உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்து கொண்டார். 1 கொரி 1:28
எனக்கு அன்பானவர்களே!
எளியவர்களை உயர்த்தி வைக்கும் உன்னத தேவனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
விஞ்ஞானி ஒருவர்,
தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது.
அருகில் கடை ஏதும் இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது . கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்.
அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்கக் போகும் போது கால் இடறி கீழே விழுந்தார். கையில் வைத்திருந்த போல்ட்கள் அனைத்தும் அருகில் உள்ள ஒரு குட்டையில் விழுந்து விட்டது.
இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.
அந்த வழிப்போக்கன், இவரைப் பார்த்து ஐயா என்ன ஆச்சு என்றான். இவரோ, இவனிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது?’ என்று எண்ணியபடி ஒன்றும் இல்லை நீ போகலாம் என்றார்.
அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான். அப்போது அந்த விஞ்ஞானிக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
‘இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்க சொல்லலாம்’ என்று எண்ணி அவனிடம், ‘நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்,
அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தா’- என்றார் விஞ்ஞானி.
‘ஒ! இது தான் உங்கள் பிரச்சனையா? நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை.
ஆனால் அதை விட ஒரு சுலப வழி ஒன்று இருக்கிறது. மூன்று சக்கரங்களில் இருந்தும் தலா ஒரு போல்ட்களை கழட்டி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியை தயார் செய்து கொள்ளுங்கள்.
பிற்பாடு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு ஓட்டிச் சென்று 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்’- என்று சொன்னார் வழிப்போக்கர்.
‘நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும், எனக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே! இவரைப் போய் குறைத்து எடை போட்டு விட்டேனே!’ என்று தனக்குள் கூறிக் கொண்டு தலை குனிந்தார் விஞ்ஞானி.
ஆம், நாம் யாரையும் குறைவாக எண்ணக் கூடாது.
உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;
உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு;
நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம். எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம். நாம் யாரை எளியவர்களாக எண்ணுகிறோமோ அவர்களுக்கு கர்த்தரே துணையாக இருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.
1 நாளா29 :12.
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:10.
வீடு கட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
அப் 4 :11.
பிரியமானவர்களே,
இன்றைக்கு குடும்பங்களிலும், சபைகளிலும் , வேலை செய்கிற இடங்களிலும், படிக்கிற இடங்களிலும் ஏழைகளை புறக்கணிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கென்று குரல் கொடுக்கவோ, பரிந்து பேசவோ, அநேகர் முன் வருவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
இயேசு கிறிஸ்து இந்த சிறியரில் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று இயேசு சொன்னதை அநேகர் மறந்து விட்டார்கள்.
இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்18-1.என்றார்.
இன்றைக்கு இயேசு கிறிஸ்து காட்டிய மனத்தாழ்மை என்பதை அணிந்து கொள்ளாமல் தங்கள் அந்தஸ்தை காட்டுவதற்காக கிறிஸ்துவை கொண்டாடுவதில் என்ன பயன்??
இயேசு தன்னை போல பிறனை நேசிக்க வேண்டும் என்று சொன்னார். இந்த உயர்ந்த கொள்கையை தேவ சபையிலே கூட பின்பற்றுவதில்லையே!!
இயேசுவின் சிந்தை உடையவர்களாக இருங்கள் என்றும் கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனில்லை என்றும் வேதம் சொல்கிறது,
நான் உலகத்தை இரட்சிக்கவே வந்தேன் என்று இயேசு கிறிஸ்து சொன்னார் பாவிகளை இரட்சிக்கவே இயேசு வந்தார்.
இயேசுவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்குள் உண்டாயிருக்கிறது.
இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வந்த நோக்கம் நம் வாழ்க்கையில் நிறைவேற்றாமல் நாம் விழுந்து விழுந்து ஆராதிப்பதில் எந்த ஒரு பிரயோஜனம் இல்லை!!
ஆகவே நாம் நம்மை நேசிப்பது போல பிறரையும் நேசிப்போம். சிறியோராகிய மற்றவர்களை அற்பமாக எண்ணாமல் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் நம் யாரோடும் நிறைவாய் தங்கி இருப்பதாக.
ஆமென்