Daily Manna 72

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. பிலிப்பி: 3 :30

எனக்கு அன்பானவர்களே!

பரலோக தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இன்று மனிதன் பூமிக்குரிய ஆசீர்வாதத்தையே தேடுகிறான். அவன் நினைவெல்லாம் இந்த பூமிதான்! இந்த பூமி் தன்னுடைய நிரந்திர சொந்தமான இடம் என்று நினைக்கிறான்.இது நமக்கு ஒரு தற்காலிகமான இடம்.

ஒரு மனிதர் ஒரு கிராமப்புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் அவர் செல்லும் வழியை தவற விட்டு விட்டார்.

யாரிடமாவது வழி கேட்கலாம் என்று நினைத்தவராக ஒரு வீட்டின் கதவை தட்டினார். அங்கு இருந்த ஒரு மூதாட்டி கதவை திறந்தார்கள்.

என்னப்பா என்று கேட்ட போது, தன் வழியை தவறவிட்டதாகவும், வழி கேட்க வேண்டி உங்கள் கதவை தட்டியதாகவும் அந்த மனிதர் கூறினார்.

அப்போது அந்த வயதான அம்மா அவரை வீட்டிற்குள் அழைத்து தண்ணீர் கொடுத்து சாப்பிட்டு செல்லுமாறு கூறினார். உள்ளே வந்த மனிதருக்கு ஆச்சரியம், அந்த வீட்டில் ஒரு மேசை, இரண்டு நாற்காலிகள், ஒரு பழைய கட்டில் போன்றவை வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தது.

அதைக் கண்ட அவர், அந்த தாயாரிடம், ‘என்னம்மா வீட்டில் ஒன்றுமே இல்லை?’ என்றுக் கேட்டார்.

அதற்கு அந்த தாயார், ‘உன்னுடைய பொருட்கள் எல்லாம் எங்கே’ என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், ‘நான் எப்படி என் பொருட்களை நான் போகும் இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும்? . நான் வழி போக்கனாயிற்றே?’ என்று கூறினார்.
அப்போது அந்த தாயார், ‘நானும் அப்படித்தான்’ என்றுக் கூறினார்கள்.

பிரியமானவர்களே, நமக்கு இந்த பூமி சொந்தமல்ல, நாம் வழிப்போக்கர்களைப் போல தான் இங்கு வாழ வேண்டும், ஜீவிக்க வேண்டும்.

ஏனெனில் நம்முடைய குடியிருப்பு இந்த உலகத்தில் அல்ல, அது பரலோகத்தில் இருக்கிறது.

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள், பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள் எபிரேயர் 11:13.

அவர்கள் எத்தனையோ செல்வமிக்கவர்களும், செல்வ சீமான்களாயிருந்தும், அவர்கள் இந்த பூமியை தங்களுக்குத் தான் என்று சொல்லவில்லை.

அவர்கள் இந்த பூமியில் தங்களை அந்நியர்கள் என்றும், பரதேசிகள் என்றும் சொல்லி, இந்த பூமியைப் பார்க்கிலும் எல்லா விதத்திலும் அதிக மேன்மையான பரம தேசத்தையே விரும்பினார்கள்.

சிலருக்கு “பரதேசி” என்று சொன்னால் கோபம் வரும். ஆனால் பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் தங்களை பரதேசிகள் என்று தான் சொல்லிக் கொண்டார்கள்.

அதைப் போலவே நாமும் இந்த உலகத்திற்குரிய காரியங்கள் யாவும் அழிந்து போகப் போகிறதை நினைவு கூர்ந்தவர்களாக பூமிக்குரியவைகளை அல்ல, மேலானவைகளையே நாடக் கடவோம்.

வேதத்தில் பார்ப்போம்,

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பிலிப்பியர் 3:20

கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
சங்கீதம் 11 :4.

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.
யோவான் 14

பிரியமானவர்களே,

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது என்பதற்கு அர்த்தம் நம்முடைய குடியுரிமை மற்றும் நாம் தான் குடிமக்கள். நம்முடைய எல்லாமே பரலோகம் தான்.

நாம் இந்தியாவின் குடிமகன் என்பதிலோ அமெரிக்காவின் குடிமகன் என்பதிலோ பெருமையடையலாம். ஆனால் பரலோகத்தின் குடிமகன் என்பது மற்ற எல்லா நாட்டின் குடியுரிமையைக் காட்டிலும் சிறந்தது.

ஆகவே பரலோகத்தின் குடியுரிமை பெறவும், குடிமகனாக மாறுவதற்கும் நமக்கு தகுதி வேண்டும். எல்லாருமே அந்த தகுதியை பெற்று விட முடியாது.

ஒரு நாட்டிற்கு செல்ல வேண்டுமானால், பாஸ்போர்ட், விசா போன்றவை எத்தனை முக்கியமோ அதைப் போல பரலோகம் செல்வதற்கும் நமக்கு தகுதி இருக்க வேண்டும்.

இயேசு கிறிஸ்து யார்? என்பதை நாம் நன்கு அறிய வேண்டும். பின்பு இரத்தத்தால் கழுவப்பட்டிருக்க வேண்டும். கழுவப்படாவிட்டால் நமக்கு அந்த உரிமை என்றுமே கிடையாது. இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் அவரின் பிள்ளைகள் தான்.

அந்த பரலோக ராஜ்யத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமானால், இந்த உலகத்தில் நாம் வாழும் போது பரிசுத்தமாய் வாழ வேண்டும். பரிசுத்தமில்லாமல் நாம் தேவனை தரிசிக்க முடியாது என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

எலியா எலிசாவை அழைத்த போது, எலிசா எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தார். நானும், நீங்களும் கிறிஸ்துவுக்காக வாழ்வதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

உலக ஐஸ்வா்யம் சம்பத்துக்களை விட்டவனே தேவனுக்காக வாழ முடியும். ஊழியம் செய்ய முடியும். ஒரே சமயத்தில் இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்வதை தேவன் ஒரு போதும் விரும்புவதில்லை.

இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!

பிரியமானவர்களே, நாம் இந்த உலகத்தில் வாழ்வதே பரலோகம் போய் சேர வேண்டும் என்பதற்காகவே. ஆகவே கொடுக்கப்பட்டிருக்கிற நாட்களில் நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பரிசுத்தமாய் நம்மைக் காத்துக் கொள்வோம்.

அப்போது கர்த்தருடைய வருகையில் நாம் யாவரும் எடுத்துக் கொள்ளப்படுவோம். அவரோடு என்றென்றும் அரசாட்சி செய்து, அவருடனே வாழுவோம்.

இத்தகைய பரலோக பாக்கியத்தில் பங்கடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *