Daily Manna 71

இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. எபிரேயர் 9:22

எனக்கு அன்பானவர்களே!

நம்மை விலைக்கிரயமாய் மீட்டெடுத்த அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அமெரிக்க தேசத்தில் ஒரு ஊழியர், அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு வயதான கருப்பின மனிதர் ஒரு கண்ணாடிப் பெட்டியைப் பார்த்து அழுது கொண்டிருந்தார்.

தேவ ஊழியர் அந்தப் பெரியவரிடம் பரிவோடு சென்று ஐயா ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என்று அன்புடன் விசாரித்தார்.

அந்தப் பெரியவர் அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த ஒரு வஸ்திரத்தை சுட்டிக்காட்டி ஐயா இந்த ஆடையைக் கவனித்தீர்களா இந்த ஆடையில் உள்ள இரத்தக் கரையைப் பாருங்கள் என்றார்.

பின்பு தன்னுடைய சட்டையைக் கழட்டி தன்னுடைய இடுப்புப் பகுதியிலிருந்த காய்ப்புப் பிடித்த தழும்புகளைக் காட்டினார்.

ஊழியருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் ஐயா அந்த கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் வஸ்திரத்திற்கும், உங்கள் இடுப்பிலிருக்கும் தழும்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.

அந்தப் பெரியவர் கண்ணீரோடு சொன்னார்.
ஐயா ஒரு காலத்தில் நாங்கள் அடிமைகளாக இருந்தோம் எங்கள் இடுப்புகளில் வளையங்கள் போட்டு எங்களை மிருகங்களைப் போல கட்டி வைத்து வேலை வாங்கினார்கள்.

அந்த கட்டுகளினால் உண்டான தழும்புகள் தான் என்னுடைய இடுப்பில் காணப்படுகிறது. இதோ இந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் இருப்பது எங்கள் மீட்புக்காக போராடின ஆபிரகாம் லிங்கனுடைய ஆடைகள்.

எங்களுக்கு உதவி செய்ததால் அவரை சுட்டுக் கொன்று விட்டார்கள்.
அவரது இரத்தம் தான் அந்த ஆடையில் படிந்திருக்கிறது. இப்போது எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது.

ஆபிரகாம் லிங்கனுடைய இரத்தம் சிந்தப்பட்டதால் எங்கள் நீக்ரோ சமுதாயம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். அதை நினைத்துத் தான் கண்ணீர் வடிக்கிறேன் என்றாராம்.

எனக்கு பிரியமானவர்களே,
நமது இயேசுவும் அப்படித்தான். தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி நம்மை மீட்டெடுத்தார். அவருடைய இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம்.

இந்த பூமியில் இதுவரை பிறந்தவர்கள், இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்க இயேசு கிறிஸ்துவின் இரத்தம் போதுமானதாக இருப்பது மனுக்குலத்துக்கு கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதம்!

வேதத்தில் பார்ப்போம்,

குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக் குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே
1 பேதுரு 1:19.

அவருடைய (இயேசு ) இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14

இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம்.
எபிரேயர் 10:10

பிரியமானவர்களே,

இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் சிந்தின இரத்தம் விலையேறப் பெற்ற இரத்தமாகும். பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் விலை உண்டு.

செவ்வாய் கிரகத்திலுள்ள இடத்தைக் கூட ஒரு மனிதன் விலை பேசினான். சூரியனுக்குக்கூட அதன் எரிபொருள் சக்தியை வைத்து (சோலார்) மனிதன் விலையை நிர்ணயிக்கலாம். ஆனால் பாவமற்ற பரிசுத்த இரத்தத்திற்கு எவ்வாறு விலை நிர்ணயம் பண்ண முடியும்?

கல்வாரியைத் தவிர எங்குமே கிடைக்காத ஒன்று. அதனால் தான் அது விலையேறப் பெற்றது. எனவே தான் இயேசுவும் இந்த பரிசுத்த இரத்தத்தையே பரலோகத்திலுள்ளவைகளில் மேன்மையான பலியாக பிதாவுக்கு ஒப்புக் கொடுத்தார்.

சாலமோன் ஞானி இந்த பரிசுத்த இரத்தத்தின் விலையேறப் பெற்ற தன்மையையும் மேன்மையையும் உணர்ந்திருந்தான். அதனால் தான் அவன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணும் பொழுது பாவ மன்னிப்பிற்காக 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான்.

பாவத்திற்கு கிரயம் செலுத்த வேண்டுமென்றால் ஒருவனாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு வேளை உலகமனைத்தும் ஒன்று கூடினாலும் கிரயத்தை செலுத்த முடியாது.

இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற, பரிசுத்த இரத்தம் ஒன்றே மனுக் குலத்தின் பாவத்தை நீக்கி மறுவாழ்வு கொடுக்க முடியும்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நமக்கு நித்திய ஜீவன் உண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே பரிசுத்தமானது.

அந்த பரிசுத்தமான இரத்தத்தால் நாம் மீட்கப்பட்டோம் என்பதை உணர்ந்தவர்களாய் வாழ இயேசு கிறிஸ்து நம்மை அன்பாய் அழைக்கிறார்.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *