Daily Manna 44

இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார். லூக்கா:22:48.

எனக்கு அன்பானவர்களே!

அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

எதிர்பார்க்கும் முத்தமோ, எதிர்பாரா முத்தமோ அது இயல்பாய் இருந்தால் தான் அன்பின் வெளிப்பாடு.

நாம் தாராளமாகவே முத்தங்கள் பரிமாறுகிறோம்! பெற்றெடுத்த குழந்தையை அரவணைத்து தாய் கொடுப்பது பாசத்தின் முத்தம். கணவன் மனைவிக்கிடையில் பரிமாறப்படுவது அன்பின் முத்தம்.

தான் செய்த தவறை மறைக்க பெற்றோரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு குழந்தை கொடுப்பது அப்பாவித்தனமான முத்தம். இப்படி எத்தனை எத்தனையோ! சொல்லிக்கொண்டே போகலாம்.

அன்று யூதாஸ் இயேசுவுக்குக் கொடுத்த அந்த ஒரு முத்தத்தை எந்தப் பிரிவுக்குள் சேர்க்கலாம்? பொதுவாக, அன்பை வெளிப்படுத்தவே நாம் முத்தம் கொடுப்பதுண்டு.

யாரும் முத்தம் கொடுத்துவிட்டு உடனடியாக உதைப்பதோ, அடிப்பதோ கிடையாது. யூதாசின் நோக்கமும் திட்டமும் வேறாக இருந்தது. அவனது உள்நோக்கம் இயேசுவை விரோதிகளுக்குக் காட்டிக் கொடுப்பது, தான்.

அதனை நிறைவேற்றவே அவன் முத்தம் கொடுத்தான். ஆக, தன் முத்தத்தை, காட்டிக் கொடுக்கும் அடையாளமாகப் பிரயோகித்தானே தவிர, அதை அன்பின் அடையாளமாகக் கொடுக்கவில்லை.

தன் துரோகத்தை முத்தத்தில் மறைத்தானோ? இருட்டில் இயேசுவை இனங்காட்ட முத்தங்கொடுத்தானோ? எது எப்படியோ யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுக்க முத்தத்தையே பயன்படுத்தினான்.

முத்தம் அன்பிற்கு அடையாளம்; ஆனால், யூதாஸ் கொடுத்த முத்தத்தில் வஞ்சனை கலந்திருந்ததை ஆண்டவர் கண்டு கொண்டார். ‘முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்?’ என்று அவர் கேட்டார்.

இயேசுவை கைது பண்ண வந்தவர்களுக்குத் துணையாக, அவரைக் காட்டிக் கொடுக்கும்படிக்கே யூதாஸ் வந்திருந்தான். இயேசுவுக்கும், அவரோடிருந்த மற்றையோருக்கும், தான் ஒரு முத்தம் மாத்திரமே கொடுத்ததாகவும், தனக்கும் அங்கு நடந்த சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போலவும் பாசாங்கு செய்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதனால் தானோ அங்கே அவனுக்கு எவரிடமிருந்தும் எதிர்ப்பு எழவில்லை. ஆனால் அவனது முத்தம் வஞ்சகமானது என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார்.

இன்று நாம் பிறருக்குக் கொடுக்கின்ற முத்தம் உண்மையானதா? அல்லது பாசாங்கு காட்டுகிறோமா?

அன்பின் வெளிப்பாட்டில் இயல்பாய் இருங்கள். யுத்தத்திற்கு திட்டமிடுவதைப் போல முத்தத்திற்கானத் திட்டமிடலைத் தவிருங்கள்.
அன்பென்னும் போர்வையில் வைத்து துரோக முத்தம் கொடுத்து ஏமாற்றுவதைத் தவிருங்கள். மாய்மாலங்களைத் தள்ளி விடுவோம்.

முத்தமிடுவது பெரிதல்ல; வெளியுலகுக்கு நம்மை உத்தமர்களாக காட்ட வேண்டிய அவசியம் என்ன? நமது உள்ளம் தேவனுக்குப் பிரியமாயிருக்கிறதா என்பதே முக்கியம்.

வேதத்தில் பார்ப்போம்,

அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக் கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.
மாற்கு 14 :10.

அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ் செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.
லூக்கா 22 :47.

இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார்.
லூக்கா 22 :48

பிரியமானவர்களே,

ஆடையோடு தாடையை ஒட்டியபடி கொடுக்கப்படுகிற முத்தம் மிகுந்த சகோதர அன்பை வெளிப்படுத்துகிறது.

ஆனால் யூதாஸின் முத்தமோ பொய்யான அன்பை வெளிப்படுத்தி
துரோக செயலை காட்டுகிறது. வேதம் சொல்லுகிறது.
ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள்.
1 பேதுரு 5:14 என்று பேதுரு கூறுகிறார்.

யூதாஸ் முன்வந்து இயேசுவை முத்தமிட்டான். நட்பு மற்றும் அன்பின் பரிமாற்றத்துக்கு அடையாளம் முத்தமாகும். ஆனால் இயேசுவை அடையாளம் காணவும் அவரைக் கைது செய்து சனகெரிப் சங்கத்தினரால் விசாரிக்க பாதுகாப்பாகக் கொண்டு செல்லவும் யூதாஸ் முத்தத்தைப் பயன்படுத்தினான்.

அன்றிலிருந்து சபையானது, நட்பைக் காட்டும் முத்தத்தை “பரிசுத்த முத்தம்” என்று அழைத்தனர். “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள்.”

யூதாஸ் கொடுத்தது துரோக முத்தம்! இன்றும் நடைமுறையில் தான் உள்ளது.

சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக் கொடுக்கும் படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினான்;
யோவான் 13 :2 பிசாசானவனின் தந்திரம் இதுவே,

முதலாவது பாவம் செய்கிற தொந்தரவு செய்வான். செய்துவிட்டால், நீ செய்துவிட்டாய் செய்துவிட்டாய் என நொந்து போகச் செய்வான். நாம் நாம் செய்த பாவத்துக்கு நாமே தண்டனை பெற்றுக் கொள்ளும் படியான ஆலோசனையையும் கொடுப்பான்.

சகரியா 11:12 டில் உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.

கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். என்று சகரியா தீர்க்கதரிசி வருங்காரியத்தை முன்னறிவித்து இருந்தார்.

என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
1 யோவான் 3:18 என வேதம் கூறுகிறது.

ஆம் நம்முடைய அன்பு யூதாஸை போலல்லாமல், கிரியையினாலும், உண்மையினாலும் அன்பு கூறுவோம்.

மற்றவர்களிடம் துரோகமில்லாத அன்பை காட்டும் போது நாம் பரலோக அன்பில் கட்டப்பட்டவர்களாய் இம்மையிலும் மறுமையிலும் வாழுவோம் என்பதில் ஐயமில்லை.

இப்படிப்பட்ட அன்பில் கட்டப்பட்டவர்களாய் ஜீவிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *