என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மத்தேயு 27 : 46
எனக்கு அன்பானவர்களே!
நம்மை கைவிடாத நேசராம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஊருக்கு வெளியே அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அங்கிருந்த ஆலமரத்தின் கிளைகளில் ஒரு வாத்துக் கூட்டம் வசித்து வந்தது. அந்த ஆலமரத்தின் அடியில் புதிதாக ஒரு கொடி முளைத்தது.
அது அந்த மரத்தை சுற்றிப் படர ஆரம்பித்தது.
இதனைப் பார்த்த வயதான வாத்து ஒன்று மற்ற வாத்துக்களை எச்சரித்தது.
இந்தக் கொடி மரத்தை சுற்றிப் படர்ந்தால் நமக்கு கண்டிப்பாக ஆபத்து ஏற்படும்.
யாராவது இதனைப் பிடித்துக் கொண்டு மரத்தில் ஏறிவந்து நம்மை கொல்ல முடியும் என்று முதியவாத்து எச்சரித்தது.
இப்போதே இந்தக் கொடியை வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள் என்று முதியவாத்து யோசனை சொன்னது.
ஆனால் மற்ற வாத்துக்கள் எல்லாம் அந்த வயதான வாத்தின் பேச்சை மதிக்கவில்லை. அதைப் பற்றி அலட்சியமாக பேசி விட்டு கொடியை நீக்காமல் விட்டு விட்டன. அந்தக் கொடி நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக மரத்தை சுற்றிப் படர்ந்தது.
ஒரு நாள் எல்லா வாத்துகளும் இரை தேட சென்றிருந்தன. அந்த வழியே வந்த வேடன் ஒருவன் வாத்துக்களை பிடித்துக் கொண்டு போக நினைத்தான். மரத்தை சுற்றி படர்ந்திருந்த கொடியினை பிடித்து மரத்தின் மேல் ஏறி வாத்துக்களை பிடிக்க கண்ணி வைத்தான்.
அதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்து விட்டான். வெளியே சென்ற வாத்துக்கள் எல்லாம் இரை உண்டு விளையாடியபடி வீடு திரும்பின. வேடன் வைத்த கண்ணியில் அவை அனைத்தும் சிக்கிக் கொண்டன.
உடனே முதிய வாத்து என்னுடைய பேச்சை உடனே கேட்காததால் தான் இப்படி மாட்டிக் கொண்டோம். இனி அனைவரும் சாக வேண்டியது தான் என்று கூறியது.
மற்ற வாத்துகள் தங்கள் தவறுக்காக வருந்தின.
பெரியவரே நீங்கள் சொல்வதை கேட்காமல் போனது எங்கள் தவறு தான். இந்த ஆபத்து நேரத்திலும் நீங்களே எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முதிய வாத்தை பார்த்து கெஞ்சின.
அறிவும் பக்குவமும் கொண்ட முதிர்ந்த வாத்து தன்னுடைய இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தது . மேலும் இளைய வாத்துக்கள் மீது இரக்கம் கொண்டு
சரி நான் சொல்லும்படி செய்யுங்கள்.
வேடன் வரும் போது அனைவரும் செத்தது போல நடியுங்கள்.செத்த பிணம் தானே என்று வேடன் கவனமில்லாமல் இருக்கும்போது அனைவரும் தப்பித்து விடலாம் என்று உபாயம் கூறியது .
அடுத்த நாள் அதிகாலையில் வேடன் அங்கே வந்தான். அவன் தலையை பார்த்ததும் வாத்துக்கள் எல்லாம் செத்தது போல சாய்ந்து விட்டன.
மரத்தின் மீது ஏறிய வேடன் உண்மையில் வாத்துக்கள் இறந்து விட்டது எனக் கருதினான். அதனால் அவைகளை மரத்தில் இருந்து தூக்கி கீழே வீசினான்.
உயிருள்ள வாத்துக்கள் என்றால் வேடன் கால்களையும் இறக்கைகளையும் கட்டி அவைகளை இறக்கி இருப்பான். செத்த வாத்துக்கள் தானே என்று எண்ணிய வேடன் வாத்துக்களை கட்டாமல் அப்படியே தரையில் போட்டான்.
வாத்துக்கள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தும் வலியை பொறுத்துக் கொண்டு கீழே விழுந்தும் இறந்தது போலவே கிடந்தன. எல்லா வாத்துக்களையும் வேடன் தரையில் போட்டு விட்டு கீழே இறங்கலானான்.
அவன் பாதி வழி இறங்கும் போது முதிய வாத்து கண்காட்டியதும் எல்லா வாத்துக்களும் படபட வென இறக்கைகளை அடித்துக் கொண்டு மரத்தின் மீது அமர்ந்து கொண்டன.
முதிர்ந்த வாத்தோ இறக்கை அடிக்க முடியாமல் அவன் கையில் சிக்கி கூக்குரல் இட்டன. மற்ற வாத்துகள் எங்களைச் போல நீயும் பறந்து வரவேண்டியது தானே என்று ஏளனம் செய்து சிரித்தன.
வேடனோ, அந்த வாத்தை எடுத்து அதன் தலையை துண்டித்து அதை எடுத்து தன் பையிலே போட்டு விட்டு தன் வீட்டை நோக்கி நடந்தான்.
வாத்து தன் இனத்தை பாதுகாக்க நினைத்து
தன் உயிரைக் விலையாக கொடுத்து.
வேதத்தில் பார்ப்போம்,
என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
சங்கீதம் 22 :1.
ஒன்பதாம் மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
மாற்கு 15 :34.
உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
யோவான் 3:17
பிரியமானவர்களே,
இயேசு தேவனுடைய குமாரனாயின் ஏன் இவ்வாறு கதற வேண்டும் என எல்லா மனிதர்களுக்குள்ளும் இது ஒரு கேள்விக்குரியான வார்த்தையாக காணப்படுகின்றது.
வேதத்தை ஆராய்ந்து பார்த்தால் ஏசாயா 59:2 இப்படி கூறுகின்றது உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாக பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
ஆகவே தேவனுடைய முகத்தை மனுஷன் பார்க்க முடியாமல் மறைப்பது முதல் காரணம் பாவம். நமக்கும் தேவனுக்கும் இடையே பாவம் ஒரு இரும்பு திரையாக உள்ளது. தேவன் நம்மை பார்க்க முடியாத சந்தர்ப்பம் பாவத்தின் மூலம் வருகின்றது.
யோவான் 8:29 ல் பார்ப்போமானால் என்னை அனுப்பினவர் என்னுடனே கூட இருக்கிறார் பிதாவுக்கு பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னை தனியேயிருக்கவிடவில்லை என்றார்.
அதேப் போன்று மறுரூபமலையிலே எலியாவோடும் மோசேயோடும் பேசிக் கொண்டிருக்கையில் “இவர் என் நேசக்குமாரன் இவருக்கு செவிகொடுங்கள்” எனக் கூறினார்.
இங்கே பார்க்கும் போது பிதா எப்பொழுதும் அவரோடு உறவாடியதற்கு காரணம் அவரிடம் பாவமில்லை என்பதினால் தான்.
ஆனால் அன்று கல்வாரியிலே பிதா அவரை ஏன் ஒரு நிமிடம் கைவிட்டார்.
என்றால் இயேசுவும் பிதாவிற்கும் இடையில் ஒன்று வரவேண்டும் அது பாவம் ஆனால் அவர் பாவம் செய்யவில்லையே! எப்படியெனில் உலகமும் அதில் உள்ளவர்களும் செய்த பாவமே அதற்கு காரணம். 2கொரி 5:21 இப்படி சொல்லுகின்றது.
நாம் அவருக்குள் நீதியாகும் படிக்கு அவரை நமக்காகப் பாவமாக்கினார். எனவே இயேசு முதன் முறையாக பிதாவின் தொடர்பு இல்லாமல் இருந்தார்.
நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அவர் தாமே ஏற்றுக் கொண்ட போது இயேசு குற்றவாளியாகவும் பிதா நீதிபதியாகவும் நின்று ஒருகணம் தன்னுடைய முகத்தை அவருக்கு மறைத்தார்.
அது நியாயத்தீர்ப்பின் நேரமாய் காணப்பட்டது.
அவ்வேளையிலே இயேசு தேவனை நோக்கி கதறிய வார்த்தை இது. ஆகவே இனி மனிதனுடைய பாவத்திற்காக ஆடு, மாடுகளின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதில்லை.
இயேசுவே நமது பாவத்தை தன் மேல் சுமந்து தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி மீட்பை பெற்றுத் தந்துள்ளார்.
நம் பாவங்களைப் பாராத படி நம்மை மீட்டெடுத்த இயேசுவின் தியாகத்தை உணர்ந்தவர்களாய் அவரோடு இணைந்து வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.