விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; எபிரேயர் 11:6
எனக்கு அன்பானவர்களே!
விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு முறை ஒரு கிராமத்தில் மழை பெய்யாமல் அதிக வறட்சி ஏற்பட்டது. அப்போது அந்த ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, மழைக்காக வேண்டி ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய, ஒரு பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்களாம்.
அந்தக் கூட்டத்திற்கு அந்த ஊர் மக்கள் திரண்டு வந்தார்கள். கூட்டத்தின் ஆரம்பத்திலே போதகர் வந்திருந்த மக்களைப் பார்த்து, “உங்களில் எத்தனை பேர் ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்டு மழை தருவார் என்று விசுவாசிக்கிறீர்கள்” என்று கேட்டாராம்.
உடனே வந்திருந்த மக்கள் அனைவரும் கைகளை உயர்த்தி, ‘நாங்கள் விசுவாசிக்கிறோம்’ என்று பதில் கூறினார்களாம். உடனே போதகர் மறுபடியும் மக்களை நோக்கி: “உங்களில் எத்தனை பேர் ஆண்டவர் நம் ஜெபத்தை கேட்டு இன்றைக்கு, இன்று மாலை, மழை தரக் கூடியவர் என்று விசுவாசிக்கிறீர்கள்” எனக் கேட்டாராம்.
உடனே வந்திருந்த அனைவரும் மறுபடியும் தம் கைகளை உயர்த்தி, ‘நாங்கள் விசுவாசிக்கிறோம்’ என்று பதில் கூறினார்களாம்.
உடனே போதகர் மறுபடியும் அவர்களை நோக்கி: “அப்படியானால் உங்களில் எத்தனை பேர் குடைகளை எடுத்து வந்தீர்கள்” என்று கேட்க, ஒரே ஒரு சிறுபெண் மாத்திரம் தனது கைகளில் ஒரு சிறிய குடையை உயர்த்திக் காட்டினாளாம்.
கூடியிருந்த அனைத்து மக்களும் மழை வரும் என்று நம்பினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் கிரியையில் அதை காட்டவில்லை .
கிரியை இல்லாத விசுவாசம் செத்தாய் இருக்கிறது என்று வேதத்தில் பார்க்கிறோம்.
விசுவாசம் என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான ஒரு கேடகமாகும். இந்த உலகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் விசுவாசத்தில் மட்டுமே.
விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாக இருப்பது கூடாத காரியம். விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடத்திலிருந்து ஒன்றும் பெற்றுக் கொள்ள முடியாது.
வேதத்தில் பார்ப்போம்,
மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு 21 :22.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
எபிரேயர் 11:6
ஆதலால், நீங்கள் நின்று ஜெபம் பண்ணும் போது எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
மாற்கு 11 :24.
பிரியமானவர்களே,
வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.
நீதிமொழிகள்:
28 :9-ல் என்று பார்க்கிறோம்.
இன்றைக்கு சிலர் வியாபார ஸ்தலங்களில் காலையில் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது இறைவனிடம் பிரார்த்தனை செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.
‘கடவுளே இன்றைக்கு நல்ல வியாபாரம் நடக்க வேண்டும்’ என பிரார்த்தனை செய்து விட்டு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.
ஆனால் அவர்களின் வியாபாரத்தைப் பார்த்தால், அவர்கள் விற்கும் பொருட்களில் கலப்படம் செய்து விற்பதையும், நிறை குறைந்த கள்ளத் தராசை உபயோகிப்பதையும், பொய் சொல்லி ஏமாற்றி ஜனங்களை வஞ்சித்து வியாபாரம் செய்வதையும் கவனித்திருப்பீர்கள்.
இப்படிப்பட்டவர்களின் ஜெபங்கள் ஒரு போதும் கேட்கப்படுவதில்லை.
சங்.66:18ல் “என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்”.
நம்முடைய ஜெபம் கேட்கப்படாததற்கு இன்னுமொரு காரணம் நம்முடைய அக்கிரம சிந்தை அல்லது பாவ சிந்தை என்பதை வேதம் சுட்டிக் காட்டுகின்றது
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது”.
ஆண்டவர் பாவியை நேசிக்கிறார். ஏனென்றால் அவர் அன்புள்ள ஆண்டவர். அதேவேளை அவர் பாவத்தை வெறுக்கின்றவர். ஆகவே பரிசுத்தமுள்ள கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே, மனுஷனுடைய அக்கிரமம் அல்லது அவனது பாவம் நடுவாக ஒரு தடையாகப் பிரிவினையை உண்டாக்குகிறது.
வானத்திலே மேகமூட்டம் எப்படியாக சூரியனைக் காணக் கூடாதபடிக்கு நம் கண்களுக்கு மறைக்கிறதோ, அதேபோல மனுஷனுடைய பாவம், தேவன் நமது ஜெபத்திற்கு செவி கொடாதபடி அவருடைய முகத்தை நமக்கு மறைக்கின்றதாயிருக்கின்றது.
அப்படியானால் பாவம் செய்தவர்களின் ஜெபத்தை தேவன் கேட்பதே இல்லையா? கேட்பார்! தன் பாவங்களுக்காக மனஸ்தாப்பட்டு மனந்திரும்பி தன் பாவத்தை அறிக்கை செய்து ஆண்டவரிடம் பாவ மன்னிப்பைக் கேட்டு ஜெபிக்கும் போது ஆண்டவர் நிச்சயம் ஜெபத்தைக் கேட்டு அவனை மன்னித்து ஏற்றுக் கொள்வார்.
ஆகவே நாம் விசுவாசமாய் இருந்தால் மட்டும் போதாது.
நம்மிடத்தில் நற்கிரியைகளும் இருக்க வேண்டும். நம்முடைய விசுவாசம் கிரியையுள்ளதாய் இருக்க வேண்டும்.
அப்பொழுது நாம் வளமிக்க வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் வாழ்ந்து சுகித்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.