உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும். ஏசாயா 1:18.
எனக்கு அன்பானவர்களே!
நம்மை விடுவிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
D.L. மூடி என்ற தேவ மனிதர் ஒரு கூட்டத்தில் பிரசங்கித்த பொழுது அநேகர் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனம் திரும்பினார்கள்.
கூட்டம் முடிந்தவுடன் ஒரு முரட்டு மனிதன் மூடியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ மூடி நீ என்னோடு வா” என்றான்.
மூடியை அந்த கூட்டத்திற்கு அழைத்திருந்த போதகர் மூடியிடம், “ஐயா, அவன் ஒரு கொலைகாரன். நீங்கள் அவனோடு போக வேண்டாம்” என்றார். பிரசங்கத்தை முடித்திருந்த மூடிக்கு ஆவிக்குரிய தைரியம் ஏற்பட்டது.
அந்த முரட்டு மனிதனுடன் காரில் ஏறினார். கார் பட்டணத்தைக் கடந்து காட்டுப் பாதையில் சென்றது. மூடி காருக்குள் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தார். கார் ஒரு பாழடைந்த பங்களாவில் சென்று நின்றது.
முரட்டு மனிதன் மூடியை இறங்கச் சொன்னான். பங்களாவிற்குள் இருவரும் சென்றார்கள்.
ஒரு அறையைத் திறந்தான் முரடன். உள்ளே மதுபாட்டில்கள் குவிந்து கிடந்தன. முரடன் மூடியைப் பார்த்து, “இவைகளையெல்லாம் இயேசு மன்னிப்பாரா?” என்று கேட்டான்.
மூடி சமாதானமாய் அவனிடம் “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்
I யோவான் 1: 7” என்றார்.
அடுத்த அறை முழுவதும் எலும்பு கூடுகளால் நிறைந்திருந்தன. முரடன் மூடியைப் பார்த்து, “இவைகளெல்லாம் நான் கொன்றவர்கள். இயேசு இதையும் மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி சமாதானமாய் அவனிடம் “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்றார்.
அடுத்த அறையில் தான் கொள்ளையடித்த அனைத்து தங்கம் வெள்ளி போன்ற பொருட்களையும் காண்பித்து, “இயேசு இதையும் மன்னிப்பாரா?” என்று கேட்டான். மீண்டும் மூடி சமாதானமாய் அவனிடம் “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” என்றார்.
அதன் பிறகு மலை அடிவாரத்திற்கு மூடியை அழைத்துச் சென்றான் முரடன். அங்கே ஒரு சிறிய குடிசை இருந்தது. முரடனின் மனைவி நோய்வாய்ப்பட்டு அந்த கட்டிலில் படுத்திருந்தாள். அருகில் அவனது 12 வயது மகள் முகத்தில் தீக்காயங்களுடன் அழுது கொண்டிருந்தாள்.
முரடன் மூடியைப் பார்த்து, “இவள் என் மனைவி. குடித்து விட்டு வந்து தினமும் இவளை நான் சித்திரவதை செய்வேன். நேற்று இவளை அடித்த பொழுது என் மகள் தடுத்தாள். அவளைத் தள்ளிய பொழுது, அவள் விளக்கில் விழுந்ததால் அவளுடைய முகம் கருகிற்று.
உன் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, என்னைப் போன்ற கொடூர குணமுள்ள மனிதனை மன்னிப்பாரா?” என்று கேட்டான். மூடி மீண்டும் மௌவுனமாக அவனிடம், “நீ பாவங்களை விட்டு மனந்திரும்பி இயேசுவிடம் வரும்பொழுது, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, உன்னைச் சுத்திகரிக்கும்” என்றார்.
உடனே மூடியின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதான் முரடன். கர்த்தாவே என்னை மன்னித்தருளும், ஆண்டவரே என்னை மன்னித்தருளும் என்று கதறி அழுதான்.
வேதம் சொல்லுகிறது
லூக் 15:7.
மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் .
அன்றைக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரலோகத்தின் பிரஜை ஆனான்.
