Godliness with contentment is great gain
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோ:6 : 6.
+++++++++++++++++++++++++
எனக்கு அன்பானவர்களே!
இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு மருத்துவரின் தவறான சிகிச்சையினால், ஆறே வாரங்கள் நிரம்பிய ஃபேனி கிராஸ்பி (Fanny Crosby) என்பவள் தன் இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
ஆனாலும் அக்குழந்தை மனமடியவில்லை. சிறு வயதில் அவருடைய பாட்டி அவருக்கு அநேக காரியங்களைக் குறித்து சொல்லிக் கொடுத்தார். பூக்களை அவைகளின் மணத்தை வைத்தே என்ன பூ என்றும், மரத்தை தடவிப் பார்த்து என்ன மரம் என்று கூறும் திறமைப் படைத்தவராயிருந்தார்.
சிறுவயதில் வசனங்களை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தார். 5 ஆகமங்களையும், சங்கீதங்களையும் நீதிமொழிகளையும், ரூத் போன்ற வேத புத்தகங்களையும் அவர் மனனம் செய்து வைத்திருந்தார். அது அவருக்கு ஆவிக்குரிய வாழ்வில் முன்னேறுவதற்கு அவருக்கு பெரிதும் உதவின.
தனது 15ஆவது வயதில், குருடருக்கான பள்ளியில் நியூயார்க்கில் சேர்ந்து, அருமையான படிப்பை படித்து முடித்தாள். அதன் பிறகு அங்கேயே ஆசிரியையாக பணியாற்றி, தனது 38-ஆவது வயதில் தன்னோடு பணியாற்றின பாவையற்ற அலெக்ஸாண்டர் என்னும் பியானோ வாசிப்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
அவர்கள் 44 வருடங்கள் திருமண வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்தினார்கள்.
அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து, முதலாம் வருடத்திலேயே மரித்து போனது.
யார் இந்த
ஃபேனி கிராஸ்பி? அவர் தான்
8000- த்துக்கும் மேலான கிறிஸ்தவ பாடல்களை இயற்றி இசை அமைத்த மேதையாவார். அவர் எழுதிய அநேக பாடல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, சபைகளில் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.
அவர் இயற்றிய பாடல்களில் சில ‘I am Thine O Lord, To God be the glory, Draw me nearer, Blessed Assurance’ இப்படி அருமையான பாடல்களை அவர் இயற்றி இசையமைத்திருக்கிறார். ஃபேனி சுவிசேஷத்தை பாடல்கள் மூலம் பரப்புவதே தன் பணி என்று நினைத்தார். தேவ செய்திகளைவிட பாடல்கள் மூலம் அநேக ஆத்துமாக்கள் சந்திக்க முடியும் எனறு அவர் நம்பினார்.
பியானோ, கிட்டார், ஆர்கன் என்று அநேக இசை வாத்தியங்களை வாசிக்க அறிந்திருந்ததுடன், அழகான குரலில் பாடவும் அறிந்திருந்தார்.
அவர் தன் பார்வை இழந்த போதிலும், விசுவாசக் கண்களினால் கர்த்தரின் மகிமையைக் கண்டவராய், அற்புதமான பாடல்களை இயற்றினார்.
தனது குறையை நினைத்து ஒரு போதும் அவர் முறுமுறுக்கவே இல்லை. ‘தேவன் தமது மேலான கிருபையினால், தமது ஊழியத்திற்கு இந்த நிலைமையில் இருக்கிற என்னையும் தெரிந்தெடுத்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன்’ என்று அவர் நன்றியோடு வாழ்ந்தார்.
ஒரு முறை ஒரு ஊழியர், அவர் பார்வையில்லாதவராக இருப்பதைக் குறித்து, தனது துயரத்தை வெளிப்படுத்த முற்பட்ட போது, கிராஸ்பி, அவரைத் தடுத்து, ‘எனது பிறப்பின் போது எனது விருப்பம் எது என்று என்னைக் கேட்டிருந்தால் நான் குருடாக இருப்பதையே விரும்புவேன்.
ஏனெனில், நான் பரலோகத்திற்கு போகும் போது நான் காணும் முதல் முகம் எனக்காக தன் ஜீவனையே கொடுத்த என் நேசர் இயேசுவாகத் தான் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.
வேதத்தில் பார்ப்போம்,
உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்.
1 தீமோ 6 :8.
உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
எபிரேயர் 13 :5.
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
1 தீமோ6 :6.
பிரியமானவர்களே,
போதுமென்கிற மனதும் தேவன் கொடுக்கும் மிக பெரிய பொக்கிஷம். உண்மையான கிறிஸ்தவன் இதை நிச்சயமாக வாஞ்சிப்பான்.
பொதுவாக மனிதன் போதுமென்கிற மனதற்றவனாய் இன்றைக்கு அலசடிப்படுகிறான். திருப்தியற்ற இருதயம் உள்ளவர்களாய் வாழுகிறான். இதினிமித்தம் அவர்களே பலவிதமான பிரச்சனைகளிலும் நெருக்கங்களிலும் அகப்படுக் கொள்ளுகிறார்கள்.
போதுமென்ற மனதில்லாத இடத்தில் மெய்யான தேவ பக்தியை ஒரு போதும் பார்க்கவே முடியாது. அவர்கள் பணம், பொருள், பாவ இச்சைகள் எல்லாவற்றிலும் எனக்கு இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று இரவு பகலாக திருப்தியற்ற நிலைமையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நீதி 15:16-ல் “சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப் பொருளே உத்தமம்”என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதிக பொருள் அதிக சஞ்சலம். தேவைகளுக்கு ஏற்ற வண்ணம் தேவன் நமக்கு கொடுப்பதாக வாக்கு பண்ணியிருக்கிறார். ஒருபோதும் அவர் கைவிடமாட்டார்.
ஆனால் மேலும் மேலும் எனக்குத் தேவை என்று போகும் போது சஞ்சலமும், வேதனையும்,
வருத்தமே மிஞ்சும். திருப்தியற்ற தன்மையோடு கவலையும் கூடும்.
இன்று நம்மில் அநேகர்
நான் கருப்பாக இருக்கிறேன், ரொம்ப குள்ளமாக இருக்கிறேன், எனக்கு அது குறை இது குறை புலம்புகிறோம்.
ஆனால் ஃபேனி என்ற பார்வையிழந்த பெண்
தனது குறைகளிலும் எந்த முறுமுறுப்பும் இல்லாமல், கர்த்தருக்காக வாழ்ந்து,
இசைக் குயிலாக அநேக பாடல்களைப் பாடி, அநேகரை கர்த்தருக்குள் வழி நடத்திய ஃபேனி பரலோகத்திலும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்திருந்து,
அவரை முகமுகமாய் தரிசித்து, அவரை துதிக்கும் பாடல்களை பாடிக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை.
கர்த்தருக்காக எதையாவது சாதிக்க நினைப்போர் தங்கள் சரீர குறைகளை நினைத்து ஒரு போதும் புலம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
எந்த குறையும் தடையும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.
நாமும் நமது குறைகளை மாற்றி நிறைவான ஆசீர்வாதங்களை தரும் கர்த்தரிடம் வந்து சேருவோம். எந்த சூழ்நிலையிலும் மனரம்மியமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்