்ந்து வந்தார். அவருக்கு உதவியாக ஒரு குதிரையும் வளர்த்து வந்தார்.

ஒரு நாள் அந்த குதிரை காட்டில் தொலைந்து விட்டது. அதை கேள்விபட்ட ஊர் மக்கள் அவரிடத்தில் வந்து, உனக்கு இருந்ததே ஒரே குதிரை அதுவும் தொலைந்து விட்டதே ஐயோ பாவம் நீ துரதிஷ்டசாலி என்றனர்.

அதை கேட்ட விவசாயி பதில் சொன்னார் “அந்த குதிரை என்னை விட்டு போனது என்னுடைய நன்மைக்கானது தான் என்றார்”

அதைக் கேட்ட ஊர் மக்கள் அதிர்ந்து போனார்கள் இந்த ஆளுக்கு பயித்தியம் பிடித்து விட்டது என மனதில் நினைத்து கொண்டு சென்று விட்டார்கள்.

சில நாட்கள் சென்ற பின்பு தன்னை விட்டு ஓடிப்போன குதிரை மறுபடியும் வந்தது. வரும் போது தன்னோடு 20 காட்டு குதிரைகளையும் கூட்டிக் கொண்டு வந்தது.

இந்த செய்தி மக்களுக்கு தெரிந்த உடன் மக்கள் திரண்டு வந்து அந்த விவசாயியை பார்த்து உனக்கு அதிஷ்டம் தான் ஒரு குதிரை ஓடிப்போய் இப்போது 20 குதிரை வந்திருக்கிறது.

அதற்கு அந்த விவசாயி சொன்னார் இந்த 20 குதிரை வந்தது எனக்கு துரதிஷ்டமாக கூட இருக்கலாம் என்றார்.

மக்களுக்குள் ஒரே குழப்பம் ஏன் இவர் இப்படி பேசுகிறார் என்று,…
அந்த விவசாயின் மகன் புதிதாக வந்த காட்டு குதிரைக்கு பயிற்சி கொடுக்கும் போது அந்த குதிரை அந்த பையனுடைய காலை உதைத்து உடைத்து விட்டது.

மக்கள் துக்கம் விசாரிக்க வந்த போது அவர் சொன்னார் என் மகனின் கால் உடைந்தது கூட நன்மைக்கே என்றார்.

அந்த ஊர் மக்கள் அந்த விவசாயியை பார்த்து நீ ஒரு பயித்தியக்காரன் என திட்டி விட்டு சென்று விட்டார்கள்.

சில நாட்கள் கழித்து அந்த நாட்டில் போர் வந்தது. அப்போது நாட்டில் உள்ள எல்லா இளைஞர்களும் போருக்கு வரவேண்டும் என கட்டளை இட்டார்.

எல்லா இளைஞர்களையும் அழைத்தனர். அப்போது அந்த விவசாயின் மகனை போருக்கு அழைக்க வந்த போது அவன் கால் உடைந்ததால் அவனை விட்டு விட்டு சென்றார்கள்…

இப்படி நம் வாழ்வில் நடக்கும் பல சம்பவங்கள் ஏன் நடக்கிறது என நமக்கு தெரியாது
ஆனால் ஒன்று ஆண்டவரின் அனுமதி இல்லாமல் நம் வாழ்வில் எதுவும் நடக்காது.

அப்படியே நம் வாழ்வில் நடக்கிறது என்றால் அது நன்மைக்கே என புரிந்து கொள்ளுவோம்.

வேதத்தில் பார்ப்போம்,

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; .
யாக்கோபு: 1:17

பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்
3 யோவான்: 1:11

கர்த்தர் நன்மையானதைத் தருவார், நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
சங்கீதம்: 85:12

பிரியமானவர்களே,

மனிதனுடைய திட்டங்கள் அநேகமாயிருக்கும்! ஆனால் கர்த்தருடைய திட்டங்களே, நன்மையாகவே இருக்கும்!

மனிதனுடைய எந்த ஒரு திட்டமும், ஒரு முடிவை கொண்டு இருக்கும். ஆனால், அந்த முடிவு எந்த வகையிலும் திருப்தி அளிக்காது!

அதே காரியத்தை ஆண்டவருடைய கரத்தில் ஒப்புக் கொடுத்து விட்டால், அவர் சில முடிவுகளை தருவார்! அந்த முடிவுகள் திருப்தியாக மட்டுமல்ல, நன்மையாகவும், மேன்மையாகவும் இருக்கும்!

கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் கூடியிருக்கும் அந்தக் கூட்டத்தில், உண்ண உணவு இல்லை! கையில் இருந்தது கொஞ்சம்! பிலிப்புவின் திட்டம், இருநூறு பணங்களுக்கு அப்பங்கள் வாங்கினாலும் போதாத குறையாக இருக்கும்!

ஆனால், கையிலிருந்த அந்த ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கரத்தில் கொடுக்கப்பட்டன.
அங்கே எப்படிப்பட்ட ஒரு முடிவு ஏற்பட்டது?

அனைவரும் சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள்! அதுமாத்திரமல்ல, மீதமும் எடுத்தார்கள்!
நம்முடைய யோசனைகள், நம்முடைய திட்டங்கள் எதைப் பற்றியாவது இருந்தால், அதை முதலாவது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரத்தில் ஒப்புக் கொடுப்போம்!

நன்மையான முடிவுகளை கர்த்தர் நம் வாழ்வில் அமைத்து தருவார்.

இத்தகைய நன்மைகளை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *