Daily Manna 75

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மத்தேயு 6 :14

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு பெண்மணி புற்று நோயினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிகபட்சம் ஆறு மாதங்களே உயிரோடிருப்பாள் என மருத்துவர்கள் கூறி விட்டனர்.

ஒரு நாள் மருத்துவர்கள் தனக்கு சொன்ன முடிவை தனது 12, மற்றும்14 வயது மகன்களிடம தெரிவித்தாள். உடனே மூத்தவன் ஒரு வேதாகமத்தை கொண்டு வந்து தாயின் அருகில் அமர்ந்து மாற்கு 11:24-ஐ வாசித்தான்.

‘ஆதலால், நீங்கள் ஜெபம் பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்’ என்ற வசனத்தை கேட்டவுடன் அவன் தாய் ஆச்சரியப்பட்டாள்.

அவள் ஒரு கிறிஸ்தவளாயிருந்தாலும் இந்த வசனம் வேதத்தில் இருப்பதை அறிந்திருக்கவில்லை. அன்றிரவு படுக்கைக்கு செல்லுமுன் மகன் வாசித்த தேவ வசனத்தை எடுத்து வாசித்தாள். அதை தொடர்ந்துள்ள வேத வசனங்களையும் வாசிக்க தூண்டப்பட்டாள்.

‘நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி அந்த குறையை அவனுக்கு மன்னியுங்கள்’. – வசனம் 25. என்றது.

இவ்வசனம் அவளுடைய உறவினர்கள் பேரில் அவளுக்கிருந்த மன்னிக்க முடியாத வைராக்கியத்தின் ஆவியை அவளுக்கு உணர்த்திற்று.

தன் உறவினர்கள் அனைவரையும் மன்னிக்க தனக்கு உதவி செய்யும்படி கர்த்தரிடம் மனங்கசந்து அழுது மன்றாடினாள். என்ன ஆச்சரியம்! அநேக மாதங்களாக நித்திரையின்றி கஷ்டப்பட்ட அவள், ஒரு குழந்தை தன் தாயின் கரங்களில் உறங்குவதுபோல, அன்றிரவு நன்றாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்ந்து மருத்துவரை காண சென்றாள். புற்று நோய் முற்றிலும் மறைந்தது இருப்பதை கண்டு மருத்துவர்கள் பிரமிப்படைந்தனர்.

இப்போது நல்ல சுகத்துடன் புற்று நோயாளிகள் மத்தியில் ஊழியக்காரியாக தொண்டு செய்து வருகிறாள்.

மன்னிப்பு என்பதற்கான கிரேக்க பதத்திற்கு “விடுதலையாக்குதல்” என்ற ஒரு அர்த்தமும் உண்டு.

நமக்கு விரோதமாக தவறிழைத்தவர்களை மன்னிப்பதின் மூலம் நாம் அவர்களை விடுதலையாக்குவதோடு மட்டுமல்லாமல், நம்மையும் விடுவித்து கொள்கிறோம்.

மற்றவர்களை முழு இருதயத்தோடும் மன்னிக்க முடியாதவர்களால் மெய்யான விடுதலையை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.

பிறரை மன்னிக்க முடியாத ஆவி, கோபம், வைராக்கியம், பழி வாங்குதல், கசப்பு, சீற்றம் முதலான குணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நோய் நிறைந்தவர்களாகவே காணப்படுவார்கள்.

தனக்கு தீங்கிழைத்தவர்களை மன்னித்து, தங்களுடைய இருதயத்திலிருந்து அவர்களிடம் அன்புகூருகிறவர்கள் யாவரையுமே
தேவன் தமது இரத்தத்தால் சம்பாதித்த பிள்ளைகளே !

அவர்களால் மட்டுமே பிறரின் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும், அன்புக்கூரவும் முடியும்.
அன்பின் ஆண்டவர் கூறுகின்றார். அவர்கள் கனிகளால் அவர்கள் யாரேன்று அறிய முடியும் என்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கொலோ 3 :13.

யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.
யோபு 42:10

அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கிமீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி (னார்)
சங்கீதம் 103: 3-4

பிரியமானவர்களே,

மன்னித்தல் நொறுங்கிய இருதயங்களை குணமாக்கும், முறிந்துபோன விவாகங்களை இணைத்து விடும். சிதைந்து போன வாழ்க்கையை சீர்படுத்தி விடும்;. தகர்ந்து போன குடும்பங்களை ஒன்றாக்கிவிடும்.

மன்னிக்கும் ஜனங்களுக்கு மாத்திரமே ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
இவர்கள் மட்டுமே, சிறந்ததொரு வருங்காலத்தை மற்றவர்களுக்கு வழங்கக் கூடும்

பிறரை மன்னிக்க முடியாதவர்கள் மரிக்கும்போது கூட பற்களை கடிக்கின்றனர் என முதியோர் கூறுவார்கள். ஆனால் நம்முடைய அருமை ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும் போது, உரைத்த ஏழு வார்த்தைகளில் முதலாவதும், கடைசியும் ‘பிதாவே’ என ஆரம்பிக்கின்றன.

1.பிதாவே இவர்களுக்கு மன்னியும், 2.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன். பிறரை மன்னித்தவர்களால் மாத்திரமே தங்கள் ஆவியை பிதாவின் கரங்களில் சமாதானத்துடன் ஒப்புக் கொடுக்க முடியும்.

பிறரை மன்னிக்க முடியாதவர்கள் மரிக்கும் போதும் வைராக்கியம், கோபம் கசப்புடனே புறம்பான இருளுக்குள்ளும் செல்லுவர் என்று பார்க்கிறோம்.

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
மத்தேயு 5:3 என்று பார்க்கிறோம்.

நாமும் இந்த தபசு நாட்களில் மற்றவர்களை மன்னிப்போம். இவ்வுலகில் நாம் சுகமுடன் விடுதலையோடு வாழ்வோம்.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *