Daily Manna 6

நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; நீதிமொழிகள்:25 :15

எனக்கு அன்பானவர்களே!

நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு பெரிய செல்வந்தரின் மகள் ஓர் ஏழை இளைஞனைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினாள். இது பற்றித் தந்தையிடம் சொன்னாள்.

எனக்கு வரும் மருமகன் ஏழை என்பதற்காக நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நான் பார்க்க வேண்டும் என்றார் தந்தை.

மறுநாள், தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞனை மகள் அழைத்து வந்தாள்.அவனை ஒரு நாற்காலியில் அமரச் சொன்னார். சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

இளைஞன் நேரம் ஆக ஆக பொறுமையிழந்து
குழப்பத்தோடும், பரபரப்போடும் இருந்தான். அவன் பக்கத்தில் சில துடைப்ப குச்சிகள் சிதறிக் கிடந்தது.

நேரம் ஆக, ஆக ஒவ்வொரு துடைப்பக் குச்சியையும் எடுத்து துண்டு துண்டாக உடைத்துப் போட்டான்.சற்று நேரம் கழித்து செல்வந்தர் தன் மகளோடு அங்கே வந்து சேர்ந்தார்.

இளைஞனை நோக்கி உன்னைச் சோதிப்பதற்காகத் தான் இந்த துடைப்பக் குச்சிகளை இங்கே போட்டிருக்கிறேன். இவைகளை எடுத்து அதோ இருக்கும் துடைப்பத்தோடு சொருகி வைத்து இருக்கலாம்.

அல்லது இவற்றை ஒழுங்காக சேர்த்து பக்கத்தில் வைத்து இருக்கலாம்.
நீயோ இவற்றை துண்டு துண்டாக உடைத்து ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் ஆக்கி விட்டாய் நான் பாடுபட்டு சேர்த்த செல்வம் உன் கையில் கிடைத்தால் என்ன ஆகும்?

இந்தக் குச்சிகளை உடைத்து வீணாக்கியதைப் போல என் செல்வத்தையும் வீணாக செலவு செய்து காலியாக்கி விடுவாய். அதனால் உன்னை நல்ல தகுதி உடையவனாக ஆக்கிக் கொண்ட பிறகு என்னை வந்து சந்தித்துப் பேசு என்றார்.

இளைஞன் தலை கவிழ்ந்தவாறு எழுந்து சென்றான். செல்வந்தரின் மகளும் தந்தை கூறிய நியாயத்தைப் புரிந்து கொண்டாள்.

ஒருவரின் பொறுமை உபத்திரவத்தில் வெளிப்படுவது மட்டுமல்ல, பொறுமையை விருத்தியடையச் செய்வதே உபத்திரவங்கள் தான்.

ஒரு பொறுமைசாலியினால் மட்டுமே கடினமான துன்பமான சூழ்நிலைகளிலும் முறுமுறுக்காமல் தாங்கிக் கொள்ள முடியும்.

வேதத்தில் பார்ப்போம்,

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர் 12 :12.

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.
எபிரேயர் 10 :36.

உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
யாக்கோபு 1 :3.

பிரியமானவர்களே,

ஆவியின் கனிகளில் நீடிய பொறுமை என்பது கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கிய அம்சம் ஆகும்.

’பொறுத்தார் பூமியாழ்வார்’ எனவும் ’பொறுமைக்கும் எல்லை உண்டு’ எனவும் உலகவழக்கில் பலர் சொல்ல, நாம் கேள்விப்பட்டதுண்டு. எல்லையில்லாத பொறுமை, அதாவது தொடர்ச்சியாக நிலைத்து நிற்கும் பொறுமை தான் நீடியபொறுமை.

கடினமான சூழ்நிலைகளில் உறுதிப்பாட்டுடன் தன்நிலையை தக்கவைத்துக் கொள்ளுதல் நீண்ட நேரம் நிதானத்துடன் நடந்துகொள்ளும் நிலை என்ற இருவேறு காரியங்களுக்கும் பொறுமை என்ற ஒரே சொல்லே பயன்படுத்தப்படுகிறது.

பலரும் பலவிஷயங்களில் பொறுமையிழக்கும் போது நாம் பொறுமையுடன் இருந்தால் நம்மில் ஏதோ ஒரு வெறுமை இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை. மாறாக, பொறுமையிழப்பது தான் நம் கிறிஸ்தவ வாழ்வில் ஆவியானவர் செயல்படாத வெறுமையைக் காண்பிக்கிறது.

மேலும், நம்மை பூரணராக்குவதே இந்த பொறுமை தான். ’நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது’ யாக்கோபு 1:4 .ஏன்று பார்க்கிறோம்.

“பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்”
பிரசங்கி 7:8.
“பொறுமையாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள் யாக்கோபு 5:11

நாம் மற்றவர்களிடம் ஒரு காரியத்தை எதிர்பார்த்து, ஏதேனும் ஒரு பொருளுக்காக பொறுமையுடன் காத்திருப்போம். ஆனால் நாம் மற்றவர்களின் கருத்துக்களை
பொறுமையாக காது கொடுத்து கூட கேட்பது இல்லை.
அதற்குள்ளாக நாமே ஒரு முடிவை எடுத்துக் கொள்கிறோம்.

பொறுமை ஒரு நல்ல பண்பு என்பதைக் காட்டிலும் அது ஒரு கிறிஸ்தவப் பண்பு என்பது தான் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் நமது தேவன், அவர் நீடிய பொறுமையுள்ள தேவன்.

நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்’ (எபிரெயர் 6:11,12) என்கிறார் அப்போஸ்தலனாகிய பவுல்.

கர்த்தர் தருகிற வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்ள நீடிய பொறுமையை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *