Daily Manna 87

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; நீதி 28:20

எனக்கு அன்பானவர்களே!

பரிபூரண ஆசீர்வாதங்களை அருள் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

செல்வம் என்பவர், பல ஆண்டுகளாக ஒரு பெரிய காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்த கடையின் முதலாளி செல்வத்தின் உழைப்பையும், நேர்மையையும் பாராட்டி, அதிக ஊதியமும், சிறப்பு சலுகைகளும் வழங்கி வந்தார்.

இது இறைவன் கொடுத்த சலுகைகளாகவே எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தி வந்தார் செல்வம். முதலாளி ஒரு நாள் இறந்து போனார். பின்னர் முதலாளியின் மகன் கடையை நிர்வகிக்கத் தொடங்கினார்.

அவர் தன்னுடைய கடையின் லாபத்தை உயர்த்த எண்ணினார்.நீண்ட வருடமாக கடையில் வேலை செய்து வரும் செல்வம் முதலாளியின் மகனின் கண்களுக்கு நெருடலாகத் தெரிந்தார்.

ஏன் அவருக்கு மட்டும் அதிக சம்பளம் மற்றும் சிறப்பு சலுகைகள் கொடுக்க வேண்டும்? இவருக்கு கொடுக்கும் சம்பளத்தில் மூன்று பேரை புதிதாக வேலைக்கு சேர்க்கலாமே’ என்று எண்ணினார்.

எனவே ஒருநாள் வேண்டாத காரணங்களைச் சொல்லி செல்வத்தை வேலையை விட்டு நீக்கினார் முதலாளியின் மகன்.
வானம் இடிந்து தலை மேல் விழுந்தது போலிருந்தது செல்வத்துக்கு.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதை விடப் பெரிய கடையிலிருந்து இன்னும் கூடுதலான சம்பளத்திற்கு அழைப்பு வந்ததும், “இது கடவுள் எனக்காகக் கொடுத்த இடம். இதை விட்டு நான் போக மாட்டேன்’ என்று மறுத்து விட்டதும் நினைவுக்கு வந்தது.

கடவுளே..,கையில இருக்கிற பணம் முடியறதுக்குள்ள அடுத்த வழியைக் காட்டுங்கப்பா…” என இறைவனிடம் வேண்டிக் கொண்டே சோர்வுடன் வீட்டுக்குச் சென்றார். தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னார்.

இவர்கள் குடும்பமாக இறைவனிடம் வேண்டினர்.
மீண்டும் யாரிடமாவது வேலைக்குச் செல்வதா? அல்லது சொந்தமாக வியாபாரம் செய்வதா? என குழம்பிக் கொண்டிருந்தார் செல்வம்.

அந்த நேரத்தில், “”பக்கத்து தெருவில் காய்கறிக் கடை நடத்தி வரும் ஒரு பெண்மணியின் மகன் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறான். மகனின் குழந்தையை கவனிக்க அம்மாவை அழைத்துச் செல்வதாக
முடிவு பண்ணிட்டாங்களாம்.

அந்தம்மாவுக்கு இப்ப விசா, டிக்கெட் எல்லாம் ரெடியாயிடுச்சாம்.
அடுத்த மாசம் கிளம்புறாங்க.
அவங்க திரும்பி வர எப்படியும் ரெண்டு வருஷம் ஆயிடுமாம். அதுவரைக்கும் கடையைப் பூட்டி வச்சிருக்க முடியாது.

எனவே நம்மிடம் ஒப்படைச்சுட்டுப் போனா நல்லதுன்னு நினைக்கிறாங்க. வாடகை ஒன்னும் தர வேண்டாம். கரன்ட் பில்லும், வரியும் மாத்திரம் கட்டிக்கிட்டு இருந்தா போதும்ன்னு” அந்த அம்மா சொன்னதாக செல்வத்தின் மனைவி கூறினார்.

இது இறைவன் தனக்கு அளித்த ஒரு வாய்ப்பாக எண்ணிய செல்வம் அந்த கடையை எடுத்து நடத்த தொடங்கினார். செல்வம் ஒரு நேர்மையான மனிதர் என்று அங்கு உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும்.

செல்வத்தின் கடவுள் நம்பிக்கையும் நேர்மையும் கடின உழைப்பும் அவரை உயர்த்தியது. வியாபாரம் செழித்தது. ஒரு வருடத்தில் சொந்தமாக பெரிய கடையைக் கட்டி அதனை நிர்வகித்தார்.
இப்போது இவர் கடையில் பல வேலையாட்களுடன் பெரிய செல்வந்தர் ஆனார் .

ஒவ்வொரு மனிதனுக்கும் தன் தன் வாழ்க்கையை குறித்த ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அந்த குறிக்கோளை அடைய நேர்மையாக, இறைவனின் துணையோடு நாம் முயற்சி செய்யும் போது நம் முயற்சிகள் எல்லாம் வெற்றியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்: ஐசுவரியவனாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.
நீதிமொழி:28:20.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது, கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:9.

தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம் பண்ணும் படி என் கண்கள் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கும், உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்.
சங்கீதம் 101:6.

என் அன்புக்கு உரியோரே,

நம் ஆண்டவர் நமக்கு ஒரு வழியை அடைகிறார் என்றால், அதைவிட மேலான வழியை நமக்கு ஆயத்தமாக்கி விட்டார் என்று உடனே உணர வேண்டும்.

ஆம்
“கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிபதியாக வைப்பேன் என்று ஆண்டவர் வாக்குறுதி கொடுக்கிறார் .

உண்மையாக நடப்பவர்கள் நிச்சயம் உயர்த்தப்படுவார்கள்.
நாமும் எந்த வேலை செய்தாலும் கடவுளுக்கு முன்பாக உண்மையும் உத்தமுமாக வேலை செய்யும்போது எந்த விதமான சோதனைகள் வந்தாலும் அதிலிருந்து இயேசு நம்மை உயர்த்த வல்லவராயிருக்கிறார்.

எந்த காரியமாயிருந்தாலும் கர்த்தர் என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு நாளும் உண்மையை கடைப்பிடிப்போம். பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்வோம்.

இப்படிப்பட்ட பரிபூரண ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.

ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *