Daily Manna 5

என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமலும் இரு. உபாகமம் 8:17

எனக்கு அன்பானவர்களே!

ஆசீர்வாதத்தின் ஊற்றாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

யூத் வித் எ மிஷன் (YWAM) என்பது வாலிபர்கள் மூலம் சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு மிஷனெரி ஸ்தாபனமாகும்.

இதன் ஸ்தாபகர் லாரன் கன்னிங்ஹாம் என்ற தேவ மனிதர் உலகெங்கும் சுவிசேஷம் அறிவிக்கவும், தேவையுள்ள இடங்களில் மருத்துவ உதவிகள் மூலம் கிறிஸ்துவின் அன்பை வெளிபபடுத்தவும், புது வழிகளை கையாள ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் கப்பல் ஒன்றை வாங்கும்படி அவரை வழிநடத்தினார்.

இந்த பெரிய திட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேவனின் அற்புத கரம் இருப்பதை அவர்கள் கண்டனர். அந்த நேரத்தில் மாவோரி என்ற நேர்த்தியான கப்பல் மிகக் குறைந்த விலைக்கு வந்தது.

அதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 40 இலட்சத்தை இங்கிலாந்திலுள்ள ஒரே நபர் காணிக்கையாய் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பல இலட்சங்கள் வந்து குவிந்தன. முப்பது நாட்களுக்குள் மீதி தொகையை கொடுத்து கப்பலை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தம் முடிய ஒரு வாரம் இருக்கும் போது திடீரென உதவிகள் வருவது நின்றது. பிலிப்பைன்ஸிலுள்ள தொழிலதிபர் ஒருவர் மீதமுள்ள பணம் அனைத்தையும் தான் தருகிறேன் என முன்வந்தார். ஆனால் அந்த பணத்தை அந்த நாட்டிலிருந்து வெளி கொண்டு வர அநேக தடைகள் காணப்பட்டது.

இந்த நேரத்தில் லாரன் கண்ணீரோடு தேவ சமுகத்தில் காத்திருந்த போது ஒரு தரிசனத்தை கண்டார்.

அதில் லாரனும் அவர்களின் ஸ்தாபனத்தின் மற்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி, ‘தேவன் கப்பல் வாங்க பணத்தை தந்து விட்டார். கப்பல் நமக்கு கிடைத்து விட்டது’ என்று லாரன் கூறவும், அனைவரும் கைகளை அசைத்து ஆர்ப்பரித்து கொண்டாட துவங்கினர்.

அப்பொழுது அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒருவர் நிற்கக் கண்டார். லாரன் அவரை நெருங்கி சென்று பார்த்தார். அவர் அழுது கொண்டிருந்தார். இன்னும் நெருங்கி சென்று உற்று பார்த்தபோது, அவர் இருதயம் நொறுங்கியது.

அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தான். கப்பலை தருகிறவர் அவர், ஆனால் இங்கோ ஊழியத் தலைவர்கள் இயேசுவை மறந்து கப்பலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த தரிசனத்தை ஊழியர்களிடம் பகிர்ந்து கொண்ட போது, ஒவ்வொருவருடைய இருதயமும் நொறுக்கப்பட்டு அழுது தேவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டனர்.

மாவோரி கப்பலை வாங்க முடியாமற் போனாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் ‘உயிர்தெழுதல்’ என்னும் அர்த்தம் கொண்ட ‘அனஸ்டாஸிஸ்’ என்ற கப்பலை வாங்கி இன்றும் அதில் பல நாடுகளில் கர்த்தரின் நாமம் மகிமைக்காய் ஊழியம் செய்து வருகின்றனர்.

வேதத்தில் பார்ப்போம்,

உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும் போதும்,
உபா 8:13.

என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
உபா8:17

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
உபாகமம் 8:18.

பிரியமானவர்களே,

ஏமி கார்மைக்கேல் அம்மையார் கூறுகிறார்
‘கிடைக்கப் பெற்ற பரிசில் கொடுத்தவரை மறந்து விடாதீர்கள்’ என்றார் .தேவன் நாம் மகிழ்ந்திருக்கும் படியாக, அநேக நன்மைகளை கிருபையாக தருகிறார்.

பணம், பொருள், வீடு, ஆஸ்தி, வாகனங்கள, ஆவிக்குரிய அனுபவங்கள் என்று அனைத்தையும் தருகிறார். அநேக நேரங்களில் அவற்றை கொடுத்த தேவனை விட கொடுக்கப்பட்ட பொருளின் மேலேயே நம் சிந்தனை நின்று விடுகிறது.

அதில் பெருமை கொண்டு அதை நமக்கு கொடுத்த தேவனை மறந்து விடுகிறோம்.
‘நீ புசித்துத் திருப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும் போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி,

உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும் போதும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,… எச்சரிக்கையாயிருந்து,… உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக’ (உபாகமம் 8:12,13,17,18) என்று வசனம் கூறுகிறது.

நம்முடைய தாழ்மையில் நம்மை நினைத்து, நம்மை தெரிந்துக் கொண்டு, நம்மை இம்மட்டும் உயர்த்திய தேவனை மறந்து போவோமானால் அது எத்தனை பயங்கரமாயிருக்கும்!

அநேக வேளைகளில் நம்முடைய செயல்களினால் தேவ ஊழியர் லாரனைப் போல நாம் நம் தேவனை புறம்பே தள்ளிவிடுகிறோம். நமக்கு தேவன் கொடுத்த நன்மைகளை முன்பாக வைத்து தேவனை பின்பாக தள்ளிவிடுகிறோம். தேவன் எத்தனையாய் வேதனைப்படுவார்!

நம்மை உயர்த்திய தேவனை நாம் மறந்து போகாதபடி, நமக்கு கிடைத்த நன்மைகளிலேயே நம் முழு கவனத்தையும் செலுத்தி, தேவனை துக்கப்படுத்தாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம்.

ஆவிக்குரிய வரங்களை பெற்றுக் கொண்டவர்கள், தாங்கள் பெற்ற வரத்திலேயே கவனமாயிருந்து, அதிலே மேன்மைப் பாராட்டிக் கொண்டு, அதைக் கொடுத்த தேவனை மறந்து போகாதிருப்போமாக.

உலக மயக்கமும், ஐசுவரியமும் நம்மை நம் தேவனிடமிருந்து பிரிக்காதிருப்பதாக. எல்லாவற்றிலும் எந்த ஆசீர்வாதத்திலும் அதை நமக்கு கொடுத்த தேவனை மகிமைப்படுத்துவோம்.

நம் கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார். இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

இத்தகைய ஆசீர்வாதங்களை பெற்றுக் அனுபவிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *