உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. உபாகம: 5:12
எனக்கு அன்பானவர்களே!
பரலோக வாழ்வுக்கென்று நம்மை தகுதிப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
பரலோகத்தில் எந்த சபையினர் அதிகம் இருப்பார்கள்?
இன்று பல சபைகள் நாங்கள் மட்டும் தான் பரலோகத்திற்குப் போவோம் என்று மார்தட்டிக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.
இன்னும் தெளிவாக கூற வேண்டுமெனில் நீங்கள் இந்த உபதேசத்தை அல்லது எங்கள் சபையின் உபதேசத்தை ஏற்றுக் கொண்டால் தான் பரலோகத்திற்கு வரமுடியும் என்று பலர் பயமுறுத்துவதுண்டு.
இங்கிலாந்து தேசத்தின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டவரும் அத்தேசத்தில் ஒரு பெரிய எழுப்புதலுக்கு காரணமாக இருந்தவர் ஜான் வெஸ்லி. இவரின் சீரிய ஊழியத்தின் பயனாக வெஸ்லியன் சபைகள் மலருமலர்ச்சி அடைந்திருந்தன.
ஜான்வெஸ்லிக்கு ஆண்டவர் ஒரு தரிசனம் கொடுத்தார். அத்தரிசனத்தில் ஆண்டவர் வெஸ்லியை பரலோகத்திற்கு எடுத்துச் சென்றார்.
பரலோகத்திற்குச் சென்றவுடனே வெஸ்லியின் மனதில் பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.
அவர் ஆண்டவரை திரும்பிப் பார்த்தார். ஆண்டவரோ புன்முறுவலுடன் வெஸ்லியைப் பார்த்தபடி நின்றார். பொறுமையிழந்த வெஸ்லி ஆண்டவரை நோக்கி ”ஆண்டவரே! பரலோகத்தில் எந்த சபையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள் எங்கள் சபையான வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் தானே? “என்று தைரியமாக கேட்டார்.
ஆண்டவரோ சிரித்த முகத்துடன்,” வெஸ்லியன் சபையைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட பரலோகத்தில் இருக்க மாட்டார்கள்” என்று பதிலுரைத்தார். இதை கேட்ட வெஸ்லி பெரும் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவரது காலத்தில் வெஸ்லியன் சபையினர் மட்டுமே பரிசுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர்.
வெஸ்லியன் எழுப்புதலுக்கு முன்பு சபையில் பரிசுத்தத்தைக் குறித்த போதனைகள் மிகவும் குறைவு. அக்காலத்தில் புகைப்பது,குடிப்பது போன்றவை பாவமாக கருதப்படவில்லை. ஆகவே அதிர்ச்சியடைந்த வெஸ்லி, வெஸ்லியன் சபைகளே பரலோகத்திற்கு வரமுடியாது என்றால் யார் வருவார்? என்று யோசித்தார்.
வெஸ்லியன் சபைகளுக்கு அடுத்தாற்போல் வசனத்திற்கேற்ப இருந்த சபை லூத்தர் அவரின் சீர்திருத்தத்தினால் பிறந்த புராட்டஸ்டாண்டு சபைகள் ஆகும். ஆகவே அந்த சபையை சேர்ந்தவர்களாவது பரலோகத்தில் அதிகம் பேர் இருப்பார்கள் என்றெண்ணியவராக,”ஆண்டவரே அப்படியானால் புராட்டஸ்டாண்டு சபையார் அதிகம் பேர் பரலோகத்தில் இருப்பார்களா?” என்று கேட்டார்.
ஆண்டவர் மீண்டும் புன்னகை பூத்தவாறு “அவர்களும் ஒருவர் கூட பரலோகத்தில் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னார். இந்த பதிலை கேட்ட வெஸ்லி மிகவும் நிலைகுலைந்து போனார். வெஸ்லியன் சபைகளுக்கும் பரலோகத்தில் இடமில்லை, புராட்டஸ்டாண்டு சபைகளுக்கும் பரலோகத்தில் இடமில்லை.
கத்தோலிக்க சபைதான் எண்ணிக்கையில் அதிகப்படியானவர்கள். ஆகவே அந்த சபையாராவது சிலர் பரலோகத்தில் இருப்பர்கள் என்று நினைத்து,” ஆண்டவரே! கத்தோலிக்க சபை மட்டும் தான் பரலோகத்திற்கு வருமா?” என்று வினவினார்.
இதற்கும் ஆண்டவர் சிரித்துக் கொண்டே “அவர்களும் ஒருவர்கூட இருக்க மாட்டார்கள்” என்று பதிலுரைத்தார். இப்பதில் வெஸ்லியை முற்றிலும் அதிச்சியுரச் செய்தது.” இந்த உலகத்தில் உள்ள சபைப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் ஒருவர்கூட பரலோகத்திற்கு வரமாட்டார்களெனில், யார்தான் பரலோகத்திற்கு வர முடியும்?” என்று சோர்வாக வெஸ்லி நம் இயேசுவிடம் கேட்டார்.
அப்போது நம் ஆண்டவராகிய இயேசு வெஸ்லியை நோக்கி,” இந்த உலகத்தில் யாரெல்லாம் என்னுடைய இரத்தத்தினால் பாவங்களற கழுவப்பட்டும், மன்னிக்கப்பட்டும் ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே பரலோகத்திற்கு வருவார்கள்.
எந்த சபைப்பிரிவுகளும் பரலோகத்திற்கு வர முடியாது.” (ஏனெனில் பரலோகத்தில் ஒரு சபைதான்.) என்று ஆண்டவர் பதிலுரைத்தார்.
ஆண்டவரின் இப்பதில் மூலமாக வெஸ்லி உண்மையை உணர்ந்து கொண்டார்.
வேதத்தில் பார்ப்போம்,
அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ் செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
எபிரேயர் 13 :12.
முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.
எபேசியர் 2 :13.
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
ரோமர் 5 :9.
பிரியமானவர்களே,
நாமெல்லாரும் பரலோகத்தில் காணப்பட வேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். ஏனெனில் அப்பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லையெனில் நமக்கான இடம் மிகவும் கொடிய இடமாகும்.
அவ்விடம் சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த விழுந்துபோன தூதர் கூட்டத்தாருக்கும் ஆயத்தமாக் கப்பட்டிருக்கிறது. நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலுள்ளது.
ஆகவே தைரியமாக முன்னேறிச் செல்வோம்.
அனேகரை அவ்விடம் கொண்டுவர நம்மாலான எளிய சிறிய பணிகளை ஆண்டவருக்காக செய்வோம்
எனவே இந்த கடைசி காலத்தில் கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் எல்லாவித பிரிவினைகளிலிருந்தும் நம்மை விடுவித்து நாம் இந்த உலகத்திற்குரியவர்கள் அல்ல மாறாக நாம் எல்லாரும் பரலோகத்தை சார்ந்தவர்கள் என்கிற ஒரு குறிக்கோளுடன் நம்மை முழுமையாக கிறிஸ்துவுக்குள் அர்ப்பணிப்போம்.
அது மட்டுமல்லாமல் வேதாகமம் முழுவதும் முழு தொகையாய் அடங்கியிருக்கிற ராஜரிக பிரமாணமான நீ உன்னை நேசிப்பது போல பிறனையும் நேசி என்ற கற்பனையை உண்மையாக பின்பற்றி வாழ ஆரம்பிப்போம். இதுவே நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு செய்யும் சிறப்பான தொண்டாகும்.
இந்த கட்டளையை பின்பற்றினாலே நாம் அநேகரை பரலோகத்திற்குள்ளாக கொண்டு வர முயற்சிப்போம்.
ஆகவே நாம் யாவரும் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரலோக வாழ்வுக்கு நேராக நாம் ஆயத்தப்படுவோம். பிறரையும் ஆயத்தப்படுத்துவோம்.
ஆமென்.







