ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப் போனார்கள். மத்தேயு 26:56
எனக்கு அன்பானவர்களே!
நல்ல மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஆண்டவரை அதிகமாய் நேசித்த ஒரு பக்தனுடைய வாழ்க்கையில் புயல் வீசினது. அவர் துக்கத்தோடு மரங்கள் அடர்ந்த ஒரு காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று பெருங்காற்று வீச ஆரம்பித்தது. சில மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. காய்ந்த இலைகள் எல்லாம் பறக்க ஆரம்பித்தன.
அந்த பக்தன் அதைப் பார்த்தவுடனே, “என் வாழ்க்கையிலும் புயல், இந்த மரங்களின் மத்தியிலும் புயல் தானா?” என்று நொந்து கொண்டார்.
அப்போது கர்த்தர், “மகனே, இந்தப் பெருங்காற்றினால் இந்த மரத்திற்கு எவ்வளவு நன்மை என்பதைப் பார்த்தாயா? இந்த காற்றினால் மரம் அதிகமாக அசைக்கப்படுவது உண்மை தான்.
ஆனால் அது எவ்வளவுக்கெவ்வளவு அசைகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதனுடைய வேர் ஆழமாக பூமியில் இறங்கி, அடிமரம் உறுதியுள்ளதாகி விடுகிறது. காற்றினால் பலவீனமான கிளைகள் மட்டுமே முறிந்து போகின்றன.
காய்ந்து போன இலைகள் எல்லாம் உதிர்ந்து போகின்றன. ஆகவே மரம் இனிமையான புது கிளைகளை உண்டு பண்ண தகுதியுள்ளதாய் மாறுகிறது.
அது மட்டுமல்ல, காற்று அதிகமாகய் வீசுவதினால் மரத்திலுள்ள விதைகள் பல இடத்திற்கு பரவுகின்றன. அதன் மூலம் ஆங்காங்கே புதிய மரங்கள் தோன்றுகின்றன. அது போலவே, உன்னுடைய வாழ்க்கையில் புயல் வீசும்போது, அது உன்னை ஆவிக்குரிய ஆழமான அனுபவத்திற்குள் கொண்டு செல்லுகிறது.
கர்த்தரை நெருங்கிப் பற்றிக் கொள்ளக் கிருபை செய்கிறது” என்று பேசினார். அன்று முதல் அந்த பக்தன் என் வாழ்வில் ஆண்டவர் எதை செய்தாலும் அது எனக்கு நன்மைக்கு ஏதுவாகவே இருக்கிறது என்று கற்றுக் கொண்டார்.
வேதத்தில் பார்ப்போம்,
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார், மேய்ப்பனை வெட்டுவேன், அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர் மேல் திரும்ப வைப்பேன்.
சகரியா 13:7
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
மத்தேயு 26:31
ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப் போனார்கள்.
மத்தேயு 26:56
பிரியமானவர்களே,
இயேசு கிறிஸ்து தமக்கென்று சீஷர்களை தெரிந்து கொண்ட போது, சீஷர்கள் அதை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். அவரை மூன்றரை ஆண்டுகள் தொடர்ந்து பின்பற்றி வந்தார்கள்.
சீஷர்களுக்கு இயேசு கிறிஸ்து, சகோதரனைப் போலவும், சிநேகிதரைப் போலவும் இருந்தார். இயேசு அவர்களை ஊழியத்திலே நன்றாக பழக்கினார்.
அவர்களுக்கு அபிஷேகத்தையும், வல்லமையையும் கொடுத்தார். பிசாசுகளைத் துரத்தவும், வியாதியஸ்தரை குணமாக்கும் படி, உற்சாகப்படுத்தினார்
{இயேசுவின்} அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.
இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன் தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டு விடுங்காலம் வரும்;
அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனே கூட இருக்கிறார்.
யோவான் 16:32
நம் அன்பான இயேசு கிறிஸ்து தம் சீடர்களுக்கு சொன்னது போலவே இயேசுகிறிஸ்து சிலுவையிலே தொங்குகிற நேரம் வந்தபோது யோவானைத் தவிர மற்ற அனைத்து சீடர்களும் அவரை விட்டு ஓடிப் போனார்கள்.
கலங்கி ஓடிப்போன சீஷர்கள், உலகத்தைக் கலக்குகிறவர்களாக மாறினது, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால்!
மேய்ப்பனுக்கு பிரச்சனை என்றால், ஆடுகள் என்ன செய்யும்? சிலுவையின் வேளையில், கலங்கிச் சிதறிப் போனது சீஷர் கூட்டம்! அது ஆடுகளின் இயல்புஸதானே?
ஆனால், நல்ல மேய்ப்பன் இயேசு என்றும் மாறாதவர்! உயிர்த்த பின்பு, நேராகத் தம் சீஷர் எனும் மந்தையைத் தேடி வந்தார்!
இன்னும் பயம் நீங்காமல் இருந்த மந்தைக்கு நடுவே நின்று, உங்களுக்குச் சமாதானம் என்றார்.
கர்த்தர், இப்போது உள்ளே வந்துவிட்டார்! அதுதான் அற்புதம்! கலங்கின ஆடுகள் எல்லாம், இப்போது கலக்கும் ஆடுகளாக மாறி திசைக் கொன்றாய் ஓடின!
இப்போது ஓடின ஓட்டம் கடினமாய் இருந்தாலும், கர்த்தருக்குப் பிரியமாய் இருந்தது! காலடிபட்ட இடங்களில் அற்புதம் நடந்தது! வசனம் பரம்பிற்று! சபைகள் வளர்ந்து பெருகின.. கர்த்தருடைய நாமம் மகிமைப்பட்டது!
பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உள்ளே இருப்பதை விசுவாசித்து பரிசுத்தமாய், அன்பாய், பொறுமையாய் வாழ, தேவ நாமம் நம்மில் மகிமைப்பட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.