இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் 13:13
எனக்கு அன்பானவர்களே!
அன்பின் இறைவன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நாம் வாழும் இந்த உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கத்தியாலும், புத்தியாலும் , பலத்தாலும், துப்பாக்கியாலும், வெற்றிக் கொள்ள முடியாத பல அற்புதமான செயல்களை அன்பினால் வெற்றி கொள்ள முடியும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. துன்பங்களை களைவதற்கு ஒரே வழி அன்பு என்னும் ஆயுதமே!
ஆபிரகாம் லிங்கன் சாதாரண விறகுவெட்டியின் மகனாக பிறந்து, வழக்கறிஞராகி, பின்னர் ஜனாதிபதியாக உயர்த்தப்பட்டார். அவரின் உயர்வுக்கு முதல் காரணம் அன்பே.
ஆபிரகாம் லிங்கனின் உள்ளம் எப்போதும் அன்பின் கடலாக காட்சியளிக்குமாம்.
அவருடைய வெற்றிக்கு அடித்தளமாய் அமைந்தது அன்பு மட்டுமே.
இன்று நீங்கள் வாழ்கிற குடும்பத்திலும் உங்களைச் சுற்றி உள்ள சமுதாயத்திலும்
ஆராதனை ஸ்தலத்திலும் எத்தனையோ பேர் அன்புக்காக, இரக்கத்திற்காக ஏங்குகிறார்கள்.
உதவி செய்ய மாட்டார்களா, ஆதரவு கொடுக்க மாட்டார்களா, அன்பு செலுத்த மாட்டார்களா என்று தவிக்கிற அநேகர் உண்டு. அப்படிப்பட்ட மக்களுக்கு நாம் இரக்கம் பாராட்டுவது தான் உண்மையான அன்பு.
நாம் மனிதர்களிடம் அன்பு கூராவிட்டால், நாம் தேவனிடத்தில் அன்புகூர முடியாது. தேவனிடத்தில் அன்பு கூருகிறவன் தேவசாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களிடம் உண்மையாய் அன்பு கூருவான்.
ஒருவன் தன் சொந்த சகோதரனிடம் அன்பு கூரவில்லை என்றால் காணாத தேவனிடம் எப்படி அன்புகூருவான்.?
நாம் தேவையில் உள்ளவர்களுக்கு இரக்கம் செய்வது தான் உண்மையான அன்பாகும். ஆண்டவரின் சாயலாய் படைக்கப்பட்ட மனிதர்களிடம் அன்புகூருவதே உண்மையான அன்பாகும்
வேதத்தில் பார்ப்போம்,
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான் 13:35.
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
கலா 5:14.
என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
யாத் 20:6.
பிரியமானவர்களே,
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார் இயேசு கிறிஸ்து
யோவான் 13:35. கூறியுள்ளார்.
எனவே அன்பு என்பது நம் கிறிஸ்தவ வாழ்க்கையின் அடையாளம். அந்த அன்பின் வெளிப்பாடாக பிறருக்கு நன்மை செய்வதிலே நாம் சோர்ந்து போகாமலிருக்க வேண்டும் .
ஒருமுறை லியோடால்ஸ்டாய் ஒரு பூங்கா விற்குச் சென்றிருந்த போது, தன்னருகே இருந்த ஒருவரிடம் ” ஹலோ! எப்படி இருக்கிறீர்கள்” எனக் கேட்டார்.
அந்த ஆள் சரியான கோபக்காரர்.நாம் இருவரும் இதற்கு முன் ஒரு முறைக் கூட சந்தித்துக் கொண்டதில்லை. பிறகு எப்படி எனக்கு ஹலோ சொல்லுகிறீர்கள் என கோபமாகச் சொல்லி விட்டு, அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
அடுத்த நாள் டால்ஸ்டாய் அதே பூங்காவிற்கு சென்ற போது, முதல் நாள் கோபமாய் பேசிய அதே நபர் எதிர்ப்பட்டார் . ஹலோ எப்படி இருக்கிறீர்கள்? நாம் ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருக்கிறோம் ‘என்று டால்ஸ்டாய் கூற அந்த நபர் கல கல வென்று சிரித்து விட்டார்.
எவரையும் வெற்றி கொள்வதற்குச் சிறந்த ஆயுதம் அன்பு என்ற வலை ஒன்று தான். “சிலந்தி தன் வாயிலிருந்து உமிழும் திரவத்தைக் கொண்டு உருவாக்கும் வலையைப் போல, நாமும் அன்பு என்னும் வலையை உருவாக்கிட வேண்டும்” என்கிறார் டால்ஸ்டாய்.
இயேசு நம்மேல் ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறார், அது போலவே,நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் அன்புடனும் வாழ வேண்டும் என நம் அன்பு ஆண்டவரும் விரும்புகிறார்.
இப்படிப்பட்ட அன்புள்ள வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.