நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தி:5 :21
எனக்கு அன்பானவர்களே!
நம்மை மீட்டெடுக்க தம் ஜீவனையே தந்த நம் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
.
சென்னையிலுள்ள ஒரு மருத்துவ ஆய்வு நிறுவனம் விஷக் காய்ச்சலுக்காக ஒரு மருந்தை கண்டுபிடித்தனர்.
முதலில் விஷக் காய்ச்சலுக்கு காரணமான கிருமிகளை குதிரையின் உடலில் செலுத்தினர். குதிரையின் உடலில் இயற்கையாகவே, அந்த வைரல் தொற்றை தடுக்கும்படியாக ஒரு நோய் எதிர்ப்பு சக்தி உருவானது.
அந்த நோய் எதிர்ப்பு சக்தியை எடுத்து, தரமான பரிசோதனைகளுக்கு பிறகு அதை மனிதர்களுக்கு செலுத்தினர். ஜனங்களும் குணமடைந்தனர்.
அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள தேவன் நம்முடைய பாவங்களை, அன்பான இயேசு கிறிஸ்து சுமந்து நமக்கு மீட்பை உண்டு பண்ணும் படியாக அவரை சிலுவையில் ஒப்புக் கொடுத்தார்.
நம்மை பிசாசின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் பொருட்டு, அவர் நமக்காக சிலுவையில் பலவிதமான அவமானங்களையும், நிந்தைகளையும் பொறுமையாய் சகித்தார்.
இயேசு தமது ஜீவனையே தியாகபலியாக சிலுவையிலே ஈந்தார். அவர் நம்முடைய பாவங்களையும், அவமானத்தையும், சாபத்தையும் நீக்கி நமக்கு நித்திய வாழ்வை தந்தருளினார்.
இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் விலைக்கிரயமாக வாங்கப்பட்டுள்ளோம். ஆகவே, நாம் தேவனுக்கு முன்பாக ‘நீதியுள்ளவர்களாக’ வாழ வேண்டும்.
வேதத்தில் பார்ப்போம்,
அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத் தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
யோவான் 16 :8.
கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:20
அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக் கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோ 1:20.
பிரியமானவர்களே,
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்திற்கு வந்தார்? ஏனென்றால், தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறார். தமது பிள்ளைகள் பாவத்தினால் தேவ ராஜ்ஜியத்தை இழந்து போவதை அவர் விரும்பவில்லை.
பாவம் என்பது மனிதனை நித்திய அழிவிற்கு கொண்டு செல்கிறதாயிருந்தது. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்காக தந்தருளி, நம்மை அழிவிலிருந்து மீட்டு இரட்சித்தார்
இயேசு உங்களுக்காவும் எனக்காகவுமே சிலுவையில் மரித்தார். நம்முடைய பாவத்தை, சாபத்தை, வேதனைகளையும் அவர் சுமந்தார். இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களோடு வாசம் பண்ணுகிற தேவன் ஒருபோதும் உங்களை கைவிடமாட்டார்.
ஆண்டவர் இன்றைக்கு உங்களை இரட்சிக்க இரு கரம் நீட்டி அழைக்கிறார். ஒருவேளை நீங்கள் கடினமான சூழ்நிலைகளை கடந்து சென்றாலும், ஒருபோதும் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்காதீர்கள்.
அவர் நிச்சயமாக உங்கள் பிரச்சினைகள் யாவற்றினின்றும் உங்களை விடுதலையாக்குவார். தேவனுடைய பாதத்தில் காத்திருங்கள்.
அவருடைய வாக்குத்தத்தங்களை உறுதியாய் பற்றிக் கொண்டு அவற்றை விசுவாசியுங்கள். அவர் நிச்சயமாக உங்களுக்கு அற்புதம் செய்வார்.
நாம் நம்முடைய நீதியினால் அல்ல தேவனுடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.
இந்த இரட்சிப்பை உணர்ந்தவர்களாய் ஒவ்வொரு நாளும் இயேசுவுக்காய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.