உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11
எனக்கு அன்பானவர்களே!
நம்மை பாதுகாத்து வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஆப்பிரிக்கா தேசத்தின் இரட்சிப்புக்காகத் தன்னை அர்ப்பணித்த தேவமனிதனாகிய டேவிட் லிவிங்ஸ்டனை, கொலை செய்வதற்காகச் சிலர் துப்பாக்கிகளோடு இவர் இல்லம் தேடி வந்த போது,
அவர் தேவனோடு உறவாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு முன்பாக ஒரு விஷ நாகபாம்பு படம் எடுத்துக் கொண்டிருந்தது.
அதைக் கண்ட அந்த குண்டர்கள், நாம் ஏன் இவனைக் கொலை செய்ய வேண்டும். அந்த நாகம் கடித்து சற்று நேரத்தில் அவன் மடிந்து போகப் போகிறான், என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
இதை அறியாத தேவமனிதன், ஜெபித்துக் கொண்டிருந்தார். நாகம் தலையைக் கவிழ்த்துக் கொண்டு, தான் வந்த பாதையை நோக்கி நகர்ந்தது.
அதை அவதானித்த குண்டர்களுக்கு பயம் பிடித்தது. ஒருவரை ஒருவர் பார்த்து இவன் சாதாரண மனிதன் அல்ல. இவன் கடவுளுடைய அவதாரம் என்று திரும்பிப் போய் விட்டார்கள்.
தாவீது ஒரு முறை சவுலின் கைக்குத் தப்ப வாய்ப்பே இல்லை என்று நினைக்கும் போது, ஓருவன் சவுலினிடத்தில் வந்து, தேசத்தின் மேல் பெலிஸ்தியரின் படை வருகிறது என்றான்.
அப்போது சவுல் தாவீதை விட்டு விட்டு, பெலிஸ்தியரை முறியடிக்க தன்னோடு இருந்தவர்களை அழைத்துக் கொண்டு போன போது எப்படி தாவீது விடுவிக்கப்பட்டார அவ்விதமாக டேவிட் லிவிங்ஸ்டனையும் கர்த்தர் விடுதலை செய்தார்.
நம்மையும், நம் குடும்பத்தையும், நம் பிள்ளைகளையும் பாதுகாக்கவும் தப்புவிக்கவும் நம் தேவன் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.
வேதத்தில் பார்ப்போம்,
கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.
சங்கீதம் 41:2.
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
சங்கீதம் 91 :11.
நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்(லுகிறார்)
எரேமியா 1:8.
பிரியமானவர்களே,
இந்த மனிதர் தேவனை நம்பி இருந்தபடியால், அவருடைய ஆபத்து காலத்தில் தேவன் அவரை காப்பாற்றினார்.
வசனம் சொல்கிறபடி ‘எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது’ என்று வாசிக்கிறோம்.
கிறிஸ்துவின் அடைக்கலத்தில் வந்த ஒவ்வொருவருக்கும் அவரே புகலிடமாக தஞ்சமாக இருக்கிறார். நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிற பாதுகாப்பு அவராலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது
நாம் அறியாதபடி நம்மை சூழ்ந்து இருக்கிற ஆபத்துகள் அதிகம். நாம் அறியாதபடி நாம் மாட்டி கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும் நாம் தேவனை அறிந்து, அவருக்குள் இருக்கும்போது அவர் நம்மை பாதுகாத்து, நம்மை சுற்றி வேலியடைத்து காத்து கொள்கிறார்.
யோபு புத்தகத்தில் நாம் வாசிக்கும் போது, சாத்தான் தேவனிடம், கேட்கிறான், ‘நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?’ யோபு 1:10 என்று கேட்கிறான்.
அப்படியென்றால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவரையும், அவர்களுடைய வீட்டையும், அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி தேவன் அவர்கள் அறியாமலே அவர்களை வேலி அடைத்து வைத்து காக்கிறார்.
இத்தகைய பாதுகாப்பிற்குள் நாம் இருக்கும் போது நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை.
நம்மை பாதுகாப்பவர் நம்முடைய முடிவுபரியந்தமும் நம்மை வழிநடத்தி காக்க வல்லவர்.
அவருடைய பாதுகாப்பில் வாழ்ந்து ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.