அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப் பண்ணவுமாட்டார். ஏசாயா :42:2
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு நாள் மலையும், கடலும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டன.
கடல் மலையை பார்த்து, “ஹும் … என்ன இருந்தாலும் உனக்கு
தான் எப்போதும் நல்ல பெயர்!!!” என்று பெருமூச்சு எறிந்தது…
மலை, “ஏன் அப்படி சொல்கிறாய்?” என்று கேட்டது.
“மலை போல் நம்புகிறேன் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள்.
கடல் போல் நம்புகிறேன் என்று யாரும் சொல்வதில்லை.
அது மட்டுமா ஹிமாலயன் டாஸ்க் என்கிறார்கள்….. பசிபிக் டாஸ்க் என்று
யாராவது சொல்கிறார்களா?
இத்தனைக்கும் நான் உன்னை விட எந்த வகையிலும்
குறைந்தவள்” என்றது கடல்.
மலை சிரித்துக் கொண்டே சொன்னது “என்னை ஏன் எல்லோரும் புகழ்கிறார்கள் உனக்கு தெரியுமா?”
இல்லை “ஏன் ??” என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டது கடல்.
மலையாகிய , “நான் எப்போதும். அமைதியாக இருக்கிறேன். நீயோ எப்போதும் ஆர்ப்பரிக்கிறாய்.
அது மட்டுமல்ல நீ எப்போதும் பேரிரைச்சல் போடுகின்றாய். அதிகமாய் இரச்சல் போடுகிற எவரையும் யாரும் அதிகமாய் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் ஒன்று அவர்களை அனைவரும் வேடிக்கையாக பார்ப்பார்கள் என்றது மலை. தன்னுடைய இயாலமையை புரிந்து கொண்டது கடல்.
எப்போதுமே
அமைதியே அழகு.
வேதத்தில் பார்ப்போம்,
வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை.
மத்தேயு 12 :19
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டு போகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப் போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப் போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
ஏசாயா 53:7
அவர் நியாயத்திற்கு ஜெயங் கிடைக்கப் பண்ணுகிற வரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
மத்தேயு 12 :20.
பிரியமானவர்களே,
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவ பக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். யாக்கோபு 1:26
மனிதனின் அனேக பிரச்சனைகளுக்குக் காரணம் நாவு தான். பேசவும், ருசியறியவும் கொடுக்கப்பட்ட நாவால், தேவையற்ற நேரத்தில் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதாலும், வாழ்வில் ருசியிழந்து (மகிழ்ச்சியிழந்து) போய் விடுகிறது.
நாவை அடக்குதல் ஒரு முக்கிய தேவை. குடும்ப பிரிவுகளுக்கு, சபைப் பிரிவினைகளுக்கு “அடங்கா நாவுகளே” தலையாய காரணம்.
நாவை அடக்காதவர் சிறந்த பக்திமான் அல்ல. நாவை அடக்காமல், தேவனுக்குப் பாத்திரராய் நடக்க இயலாது. எத்தனை அந்நிய பாஷைகள் பேசினாலும், உணவு மற்றும் வார்த்தைகள் விஷயத்தில், நாவை அடக்காவிட்டால், நாம் ஒரு நல்ல விசுவாசிகள் அல்ல.
நம் பக்தியும் வீண். பெருமை பேசும் நாவுகள் அறுபடும் என்றும்,மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருப்பதாகவும் வேதம் சொல்கிறது.
நாவுகள் தேவனை அறிக்கை செய்வதாகவும், ஸ்தோத்திர பலியிடுவதாகவும், தேவனையும், மற்றவரையும் கனம் பண்ணுவதாகவும் அமையட்டும்.
நாவு நெருப்பு போன்றது.. அதனை, அழிக்கவும் பயன்படுத்தலாம். பக்குவமாய் சமைக்கவும் பயன்படுத்தலாம்.
ஒருவரது பேச்சிலிருந்து அவருடைய இருதயத்தில் நிறைந்திருக்கும் மாயமாலத்தை அறிந்து கொள்ள முடியும்.
பிறருடைய குறையை பேசிக் கொண்டே இருப்பார்கள்.
முதலாவது நீ உன்னிடத்திலுள்ள குறையை நிதானித்து அறிந்து கொள் என்று வேதம் சொல்கிறது.
இன்றைக்கு அநேகருடைய ஜெபத்துக்கு பதில் கிடைக்காததற்கு முக்கிய காரணம் தங்கள் நாவினால் பாவம் செய்வது தான்,
ஒரு மனுஷனை அவன் பேச்சிலிருந்து அவன் நல்லவனா கெட்டவனா?அவன் இருதயம் எப்படிபட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்,
இன்றைக்கு அநேகரை தேவன் பயன்படுத்தாததற்கு முக்கிய காரணம் அவர்களது தாறுமாறான பேச்சும் நாவினால் தங்களை தீட்டுப்படுத்தின கிரியைகளும் தான்.
இன்றைக்கு நம்மை ஆராய்ந்து பார்ப்போம். நம்முடைய அவயவமான நாவை நீதிக்குரிய ஆயுதமாக ஒப்பு கொடுக்கவில்லையென்றால் நாம் இன்னும் தேவன் விரும்பும் பரிசுத்தத்தை பெற்றுக் கொள்ளவில்லை எனறு அர்த்தம்.
அதாவது நாம் மாயமாலமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாம் பரிசுத்தமில்லாமல் தேவனை தரிசிக்கவே முடியாது. எனவே இந்த காரியத்திலிருந்து உடனடியாக மனம் திரும்புவோம்.
வசனத்துக்கு கீழ்படிவோம்.
பரிசுத்த ஆவியானவரே என் நாவை அடக்க எனக்கு உதவி செய்யுங்கள் என்று ஜெபிப்போம்.
நம்முடைய பரிசுத்த ஆவியானவர் தாமே நமக்கு போதித்து, நாம் நடக்க வேண்டிய வழியை நமக்கு காட்டி பரிசுத்த வாழ்வு வாழ நம்மை தகுதிப்படுத்துவாராக
ஆமென்.