Daily Manna – Christmas

Christmas

தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
மத்தேயு 1:20

***********
எனக்கு அன்பானவர்களே!

பெத்தலை பாலகனாம் பிறந்த இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இயேசுவின் பிறப்பை குறித்து அநேகர் பல சந்தேகங்கள் கொள்வதுண்டு.
அதில் ஒன்று தான்
பரிசுத்த ஆவியினாலே குழந்தை உண்டாகுமா?

இதற்கு விளக்கம் வேதத்திலே உண்டு.
பெண் துணையின்றி ஒரு ஆண் உண்டாக முடியுமா ? என்றால் இல்லை என்றே கூறலாம்.
ஆனால் பெண் துணையின்றி இவ்வுலகிற்கு வந்த ஒரே ஆண் ஆதாம் மட்டுமே. ஆதி 2:7. என்று நாம் யாவரும் அறிந்ததே.

அதை போன்று தான் ஆண் துணையின்றி இவ்வுலகிற்கு வந்த ஒருவர் நம் அன்பான இயேசு கிறிஸ்து .
மத் 1:18. லூக் 1:34-35.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் சரித்திரத்தில் அற்புதமான அம்சம் யாதெனில், அவர் ஓர் கன்னிகையின் வயிற்றில் உற்பத்தியாகி பிறந்ததேயாகும்.

இதைப்பற்றி ஏசாயா தீர்க்கதரிசி பின்வருமாறு கூறியுள்ளார்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்”
ஏசா.7:14. இத்தீர்க்கதரிசனம் 2000 ஆண்டுகளுக்கு முன் நிறைவேறியது.

நம் ஆதி தாயான ஏவாளின் கீழ்ப்படியாமையினால் மனுக்குலத்தின் மீது சாபம் வருவதற்கு காரணமாய் அமைந்தாள். தேவ கட்டளையை மீறி பாவம் செய்தாள்.

“பாவத்தின் சம்பளம் மரணம்” ரோம:6:23. இந்த மரணத்தை ஒழித்து நித்திய ஜீவனை மனுக் குலத்திற்குக் ரகொடுப்பதற்காகவே தேவ குமாரன் ஒரு கன்னிகையின் வயிற்றில் உருவாகுவதற்கு மரியாள் தேவ வார்த்தைக்கு முற்றிலுமாய் கீழ்ப்படிந்து தன்னை ஒப்புக் கொடுத்தாள்.

அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.
1 கொரிந்தியர்:15 :45

அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
ரோமர் 5 :14. என்றும் பார்க்கிறோம்.

ஆண்டவரின் வார்த்தையை கீழ்ப்படியாமல் பிசாசால் வஞ்சிக்கப்பட்ட ஏவாளினால் பாவத்தைப் போக்கவே , மரியாள் என்னும் ஒரு பெண் கீழ்ப்படிதலினால் உலகிலுள்ள அனைத்து சாபம் நிவர்த்தியாக்க
லூக் 1:39.மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்று தன்னை முற்றிலும் ஒப்புக் கொடுத்தாள்.

மத்தேயு: 1:21-ல். “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான். அது மட்டுமல்ல உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி மரியாளின் வழியாய் உதயமானர்.

இந்த நன்நாளை
வருடா வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். அவரவர் தங்கள் திராணிக்குத் தக்கதாக கொண்டாடி மகிழ்கின்றனர் .

வேதத்தில் பார்ப்போம்,

தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.
லூக்கா 1 :35.

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
ஆதி 2:7

கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
மத்தேயு 1:20.

பிரியமானவர்களே,

அநேக கல்விமான்கள், ஞானிகள், ராஜாக்களின் பிறப்பின் வரலாற்றைச் சரித்திரமாக நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் வரலாறோ மற்றெல்லா சரித்திர சம்பவங்களையும் விட வித்தியாசமும்,
அற்புதமுமான தொன்றாகும்.

ஆகவே தான் கடந்த 2000 ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள் அவரின் பிறப்பை ஞாபகார்த்தமாக,
வருடா வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி
ஆசரித்து வருகின்றனர்.

கன்னிகையாகிய மரியாள் யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்டிருக்கும் போதே கர்ப்பவதியானாள்.

கணவன் சந்தேகப்படுவான், உற்றார், உறவினர் நிந்திப்பார்கள், பரிகாசத்தையும், அவமானத்தையும் சந்திக்க நேரிடும் என்பதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாது தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து,
தன்னை முற்றிலுமாய் ஒப்புக் கொடுத்தாள்.

“உமது வார்த்தையின்படி ஆகக் கடவது” என்றாள். மரியாள் இவ்விதமாக தன்னை ஒப்புக்கொடுத்து தேவனின் வார்த்தையை விசுவாசித்த படியினாலேயே
“விசுவாசித்தவளே பாக்கியவதி” என்றும், “ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று ஒரு முறை தேவதூதனாலும், மறுமுறை எலிசபெத்தினாலும் வாழ்த்துதல் பெறும் சிலாக்கியத்தைப் பெற்றாள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் பற்பல ஆயத்தங்களைச் செய்வது வழக்கம். வீட்டை அலங்கரிப்பதும், பல்சுவை உணவுகளைத் தயாரிப்பதும், புதிய ஆடைகளை அணிந்தும் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் நாம் இவ்விதமான உலகப் பிரகாரமாக அல்ல, ஆவிக்குரிய பிரகாரமாக கொண்டாட வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

இயேசுவின் பிறப்பின் அர்த்தத்தை உண்மையாக உணர்ந்து பண்டிகையை ஆசரிப்பதே மேன்மை.

அப்போது மட்டுமே நாம் பண்டிகையின் உண்மையான இன்பத்தை அனுபவித்து மகிழக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்ல, நமது கொண்டாட்டம் நம் அருகிலிப்போருக்கும் சாட்சியாகவும் அமையும்.

இவ்விதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தேவன் தாமே நம் யாவருக்கும் அருள் புரிவாராக!

ஆமென்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *