உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” லூக்கா 6:27
எனக்கு அன்பானவர்களே!
அன்பே வடிவான இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஞானிக்கு கோபமே வராது என்று மக்களில் பலரும் சொல்லுவதை கேள்விப்பட்ட சீடனுக்கு அது எப்படி சாத்தியம் என்று அவரிடம் விளக்கம் கேட்டான்.
ஞானி சொன்னார், நான் அடிக்கடி படகில் அமர்ந்து தியானிப்பது வழக்கம். அப்போது நான் இருந்த படகை யாரோ முட்டினார்கள்.
எனக்கு சரியான கோபம், என் தியானத்தைக் கலைத்து விட்டார்களே என்று. கண் திறந்து பார்த்த போது என் படகை முட்டியது வெறும் தளையறுந்த படகு தான்.
அதன் மேல் எப்படி கோபம் கொள்வது. அன்று தான் புரிந்தது ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதோ ஓர் காரணம் உண்டு. அது புரியாமல் நாம் கோபப்பட்டு என்ன பயன். என்னை கோபப்படுத்தும் நிகழ்வுகள் ஓர் தளையறுந்த படகு என நினைத்துக் கொள்வேன்.
அப்போது எனக்கு கோபம் வராது என்றார்.
சீடனுக்கு ஓரளவு புரிந்தது. ஓர் நாள் சீடர்களுடன் வெளியில் சென்று கொண்டிருந்த போது ஞானியின் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவர்மீது கல்லை எறிந்து விட்டு ஓடப் பார்த்தான்.
சீடர்கள் விரைந்து அவனைப் பிடித்து அடிக்க முயன்றனர். ஞானி சீடர்களிடம் அவன் ஓர் தளையறுந்த வெற்றுப் படகு. அவனை துன்புறுத்தாதீர்கள். அவனை அழைத்து வாருங்கள் என்று அருகில் அழைத்து தன்னிடம் உள்ள பழங்களில் ஒன்றைக் எடுத்துக் கொடுத்தார்.
தன் மீது எதாவது சாபம் இட்டு விடுவார் எனப் பயந்தவனுக்கு பழம் கிடைத்தது. அன்பின் வயப்பட்டான். அவன் கொண்டிருந்த கோபம், வெறுப்பு, அனைத்தும் மறைந்தது.
சீடர்கள் அவன் மீது நீங்கள் கோபம் கொள்ளவில்லை. அது சரி. எதற்காக பழம் தந்து உபசரிக்கின்றீர்கள் என்று கேட்டனர்.
ஞானி சொன்னார். தன் மீது கல் எறிந்தவனுக்கு ஐந்தறிவுடைய மரம் பழம் தரும் போது, மனித நேயத்துடன் வாழும் நான் கனி தருவது தப்பாகாது என அறிவுரை கூறினார்.
கல் வீசியவன் மனிதனான். மனம் வருந்தி திருந்தியவனாக மகானினை வணங்கி
கடந்து சென்றான்.
வேதத்தில் பார்ப்போம்,
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
லூக்கா 6:27
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
ரோமர் 12:21
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
மத்தேயு 5:44.
பிரியமானவர்களே,
அன்பு ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அன்பற்ற ஒரு நபரின் இருதயத்திலிருந்து வெடிக்கின்ற வெறுப்பு பல தீமைகளை கொண்டு வருகிறது.
நீங்கள் உங்களை தூற்றுகிறவர்களையும், உங்களுக்கு தீமை செய்கிறவர்களையும் நேசிக்க வேண்டும். என்று இயேசு கிறிஸ்து நமக்கு கொடுத்த அன்பின் கட்டளை ஆகும்
தம்மைக் காட்டிக் கொடுக்க வந்த யூதாஸ் காரியோத்தை, இயேசு, எனக்கு அன்பான “சிநேகிதனே” என்று அழைத்தாரே, இது இயேசுவின் அன்பை பிரதிபலிக்கிறது அல்லவா!
அவரின் பிள்ளைகளாகிய நாமும், அனைவரிடத்திலும் அன்பாகவும் பாசமாகவும் இருக்க வேண்டு மென்று அன்பின் ஆண்டவர் உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார்.
நம் அன்பான இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லுகிறார் .
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்”
லூக்கா 6:27.
உங்கள் எதிரிகளுக்கு நீங்கள் நன்மை செய்யத் தொடங்கும் போது, தெய்வீக அன்பு உங்கள் இருதயத்தில் பிறக்கும். இப்படிப்பட்ட காரியங்களின் வழியாக கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வெளிக்காட்டுங்கள்.
“ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்”
(நீதி16:7) என்று வேதம் கூறுகிறது.
உங்கள் வாழ்விலும் எதிரிகள் இருக்கின்றனரா? நீங்களும் இயேசுவைப் போல அவர்களை நேசியுங்கள். இதைத் தான் இயேசுவின் அன்பு நமக்கு போதிக்கின்றது.
உங்கள் எதிரிகளை நேசிப்பதென்பது எல்லாவற்றிலும் நீங்கள் அவர்களுடன் உடன்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் உங்களை வெறுக்கும் போது, நீங்கள் அவர்களை நேசியுங்கள்.
இதன் மூலம் வெறுப்பு மேலும் வளராமலிருக்க நீங்கள் உதவுகிறீர்கள்.
ஆகவே நாம் பிறரிடம் அன்பை மட்டுமே செலுத்துவோம்.
கூடுமானவரை யாரிடமும் அன்பை பகிர்வோம்.
மனமகிழ்ச்சியாய் வாழுவோம்.
இப்படிப்பட்ட உன்னதமான ஒரு அன்புள்ள வாழ்வை வாழ்ந்து, கிறிஸ்துவின் அன்பிலே கட்டப்பட்டவர்களாய் ஜீவிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.