ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன். மாற்கு: 8 :34.
எனக்கு அன்பானவர்களே!
சிலுவை நாதராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“சிலுவை” என்பது இயேசு கிறிஸ்துவின் மரணத்தால் உலக வரலாற்றில் தலையாய இடம் பெற்றிருக்கின்றது.
முன்னே குற்றவாளிகளின் அவமானச் சின்னமாக இருந்த சிலுவை இப்போது, மானிடரின் ஈடேற்றத்திற்குச் காரணமாக அமைந்துள்ளது.
கிறிஸ்துவின் மரணத்திற்கு முன் சிலுவை என்பது தாங்க முடியாத கொடுமையான தண்டனையை நிறைவேற்றும் கருவியாக இருந்தது. ஒரு கள்வனுக்கோ,ஒரு கொலைப் பாதகனுக்கோ,அல்லது ஒரு கலகக்காரனுக்கோ கொடுக்கப்பட்டு வந்த அதிகபட்சமான தண்டனை, சிலுவையில் அடித்து மரிக்கச் செய்வது தான்.
மரத்தில் தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது. அது ஒரு பயங்கரமான சாவு. சிலுவை மரணம் மகா ஈனமானது. அது மகா பாவிக்கு விதிக்கப்பட்ட தண்டனை.
அது தேவ கோபத்தினால் உண்டாகும் என்பது அக்காலத்துக் கொள்கை. ஏற்கனவே செய்து வைக்கப்பட்டிருக்கும் சிலுவை, குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த சிலுவையை அவனே சுமந்து கொண்டு செல்ல வேண்டும் என்றும் இருந்தது.
அந்த காட்சியைப் பார்க்கும் ஜனங்களின் கேவலமான விமர்சனங்கள், போலிப் பேச்சுகள்; தண்டனையை நிறைவேற்றக் காத்திருக்கும் போர்ச் சேவகரின் சித்திரவதைகள்; சவுக்கடிகள் இவையெல்லாம் அவன் அனுபவித்துத் தீரவேண்டும்.
தண்டனையை சிலுவையிலறைந்து நிறைவேற்றுவதை விட இவைகளை அனுபவிக்கும் காட்சி மிகமிகக் கொடுமையானது ஆகும்.
ஆனால் இயேசுவின் மரணத்திற்கு பின் அதுவரை நிலவிவந்த சிலுவையின் இழிநிலை மாற்றப்பட்டு அது ஒரு அன்பின் சின்னமாக பாவிகளை இரட்சிக்கும் கிறிஸ்து இயேசுவை நினைவு கூறும் சின்னமாக உலக வரலாற்றில் முக்கியமானதொரு அழியா இடத்தைப் பெற்றுள்ளது.
வேதத்தில் பார்ப்போம்,
தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.
மத்தேயு 10:38.
நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக;
கலாத்: 6:14.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார்.
ரோமர்: 5:8
பிரியமானவர்களே,
சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் அன்பைக் காண்கிறோம். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப் பண்ணுகிறார் என்று
ரோமர்: 5:8-ல் பார்க்கிறோம்.
ஆண்டவரின் அன்பை உலகிற்குக் கொண்டு வந்தவரும் அதை செயலில் காட்டியவரும் இயேசு தான்.
சிலுவையில் பாவத்தின் பயங்கரத்தைக் காண்கிறோம். தீமையோடும் தீய சக்தியோடும் போராட வேண்டியிருந்தது. இருதயம் கடினம் குருட்டாட்டம் பொறாமை, பெருமை ஆகிய இவைகள் சமயத் தலைவர்களின் கண்களைக் குருடாக்கி விட்டன.
பொது மக்கள் ஏனோ தானோ என்றிருந்தார்கள். யூதாஸ் காட்டிக் கொடுத்தான். பேதுரு மறுதலித்தான். சீஷர்கள் ஓடிப் போய் விட்டார்கள். பிலாத்து நீதி செலுத்தி அவரை விடுதலைச் செய்யத் தவறி விட்டான்.
போர்ச்சேவர்கள் கேலி செய்து வாரினால் அடித்தார்கள். பாவமில்லாத அவர் நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத் தாமே சிலுவையில் ஒப்புக் கொடுக்க நேர்ந்தது.
பாவமானது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே பிரிவினை உண்டு பண்ணுகிறது. ஆனால் சிலுவையோ கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துகிறது.
சிலுவையில் மன்னிப்பின் செய்தி அறிவிக்கப்படுகிறது. இறைவன் இயேசு மன்னிக்கிறதற்குத் தயை பொருந்தினவர்.
மன்னிப்பின் உபதேசத்தைப் பலமுறை தமது சீஷர்களுக்குப் போதித்தார். மற்றவர்களுக்கு விரோதமாகச் செய்தக் குற்றங்களை மன்னித்தால், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள் என்றார்.
தமது வாழ்க்கையில் தாமே அதை முன் மாதிரியாகச் செயல்முறையில் காட்டினார். கிறிஸ்து இரட்சகர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு மன்னிப்பை அருளுகிறார்
எபே 1:17,
1யோவா 1:7-9.
இரட்சகரின் மன்னிப்பின் மாட்சிமையை உணர்ந்து சகல ஜனத்தாரும் மனந்திருப்பி மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
லூக் 24:47. மனந்திரும்புதலும் மன்னிப்பும் ஒன்று போல் வருகிறது.
மன்னிப்பை பெற நாமும்கூட மன்னிக்கும் சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று மத் 18:33-35 – ல் கூறப்பட்ட உவமை நமக்கு போதிக்கிறது.
ஆகவே நாம் சிலுவையின் மகத்துவத்தை உணர்ந்தவர்களாய் மன்னிக்கும் மனப்பான்மையை தரித்து தேவனுக்கு பிரியமுள்ளவர்களாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.