Declare your faith and receive Blessings
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள்,
லூக்கா 1:13
************எனக்கு அன்பானவர்களே!
விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய பெத்தலை பாலகனாம் பிறந்த இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அவ்விசுவாசமான
சூழ்நிலைகள் வரும். அப்படி வரும் போது நாம் கர்த்தரை நோக்கிக் பார்க்கிறோமா? இல்லை சூழ்நிலைகளை பார்க்கிறோமா? என்பது மிகவும் அவசியம்.
வேதத்தில் சகரியாவின் வாழ்க்கையிலே, அவன் எதிர்பார்த்திராத ஒரு வேளையிலே, தேவன் குறுக்கிட்டார். பெரும் திட்டங்களை சாதிப்பதற்காக தேவன் இந்த நாட்களிலும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலே அவர்கள் எதிர்பாராத சமயங்களிலே குறுக்கிடுகிறார்.
சில சமயத்திலே நாம் திட்டங்கள் போட்டு வைத்துக் கொள்ளுகிறோம். நம்முடைய வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் கூட நாமே திட்டங்கள் போட்டு இவ்விதமாய்த் தான் இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிக் கொள்ளுகிறோம்.
நம்முடைய திட்டங்களுக்கு அப்பாற்பட்ட விதத்திலே தேவன் செயல்படுவார். அதற்கு நாம் இடம் கொடுக்கிறோமா? அல்லது அவிசுவாசத்தினாலும், கீழ்ப்படியாமையினாலும் முரட்டாட்டம் பண்ணி, அவருடைய செயலை நாம் ஏற்காமல் தடுப்புச்சுவராய்
ஆண்டவரின் திட்டங்களுக்கு இடையூறாகக் காணப்படுகிறோமா?
சகரியாவின் வாழ்க்கையை பார்ப்போமென்றால் தேவனுடைய கற்பனைகளின் படி வாழ்ந்தவர். சன்மார்க்க நியதிகளை கைப்பற்றியவர்.
மார்க்க ஆசாரங்களையும் ஒழுங்காக கைப்பற்றியவர். தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் அவனும், அவன் மனைவியும் நீதிமான்களாக்கப்பட்டவர்களாய், ஜீவித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலே அவர்களுடைய வாழ்க்கையிலே ஒரு பெரும் குறைவு இருந்தது.
லூக்கா 1:7இல் அதைப் பார்க்கிறோம்.
அவன் மனைவியாகிய “எலிசபெத்து மலடியாயிருந்த படியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயது சென்றவர்களாயும் இருந்தார்கள்”. பிள்ளை பிறக்கும் என்ற நம்பிக்கை இனி அவர்களுக்குக் கிடையாது. ஏன்? அந்த வயதையெல்லாம் தாண்டி விட்டார்கள். வயது சென்றவர்களாயிருந்தார்கள்.
அந்த நாட்களிலே இஸ்ரவேல் மக்கள் நடுவிலே ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லையென்றால் கடவுளின் சாபம் அல்லது அவர்கள் கடவுளை துக்கப்படுத்திவிட்டார்என்றெல்லாம் பலவிதமாக அவர்களைத் தூற்றுவார்கள்.
பழித்துப் பேசுவார்கள். ஒருவேளை எலிசபெத்தைப் பற்றியும், சகரியாவைப் பற்றியும் மற்றவர்கள் இவ்விதமான வசைச் சொற்களையெல்லாம் கூறியிருக்கலாம். ஆனால் அவர்கள் நீதிமான்களாய் நடந்தார்கள் என்று தேவன் கூறுகிறார்.
“வயதான காலத்தில் சகரியா ஆலயத்தில் பணிவிடை செய்து கொண்டு இருக்கும் போது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான்.
சகரியா அவனைக் கண்டு கலங்கி, பயமடைந்தான். தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது;
உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
இச்செய்தியை சகரியாவால் நம்ப முடியவில்லை. “அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே” என்றான்.
அதற்கு தேவ தூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: “நான் தேவ சந்திதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்;
இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப் போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக் கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்” 1:18-20.
ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் கசரியாவுக்கு ஆண்டவர் அனுப்பின தூதனின் வார்த்தையின் மேல் நம்பிக்கை இல்லை.
இன்று அநேகம் பேர் இப்படித் தான் கர்த்தருடைய தூதனே கூறினாலும் அவ்விசுவாசியாதவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.
லூக்கா 1:13
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயது சென்றவளாயிருக்கிறாளே என்றான்.
லூக்கா 1:18
இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப் போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
லூக்கா 1:20
பிரியமானவர்களே,
மரியாளுக்கும் சகரியாவுக்கும் ஒரேவிதமான கேள்விகள் எழுந்தன. மரியாளுக்கு இது எவ்வாறு நிகழும் என்று புரியவில்லை.
“கன்னியான ஒரு பெண் எப்படி ஒரு மகனைப் பெறுவாள்? அது நிகழாதே என்று எண்ணினாள்.
சகரியாவின் அவிசுவாசத்துக்கும் மரியாளின் அவிசுவாசத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கவனிக்க வேண்டும். சகரியாவின் கேள்வியோ “இதை நான் எவ்வாறு அறிவேன்?” என்று அவிசுவாசத்தை வெளிப்படுத்தியது.
மரியாளின் கேள்வியோ “இதை விசுவாசிக்கிறேன்; ஆனால் எவ்வாறு நிகழும் என்பதை அறியேன்” என்ற பொருளை உள்ளடக்கியது.
எனினும் சகரியா கேட்ட கேள்விக்கு பதில் ஏற்கெனவே ஆபிரகாமின் வாழ்க்கையில் நடந்து இருந்தது.அவரும் வேதத்தில் அதை வாசித்திருப்பார். அவரின் கேள்விக்கு முன்னடையாளமாக ஒருவர் இருந்ததை அவர் விசுவாசிக்கவில்லை.
ஆனால் மரியாளின் வாழ்க்கையில் அப்படியல்ல.ஒரு கன்னி புருஷனை அறியாமல் கர்ப்பவதியானது என்று வேதத்திலும், உலக நியதியிலும் கிடையாது.
எனவே தான் தேவதூதன் சகரியாவுக்கு தண்டனையையும், மரியாளுக்கு சந்தோஷ வாழ்த்துதலோடு விளக்கத்தையும் முன் வைக்கிறார்.
குழந்தைப்பேறு இன்மையோ கன்னித்தன்மையோ தேவனுக்கு பிரச்சனையே கிடையாது. கூறப்பட்ட நற்செய்தி என்னவெனில், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்”.
அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள்.
எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாள்” வச.39-41.என்று பார்க்கிறோம்.
யோவான் ஒரு அசாதாரணமான குழந்தை. தாயின் கருவிலிருக்கும் பொழுதே தூய ஆவியானவரால் நிறைந்திருந்த அக்குழந்தை.
பெண்களிடத்தில் பிறந்த யாவரிலும் பெரியவராயிருப்பார். அக்குழந்தையின் தாயும் தேவ ஆவியினால் நிறைந்திருந்தார்.
ஆம், கர்த்தருடைய வார்த்தையை விசுவாசத்தை அறிக்கையிட்டதும் சகரியாவின் வாய் திறந்தது. அவரின் வாழ்வு ஆசீர்வாதமானது.
நாமும் நமது விசுவாசத்தை அறிக்கையிடுவோம், ஆசிர்வாதத்தை சுதந்தரிப்போம்.
ஆமென்