நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். நீதிமொழி: 14:32
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை போதகர் பால் யாங்கி சோ அவர்கள் கீழ்கண்ட சம்பவத்தை கூறினார்கள்.
கொரியாவில் Inchon என்னுமிடத்தில் கம்யூனிச தலைவர்கள் ஒரு போதகரையும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை குடும்பத்தோடு பிடித்து,
அவர்களை ஒரு பெரிய குழியில் போட்டு, அந்த போதகரிடம், ‘இத்தனை வருடங்கள் நீ இந்த மக்களை வேதாகமம் என்னும் ஒரு புத்தகத்தை வைத்து, அவர்களை இயேசுவின் வழியில் நடத்தி இருக்கிறீர்.
இப்போது இந்த மக்களின் முன் நீர் கிறிஸ்துவை மறுதலிக்க உணரவேண்டும்.
மறுதலித்தால் நீரும் உம்முடைய குடும்பமும் தப்புவிக்கப்படுவீர்கள். இல்லையென்றால், முதலாவது உம்முடைய பிள்ளைகளையும் பின் உங்களையும் இந்த குழியில் உயிரோடு புதைத்து விடுவோம்’ என்று பயமுறுத்தினர்.
அதை கேட்ட பிள்ளைகள், ‘அப்பா, அப்பா எங்களை நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் சாவதை விரும்பவில்லை’ என்று கதற ஆரம்பித்தனர். அதை கேட்ட தகப்பனின் இருதயம் கரைந்தது. தன் இரு கைகளையும் தூக்கி, ‘நான் என் கிறிஸ்தவ நம்பிக்கையை .. என்று ஆரம்பித்த போது,
பக்கத்திலிருந்த அவரது மனைவி, அவர் ஒரு போதும் ‘ கர்த்தரை மறுதலிக்கமாட்டார்!’ என்று தைரியமாக கூறினார்.
பின்பு தன் பிள்ளைகளிடம், ‘நீங்கள் கவலைப்படாதீர்க
இன்று இரவு நாம் அனைவரும் ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் இன்று விருந்து சாப்பிடப் போகிறோம்’ என்று கூறி உற்சாகப்படுத்தினார்கள்.
பின், ‘In the sweet by and by’ என்னும் பாடலை பாட ஆரம்பித்தார்கள். போதகரும் பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து பாட, கம்யூனிசவாதிகள் மூர்க்க வெறியோடு அவர்கள் மேல் மண்ணை போட ஆரம்பித்தார்கள்.
மண் அவர்களுடைய கழுத்தளவு வரும்வரை அவர்கள் பாடினார்கள்.
அப்படியே அவர்கள் குடும்பமாக மறுமைக்கு கடந்து சென்றார்கள். அந்நேரத்தில் தேவன் அவர்களை விடுவிக்கவில்லை.
ஆனால், அதை பார்த்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் அவர்கள் முகத்திலிருந்த ஒளியை கண்டு கிறிஸ்தவர்களாக மாறினர்.
‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான். யோவா 12:24:25 என்று இயேசுகிறிஸ்து கூறினார்.
கோதுமை மணியாகிய ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், தங்கள் இயேசுவுக்கென்று வாழ்ந்தால், மிகுந்த பலனை கொடுப்பார்கள்.
இல்லையென்றால் கோதுமை மணி தனியே இருப்பது போல் தான் எந்த பிரயோஜனமுமில்லாமல் இருப்பார்கள்.
ஆனால் கர்த்தருக்கென்று வாழ்கிறவனோ, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் பிரயோஜனமாயிருப்பார்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்.
யோவான் 12:24
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான்.
யோவான் 12:25
தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
மத்தேயு 3 :12.
பிரியமானவர்களே,
இந்நாட்களில் இந்தியாவில் அனேக மிஷனெரிகளும், ஊழியர்களும் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அநேக உபத்திரவங்களுக்கு ஊடாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் கோதுமை மணிகளாக, நமது தேசத்திற்கென்று விதைக்கப்படுகிறார்கள். அது ஏற்ற நேரத்தில் முளைத்தெழும்பி, மிகுந்த பலனாக அநேகரை இரட்சிப்பிற்குள் நடத்த போகிறது.
ஒவ்வொரு முறையும் போதகரோ அல்லது ஊழியரோ தாக்கப்படும் போது அல்லது, கிறிஸ்துவுக்காக உயிரை கூட இழக்க நேரிடும் போது நமது தேசம் சீக்கிரமாய் கிறிஸ்துவை அறிந்து கொள்ள போகிறது என்றே அர்த்தம்.
அந்த மாதிரி மிகுந்த உபத்திரவத்திறகுள் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊழியர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாகிய கடமையாகும்.
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. சங்கீதம் 116:15 என்று வேதம் சொல்கிறது.
புதிய ஏற்ப்பாட்டின் முதல் இரத்தசாட்சியான ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட போது, பரலோகத்தில் இயேசுவானவர் நின்று தன்னை வரவேற்பதை கண்டான். அப் 7:55. அது மட்டுமல்ல, அவன் கோதுமை மணியாய் தன்னை அர்பணித்ததால், அப்போஸ்தனாகிய பவுல் தேவ தரிசனத்தை கண்டு இரட்சிக்கப்பட்டார்.
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் பரிசுத்த யோவானையும்,இயேசுவை காட்டிக் கொடுத்த யூதாஸை தவிர மற்ற பத்து பேரும் இரத்த சாட்களாகவே மரித்தனர். அப்போஸ்தலனாகிய பவுலும்கூட இரத்த சாட்சியாகவே மரித்தார்.
அவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்ததால், இன்று உலக முழுவதும் எத்தனை, எத்தனை தடைகளையும் மீறி கிறிஸ்தவம் வளர்ந்து பரவி கொண்டிருக்கிறது.
கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் மற்ற தேசங்களும் சீக்கிரமாய் இரட்சிப்படைய போவதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்.
தேசமெங்கும் கிறிஸ்துவின் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டு, இயேசுவின் வருகைக்கு ஒவ்வொரு மக்களும் தகுதி பட வேண்டும். இதையே தேவனும் எதிர்பார்க்கிறார்.
இத்தகைய ஆசீர்வாதங்களை பெற்று அவரின் வருகைக்கு நாமும்
ஆயத்தப்படுவோம்.
பிறரையும் ஆயத்தப்படுத்துவோம்
ஆமென்.