நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார். லூக்கா 6 :38
எனக்கு அன்பானவர்களே!
மன்னிப்பதில் வள்ளலாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு வயதான தாய் தன்னுடைய ஒரே மகளுடன் வசித்து வந்தாள். அவளுடைய சம்பாத்தியத்தில் தான் இருவரும் வாழ்ந்து வந்தார்கள்.
ஒருநாள் அந்த மகள் வேலைக்கு சென்று திரும்பி வரவில்லை. தன் மகளைக் காணாமல் பதைபதைத்து, காவலனிடம் புகார் அளித்தார்.
அவர்கள் அந்த மகளின் சடலத்தை சாலையில் கண்டுபிடிக்க முடிந்தது. அவளைக் கொலை செய்தவன் கண்டுபிடிக்கப்பட்டான். அந்தத் தாய், அவனது மரண தண்டனைக்காக காத்திருந்தாள்.
ஆனால் அவனுக்கோ ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு வந்தது. அந்தத் தாய் அவனது போட்டோவை சுக்குநூறாக கிழித்தெறிந்தார்கள். அப்பொழுது தான் பரிசுத்த ஆவியானவரின் மெல்லிய சத்தத்தை கேட்டாள்,
“மகளே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட நீ அவனை மன்னித்துவிடு” என்று சொல்லக் கேட்டார்கள். ஆகவே, அவள் அவனை மன்னித்து, அவனுக்கு ஒரு வேதாகமத்தையும், அதனுள் மகனே உன்னை நான் மன்னித்து விட்டதற்கு அடையாளமாக இந்த வேதாகமத்தை அனுப்புவதாகவும், அதை தினந்தோறும் வாசிக்கும்படியும், ஒரு கடிதத்தை வைத்து அனுப்பினார்கள்.
சில வாரங்கள் கழித்து அவனிடமிருந்து பதில் வந்தது. தன்னை மன்னித்ததற்கு நன்றி , நான் ஒரு அனாதை, அதனால் தான் நான் மிருகமாக நடந்து கொண்டதாகவும், தனக்கு ஒரு தாய் கிடைத்துள்ளதாகவும்,
அந்த மகள் ஸ்தானத்தில் இருந்து நான் வெளியே வந்தபின் அவர்களைக் காப்பாற்றுவதாகவும் எழுதினான். அந்தத் தாய் தனக்கு கிடைத்த புதிய மகனுக்காக வாழ ஆரம்பித்தார்கள்
பிரியமானவர்களே, “மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்…” (லூக்கா 6:37). ஒருவரை மன்னிக்க முடியாமலிருந்தால், அது நமக்குள் தீங்கு மற்றும் வியாதியைக் கொண்டு வரும்.
ஆகவே, தவறிழைத்தவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். நாம் செய்த தவறுகள் மன்னிக்கப்படும் போது, நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் யாரையாகிலும் நீங்கள் மன்னிக்க முடியாத நிலையிலிருந்தால், இன்றைக்கு ஆண்டவரிடத்தில் கேளுங்கள்.
அவர் உங்களுக்கு மற்றவரை மன்னிக்கும் இருதயத்தை தருவார். இன்றே மன்னித்து புது உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக் கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்;
ஏசாயா 55:7
நீங்கள் ஜெபம் பண்ணும் போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.
மாற்கு 11:25
அவருடைய வசனத்தைக் கைக் கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
1 யோவான் 2:5
பிரியமானவர்களே,
அன்பு என்பது தொடர்பு இல்லாத ஒன்றை கண்டு , அதன் மேல் அளவில்லாத பற்று வைப்பதுதான் அன்பு என்பதாகும்.
வேதம் சொல்லுகிறது, தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.
அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார்.
மீகா 7:19 என்று பார்க்கிறோம்.
என் அன்பு சகோதர சகோதரிகளே, ஒருவர் தவறிழைக்கும் போது அவர்களை மன்னிக்கக் கூடிய சுபாவம் நமக்கு இருக்க வேண்டும்.
ஆவியின் கனிகளோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்..
கலா 5:22-23. இந்த குணங்கள் யாவும் நம்மை உள்ளான சமாதானத்தோடு ஆரோக்கியமாய் வைத்துக் கொள்ளும்.
சில நேரங்களில் நாம் தவறிழைத்து மற்றவர்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நாம் செய்கிற காரியங்கள் நமக்கு நியாயமாக தோன்றுவதுண்டு.
ஆனால் அது மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கலாம். அப்படிப்பட்ட வேளைகளில் நம்மீது தவறுகள் இருந்தாலும், நாம் மன்னிப்பு கேட்பதை புறக்கணிக்கிறோம்.
மற்றவர்களை நியாயந் தீர்ப்பதில் முந்திக் கொள்கிறோம்.
மன்னிப்பு என்ற வார்த்தை மிகவும் எளிமையான ஒரு வார்த்தையாக இருந்தாலும், அந்த வார்த்தை நமது வாழ்க்கையில் ஆசீர்வாதத்தை, விடுதலையை கொண்டு வருகிற ஒரு திறவுகோலாக இருக்கிறது.
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதர மட்டுமோ என்று கேட்டான்.
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதர மட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். என்றார்.
மத்தேயு 18:22
“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்” மத்தேயு 6:14-15 என்று வேதம் திட்டமும் தெளிவுமாய் நமக்கு போதிக்கிறது.
ஆகவே நாம் தவறிழைக்கும் போது உரியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல் மற்றவர்கள் நம்மிடம் மன்னிப்பை கோரும் பட்சத்தில் அவர்களையும் மன்னிப்போம். அப்பொழுது நாம் செய்த பாவங்களை மன்னித்து இறைவன் தம் பிள்ளையாய் ஏற்றுக் கொள்வார்.
இப்படிப்பட்ட நல்ல வாழ்க்கை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.