நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர்... கேட்கிறார். மல்:1:6
அன்பானவர்களே!
இன்று, ஆலயம், தேவசமுகம் என்பன நாகரீகத்தை அறிமுகப்படுத்தும் ஒரு இடமாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயம்.
நாம் தேவசமுகத்திற்கு எதற்காகச் செல்லுகிறோம்? யாரை ஆராதிக்கச் செல்லுகிறோம்? என்றதான எந்த விதமான உறுத்துதலும் இல்லாமல், நமது ஆடைகளையும், அணிகலன்களையும் காண்பிக்க செல்வது என்பது
துக்கத்துக்குரியதும், வெட்கத்துக்குரியதும் மட்டுமல்லாமல், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை வேதனைப்படுத்தும் காரியமாயும் அமைந்து விடுகிறது.
“கண் ஊனமானதையும், கால் ஊனமானதையும் பலியிட கொண்டு வந்து அது பொல்லாப்பில்லை என்கிறீர்கள். உங்கள் அதிபதிக்கு இதைக்கொடுத்தால் அவன் அதை ஏற்பானோ? உங்களிடம் நலமானது இருக்கும் போது கெட்டுப்போனதை ஆண்டவருக்குச் செலுத்துகிறீர்கள்.
கர்த்தருக்கு எதையும் செலுத்தலாம் என்று நாம் எண்ணுகிறதினால் தானே காணிக்கைப் பெட்டியில் செல்லாக் காசுகளையும், கிழிந்த நோட்டுக்களையும் போட்டுவிட்டுத் திருப்தியடைகிறோம்.
தேவசமுகம் பரிசுத்தமற்றது என்று எண்ணுவதினால் தானே நமது இஷ்டம் போல் நடக்கிறோம்.
பரிசுத்தமான ஆலயத்தில் நம் வார்த்தையினாலும் செய்கையினாலும் நம்முடைய செயல்களிலும் பரிசுத்த குலைச்சல் உண்டாக்குகிறோம்.
ஆண்டவர் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். ஆலயத்துக்குச் செல்லும்போது ஆண்டவரை ஆராதிக்கச் செல்லுகிறோம் என்ற பயபக்தியான எண்ணத்தோடு ஆலயம் செல்லுவோம்.
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர்: 12:2
மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார்.
மத்:15:9
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன், இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
ரோமர்:12:1
பிரியமானவர்களே,
உங்களை நிதானித்து அறியுங்கள்!.. அன்றைக்கு நீங்கள் ஆண்டவர் மேல் கொண்டிருந்த அன்பும் பக்தியும் நம்பிக்கையும், இன்றைக்கு எதன் மேல் வைத்திருக்கிறீர்கள்?.
ஒரு வாரம் முழுவதும் ஆண்டவரை மறந்து மனம் போன போக்கில் வாழ்ந்து விட்டு ஞாயிற்று கிழமை சபையில் வந்து “நீர் மாத்திரம் போதும்…முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்” என்று கடவுளுக்கு முன்பாக பொய் சொல்லி பாடுகிறோமா?
உலக ஆசீர்வாதத்தை நம்பி அதன் மேல் ஆசை வைத்து ஆண்டவரை விட்டு பின்வாங்கி போன நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் மனம் திரும்புவோம். தேவன் மேல் கொண்டிருந்த அன்பை புதுப்பித்து கொள்ளுவோம்.
இது நமக்கு கொடுக்கப்படும் கிருபையின் நாட்கள். இதை நாம் உதாசீனம் செய்ய வேண்டாம்.
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை முழு உள்ளத்தோடு தேடுவோம். மன நிறைவோடு இவ்வுலகில் வளமாய் வாழ ஆண்டவர் நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.