Daily Manna 8

சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். நீதி 10 :4.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஏழை ஒருவன் தன்னுடைய தின கூலியை வைத்தே பிழைப்பு நடத்தி வந்தான்.

ஒரு நாள் அவன் வேலைக்கு செல்கையில் ஓட்டை காலணா ஒன்று தெருவில் இருப்பதை அவன் கண்டான். கீழே கிடைக்கும் ஓட்டை காலணா அதிஷ்டத்தை தரும் என்றொரு நம்பிக்கை இருந்தது.

ஆகையால் அவன் அதை அதிஷ்டம் என்று எண்ணி தன் சட்டை பைக்குள் வைத்துக் கொண்டான்.
வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு அன்று சற்று வருமானம் அதிகமாகவே கிடைத்தது.

அதனால் அவனுக்கு ஓட்டை காலனா மீதிருந்த நம்பிக்கை இன்னும் அதிகரித்தது. அன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் தனக்கு கிடைத்த ஓட்டை காலணா குறித்து தன் மனைவியிடம் சந்தோசமாக விவரித்தான்.

பின் அந்த ஓட்டைக் காலணாவை தான் அன்று அணிந்திருந்த சட்டையிலேயே வைத்து அந்த சட்டையில் தனியாக வைத்தான்.

தினமும் வேலைக்கு செல்லும் முன்பு அந்த சட்டை பையில் இருக்கும் ஓட்டைக் காலணாவை வெளியே எடுக்காமல் தொட்டு மட்டும் பார்த்து விட்டு போவான்.

காலம் கடந்தது. அவன் தன் வாழ்வில் படிப்படியாக முன்னேறினான். வீடு, கார் என அனைத்தையும் சம்பாதித்தான். எல்லாம் அந்த ஓட்டை காலணா வந்த ராசி
தான் என்று அவன் ஆணித்தரமாக நம்பினான்.

ஒருநாள் காலை வழக்கம் போல அவன் அந்த ஓட்டை காலணாவை தொட்டுப் பார்த்தான். அன்று அவனுக்கு அந்த ஓட்டைக் காலணாவை வெளியில் எடுத்து பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது.

அதை வெளியில் எடுத்து பார்த்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பழைய சட்டை பையில் இருந்தது ஓட்டை காலணாவே அதில் இல்லை. அதற்கு பதிலாக வேறு காசு இருந்தது. அவன் தன் மனைவியை அழைத்து இது குறித்து விசாரித்தான்.

அப்போது அவள், அந்த ஓட்டை காலணா கிடைத்த அடுத்த நாள் உங்கள் சட்டையை துவைக்க நான் எடுத்தேன். அப்போது அதை உதறும் போது அந்த ஓட்டை காலணா எங்கோ விழுந்து விட்டது.

நான் எவ்வளவு தேடியும் அது கிடைக்கவில்லை. ஆகையால் உங்கள் மனம் கஷ்டப்பட வேண்டாம் என்று எண்ணி நான் தான் அதில் வேறு காசை போட்டு வைத்தேன். என்னை மன்னித்து விடுங்கள் என்றாள்.

இத்தனை நாள், அந்த ஓட்டைக் காலணாவால் தான் தனக்கு அதிஷ்டம் வந்தது என்று எண்ணிய அவன்
அன்று தான் தனக்கு கிட்டினது அனைத்தும் தன் உழைப்பின் காரணமாகவே சம்பாதிக்க முடியுந்தது என்பதை உணர்ந்தான்.

முயற்சியே உழைப்பின் தொடக்கம், முயற்சியினால் எல்லாம் கிடைக்கும். விடாமுயற்சியும் , நம்பிக்கையும் இருந்தால் வெற்றி இலக்கினை அடையலாம்

உழைப்பே உலக சாதனைகளுக்கு ஊற்றுக்கண் தனி மனிதனின் முயற்சியே உழைப்பின் மூலதனம்.

வேதத்தில் பார்ப்போம்,

உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்.
சங்கீதம் 128:2

நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குதக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார்.
எரேமியா 25:14.

நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.
ஏசாயா 65:22

பிரியமானவர்களே!

சாபங்களுக்கான வழியையே உலகம் நாடுகிறது! ஆனால் ஆசீர்வாதங்களுக்கான வழியையோ, பரிசுத்த வேதம் காட்டுகிறது!

இன்று அனேகர் எந்தவிதமான பிரயாசமும் இல்லாமல் தங்கள் கைகளின் பிரயாசத்தை எடுக்க விரும்புவதுண்டு.

ஒரு காரியத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். கிறிஸ்தவ வாழ்க்கையில் நிலையான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அதற்கான பாடுகளுக்குள்ளாக கடந்து செல்ல வேண்டும்.

ஏனென்றால் பாடுகள் இல்லாமல் ஆசீர்வாதம் இல்லையென்று வேதம் நமக்கு சொல்லுகிறது

ஈசாக்கு தேவனுக்கு கீழ்படிந்து தேவன் சொன்ன தேசத்துக்கு சென்ற போது தேவன் அவன் கையின் பிரயாசத்தை ஆசீர்வதித்தார்.

அவனை துரத்திவிட்ட ராஜா அவனை தேடி வந்து அவனோடு உடன்படிக்கை பண்ணிக் கொண்டான்.அவன் ஜசுவரியவனாகி வரவர விருத்தியடைந்தான். மகா பெரியவனானான் என்று வேதம் சொல்லுகிறது,

ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது, தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர், உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு, எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.
1 நாளா 29:12. என்று பார்க்கிறோம்.

பரிசுத்த வேதம் கூறுகிறது
“நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்தால்,

அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருக ஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.” என்று எழுதப்பட்டுள்ளது.

இது தேவன் அருளும் ஆசீர்வாதமாயுள்ளது. ஒருவன் தேவனை தனது தாபரமாய்க் கொண்டிருந்தால், அவர் அவன் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்து அவனை நடத்துவார்.

மனித வாழ்வு இவ்வுலக வாழ்வோடு ஒழிந்து போவதில்லை. மறுமையின் வாழ்வும் உண்டு. அதேப் போல தான் கர்த்தர் தருகிற ஆசீர்வாதங்கள் இவ்வுலகத்திற்குரியது மட்டுமல்ல.பரலோக வாழ்வுக்குரிய ஆசீர்வாதங்களையும் தர வல்லவர்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்று அனுபவிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *