Daily Manna 85

இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். சங்கீதம் 34 :6

எனக்கு அன்பானவர்களே,

அரணும், கோட்டையுமாய் இருந்து நம்மை காத்து வழிநடத்தி வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மத்திய ஆப்பிரிக்காவில் போர் நடந்து கொண்டு இருந்தது.
ஒரு நாள் ஹிட்டு (Hutu) என்னும் கிராமத்தில் டுட்சி (Tutsi) என்னும் இடத்தின் போர் வீரர்கள் அந்த கிராமத்தை அழித்து விட வேண்டும் என்று எண்ணத்தோடு வந்தனர்.

அந்த இரவு நேரத்தில் ஒரு இளம் போதகரின் வீட்டிற்கு கைகளில் இயந்திர துப்பாக்கிகளுடன், உள்ளே நுழைந்து, போதகரும் அவருடைய குடும்பமும் அமர்ந்திருந்த இடத்தில் தங்கள் துப்பாக்கியை காட்டி, கொல்லப் போவதாக மிரட்டினார்கள்.

அப்போது அந்த போதகர், ‘எங்களை கொல்லுங்கள், ஆனால் அதற்கு முன் நாங்கள் குடும்பமாக ஜெபிக்க எங்களை அனுமதியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். சரி, எப்படியும் இவர்கள் மரிக்கத் தானே போகிறார்கள் என்று அந்த வீரர்களும் அனுமதித்தனர்.

அதன்படி, அந்த போதகரின் குடும்பத்தினர் ஒருவரோடொருவர் கைகளை கோர்த்து கொண்டு, முழங்கால்படியிட்டு, தேவனிடம் இவர்களிடமிருந்து எங்களை காப்பாற்றும் என்று ஜெபிக்க ஆரம்பித்தனர்.

அவர்கள் அப்படி ஊக்கத்தோடு ஜெபித்த போது, அந்த கொடியவர்கள் யாரையும் காணவில்லை, அவர்கள் வீட்டிலிருந்து மட்டுமல்ல, அந்த கிராமம் முழுவதிலுமிருந்து அவர்கள் ஓடி விட்டிருந்தனர்.

போதகரின் குடும்பத்திற்கும் மற்றவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.
ஏதோ நடந்திருக்கிறது என்று மட்டும் அறிந்திருந்தார்கள்.

சில மாதங்கள் கழித்து, ஒரு பொதுவான இடத்தில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் டுட்சி மற்றும் ஹிட்டு என்னும் இரண்டு இடங்களிலிருந்தும் ஜனங்கள் வந்திருந்தார்கள்.

அதில் அந்த இளம் போதகர், சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை விவரித்து, அதிசயமாக தன் குடும்பமும், தன் கிராமத்திலிருந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள் என்றும், தாங்கள் யாருக்கும் இதுவரை என்ன நடந்தது என்று புரியவில்லை என்றும், கர்த்தர் ஏதோ பெரிய காரியத்தை செய்தார் என்று மாத்திரம் அறிந்திருக்கிறோம் என்றும் கூறினார்.

அப்போது கூட்டத்தின் நடுவிலிருந்து ஒரு மனிதன் எழுந்து நின்று, ‘உமக்கு தெரியுமா? அந்த இரவில் உம்மையும், உம்முடைய கிராமத்தில் உள்ளவர்களையும் கொல்வதற்காக வந்தவர்களில் நானும் ஒருவன்.

உங்கள் வீட்டில் நுழைந்து உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் சுடுவதற்காக இயந்திர துப்பாக்கியை குறி வைத்தேன். அப்போது நீங்கள் ஜெபிக்க அனுமதி கேட்டீர்கள். நாங்களும் அனுமதித்தோம்.

நீங்க்ள் ஜெபித்து கொண்டிருந்த போது, திடீரென்று உங்கள் அனைவரையும் சுற்றி ஒரு அக்கினி சுவர் எழும்பியது. அதிலிருந்து எழும்பிய ஜீவாலைகளினால் உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை எங்களால் காண முடியவில்லை.

அந்த அக்கினியின் வெப்பத்தினால், நீங்களும் உங்கள் வீடும் எரிந்து சாம்பலாக போகிறீர்கள் என்று நாங்கள் தீர்மானித்து, உங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடினோம்.

வெளியே ஓடி வந்து பார்த்த போது, உங்கள் வீடு முழுவதும் அக்கினியால் சூழ்ந்திருந்ததே ஒழிய எரிந்து போகவில்லை. அந்த அதிசயத்தை பார்த்த நாங்கள், பயந்து, உங்கள் கிராமத்தை விட்டே வெளியே ஓடி வந்து விட்டோம்.

பின் நான் அதை குறித்து சிந்தித்த போது, அந்த அக்கினி சாதாரண அக்கினி அல்ல, அது உங்கள் தேவனிடமிருந்து உங்களை காப்பதற்காக அனுப்பப்பட்ட அக்கினி! அன்றையதினம் உங்களை காப்பாற்றின உங்கள் தேவனை பற்றி அறிந்து கொள்ள நான் வந்திருக்கிறேன் என்றார்.

வேதத்தில் பார்ப்போம்,

உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும் தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
சங்கீதம் 22 :24.

கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது.
சங்கீதம் 33:12.

இவ்விதமான சீரைப் பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.
சங்கீதம் 144 :15.

பிரியமானவர்களே,

நம் அன்பின் ஆண்டவர் சொல்லுகிறார் . ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.
மத்தேயு 18:20 என்று கூறுகிறார்.

அன்று இஸ்ரவேலரை, வனாந்திரத்தில் பகலில் மேக ஸ்தம்பமாயும், இரவில் அக்கினி தூணுமாக இருந்து காத்த தேவன், இன்றும் மாறாதவராகவே இருக்கிறார். எதிரிகளின் கொடிய பிடிகளிலிருந்து நம்மை தப்புவிக்கிற அன்பின் தேவன் அவர்.

தம்மை நோக்கி கூப்பிடுகிற தம்முடைய பிள்ளைகளுக்கு அவர், சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து,
அதின் நடுவில் மகிமையாக இருப்பேன்’ என்று சொல்லுகிறார். எத்தனை பெரிய பாக்கியம்.

இயேசுவை உங்கள் தெய்வமாக கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம். உபாகமம் 33:29ல், “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமை பொருந்திய பட்டயமும் அவரே;

உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.” அவர் தமக்கு சுதந்தரமாக தெரிந்து கொண்ட ஜனங்களுக்கு கொடுக்கின்ற மூன்று ஆசீர்வாதங்களை குறித்து இங்கே வாசிக்கிறோம்.

முதலாவதாக, அவர் உங்களுக்கு கேடகமாக இருந்து உங்களுக்கு பாதுகாப்பை அருளுவார்.

இரண்டாவதாக, அவர் உங்களுக்கு மகிமையும் கனத்தையும் அளிக்கிறார்.

மூன்றாவதாக, அவர் உங்கள் சத்துருக்கள் முன்பாக உங்களை மூடி மறைத்து பாதுகாத்து, உங்களுக்கு வெற்றியை தருவார். இவைகள் உங்களுக்கு சொந்தமான ஆசீர்வாதங்கள்.

நீங்கள் இயேசுவின் பிள்ளை என்று மகிழ்ச்சியாயிருங்கள்.ஆம் கர்த்தரை தங்களுக்கு தெய்வமாகக் கொண்ட ஜனம் பாக்கியம் உள்ளது .

இந்த ஓய்வு நாளிலும் அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *