ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 1 கொரி 2 :15
எனக்கு அன்பானவர்களே!
மகிமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் அநேக சபைகளிலும், வீடுகளில் நடக்கும் ஜெப கூட்டங்களுக்கும் பிரச்சனை வருவதற்கு முதல் காரணம் அதிக சத்தத்தோடு இரவு நேரங்களிலும் மற்ற நேரங்களிலும் ஆராதிப்பதே முக்கிய காரணமாக அநேகர் கூறுவதை கேட்டிருப்போம்.
நாம் ஆராதிக்கும் போது பக்கத்து வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு உண்டாக்க கூடாது. Exam க்காக படிக்கிற பிள்ளைகள் இருப்பார்கள். அடுத்த நாள் அலுவலகத்துக்கு போகிறவர்கள் இருப்பார்கள்.
நாம் Sound System வைத்து, அதிக சத்தத்தோடு இரவு நேரங்களில் ஆராதிப்பது பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும்.
தன்னை போல பிறனை நேசி என்ற இயேசுவின் கட்டளையை பின்பற்றுகிறவர்கள் நிச்சயமாக ஆராதனை என்ற பெயரில் பிறரை தொந்தரவு செய்ய மாட்டார்கள்.
ஒரு முறை,
ஒரு இரவு ஜெபம் நடைபெற்ற ஒரு வீட்டில் Sound system எல்லாம் வைத்துக் கொண்டு சத்தமாக ஆராதித்துக் கொண்டிருந்தார்கள். இரவு 2 மணி வரை பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜனங்களை பற்றி கவலைப்படாமல் ஆராதித்து கொண்டிருந்தார்கள்.
இதனாலேயே கிறிஸ்தவர்களுக்கு வாடகைக்கு வீடு விடக் கூடாது என்றே அநேகர் நினைத்தனர்.
பிரியமான ஊழியக்காரர்களே, சபைகளுக்கு உபத்திரவம் வரும் காலக் கட்டத்தில் ஞானத்தோடு நடந்து கொள்வது நல்லது. பிரச்சனைக்குரிய இடங்களில் இரவு நேரக் கூட்டங்களில் இசைக் கருவிகளை தவிர்த்து, ஒலிப்பெருக்கிகள் இல்லாமல் தேவனை ஆராதிப்பது மிகவும் நல்லது.
அடுத்ததாக வீடுகளில் ஆராதிப்பவர்கள் மெதுவாக பிறருக்கு தொல்லைக் கொடுக்காமல் ஆண்டவரை ஆராதிக்க முடியும். அது முடியாது நாங்கள் அப்படி தான் நடத்துவோம் என்றால் நமது சபையை பூட்டி சீல் வைத்து விட்டு போவார்கள்.
ஏனென்றால் பிசாசானவன் தந்திரமாய் ஆராதனையை நடைபெற விடாமல் தடை செய்வதற்காக அதிகாரத்தில் உள்ளவர்களை பயன்படுத்த்துவான்.
ஊழியக்காரர்கள் இவ்வுலக சத்துருவின் வஞ்சகமான கிரியையை உணர்ந்து, பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையின் படி சபையை நடத்தும் போது நாமும் மகிழலாம். பரிசுத்த ஆவியானரின் நாமம்
மகிமைப்படும்.
வேதத்தில் பார்ப்போம்,
அன்றியும் நீ ஜெபம்பண்ணும் போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள்;
மத்தேயு 6:6.
எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.
1 பேதுரு 4 :7.
நீ சகித்துக் கொண்டிருக் கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
வெளி 2:3
பிரியமானவர்களே,
ஆண்டவர் பெயரில் வைராக்கியத்தை காட்டிக் கொண்டு சத்தம் போட்டு ஆராதிப்பதை விட , தேவ வசனத்துக்கு கீழ்படிவதிலும் தேவ சித்தம் செய்வதிலும் உங்கள் வைராக்கியத்தை காட்டுங்கள்.
அநேக தேசங்களில் அனுமதியில்லாத இடங்களில் உள்ள வீடுகளில் நடக்கும் ரகசியமான சபைகளில் யாரும் அறியாதபடி மெதுவாக ஆராதிக்கிறார்கள். மேலும் அங்கு ஆவியானவர் பலமாக ஊற்றப்படுகிறார்.
அங்கு தான் அதிகமான ஆத்தும அறுவடை நடக்கிறது. அவைகளும் ஆவிக்குறிய சபைகளே.சாத்தான் நம் தேசத்தின் ஆளுகைகளை கையில் எடுத்த நிலையில் மிகவும் கவனமாகவும் ஞானமாகவும் சபைகளை நடத்துவது மிகவும் முக்கியம்.
அடுத்ததாக ஆராதனைக்கு விரோதமாக யாராவது பிரச்சனை பண்ணும் போது கூடுமானவரை சமாதானமாக போவது நல்லது.
நம்முடைய போராட்டம் மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல.
ஆவி மண்டலத்திலுள்ள கண்ணுக்கு தெரியாத பிசாசின் அதரிசனமான எதிரிகளோடு.
பலவானை முந்தி கட்டுங்கள் என்று இயேசு கிறிஸ்து எச்சரித்தார்.
அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம் என்று மத்தேயு 12-29 கூறுகிறது.
பலவான் சபைக்கு எதிராக கிரியை செய்வதற்க்கு முன்பாக நாம் பலவானின் ஆயுதங்களை அழித்து விட வேண்டும். சபைகளுக்கு விரோதமாக பாதாளத்தின் வாசல்களில் செய்யப்படும் பிசாசின் வல்லமைகளை நாம் ஜெபத்தினால் மேற் கொள்ள முடியும்.
அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள், ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள்.
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
தேவனுடைய பரிசுத்த ஆராதனையை பக்தியுடன் மாத்திரமல்ல. தெளிந்த புத்தியுள்ளவர்களாயும், ஜெபத்திலே உறுதியாக தரித்திருப்பவர்களாகவும் இருக்க பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனையை நாடுவோம்.
பரிசுத்த ஆவியானவர் தாமே இவ்வுலக வாழ்வை கர்த்தருக்காய் வாழ அருள் புரிவாராக.
ஆமென்.