வேதத்தில் பார்ப்போம்,
மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசே 18 :32.
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
லூக்கா 5 :32
அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
மத்தேயு 4 :17.
பிரியமானவர்களே,
பாவமும், பாவசெயல்களும், பாவத்தை தூண்டிவிடும் காட்சிகளும் தினம் தினம் பெருகி வரும் உலகிலே நாம் வாழ்ந்து வருகின்றோம்.
அக்கிரமங்களின் பெருக்கத்தினால் நாம் அனைவரும் பயத்தோடும், கலக்கத்தோடும் இருக்கிறோம். இந்த அளவுக்கு மோசம்போக காரணம் என்ன? இதற்கு. பரிகாரம் உண்டா? அறிவும், அறிவியலும் அதன் உச்சகட்டத்தை தாண்டியும் பலன் இல்லையே.
இங்கே தான் யாவையும் படைத்த தேவனுடைய வல்லமை விளங்குகிறது. பரிசுத்த வேதாகமத்தில்
2 தீமோ 3:1 சொல்கிறது. கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
இப்படி பாவத்தில் மூழ்கின மக்கள் நிம்மதியை இழந்தவர்களாகவும், வாழ்க்கையை வெறுத்தவர்களாகவும், பாவ செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும் காணப்படுகிறார்கள். என்று வேதம் கூறுகிறது.
ரோமர் 6:23- ல் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டு செத்து செத்து பிழைத்து கொண்டேயிருக்கிற எண்ணிக்கையற்ற கைதிகள் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள்.
அந்த நிலையில் இருந்த ஒரு கைதியைப் பற்றி பைபிள் கூறுகிறது பாருங்கள். லூக்கா 23:19, யோவான் 18:40 பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கொலை பாதகத்தினிமித்தமும், கலகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
மரண சாசனம் எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த பரபாசை விடுவிக்க ஒருவருமில்லை. பரபாசின் நாட்கள் எண்ணப்பட்டிருந்தது. அவன் கதறி அழுகிறான். என்னை யார் விடுதலையாக்குவார். ரோமர் 7:24.என்று வாசிக்கிறோம்.
ஆண்டவர் சொல்லுகிறார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
மத்தேயு 11:28 ஆண்டவர் நமக்கு வாக்குறுதி கொடுக்கிறார்.
உன்னை நான் என் உள்ளங்கையில் வரைந்துள்ளேன். நீ எனக்குரியவன் என்று இயேசு கூறுகிறதும் அல்லாமல் உன் பாவங்களின் தண்டனை அனைத்தையும் நான் ஏற்றுக் கொண்டேன் என்று சொல்லி பரபாஸ் என்கிற கைதியை சிறையினின்று விடுதலை பண்ணுகிறார்.
நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்காக பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள். 1 யோவான் 3:1. இனிமேல் பரபாஸ் என்பவன் கைதி இல்லை. அவன் நீதிமான் என்று தீர்க்கப்பட்டார்.
அந்த முரடனைப் போல
அவனுக்காக இயேசு தண்டிக்கப்பட்டார். யார் இந்த பரபாஸ்? நானும் நீங்களும் தான். நமக்காக அவர் தமது உடம்பிலே 5 விதமான காயங்கள் ஏற்றுக்கொண்டார். அவருடைய உடல் நமக்காக நொறுக்கப்பட்டது. ஆம் இந்த சிலுவை நமக்காகத் தான்.
ஏசாயா 1:18-ல் உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் ரத்தாம்பர சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். ஆதலால் நாம் பரிசுத்தமாக்கப்படுவதற்காகவும், பாவ சிறைக்கு நீங்கலாக்கப்படவும் அவர் சிலுவையை ஏற்றுக் கொண்டார்.
ஆகவே நாம் யாவரும் இயேசுவின தியாகத்தை உணர்ந்தவர்களாய் வாழ கர்த்தர் தாமே நமக்கு கிருபை பாராட்டுவாராக.
ஆமென்.