Humility is a powerful weapon that God gives us
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி. அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.
யோனா 1:2
========================எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
நாம் வாழ்ந்து வருகிற இந்த காலத்தில் பாவம் பெருகியிருக்கிறது என்றே கூறலாம். பாவம் செய்வது மனித இயல்பு தான். ஆனால் அவைகளை குறித்து நாம் மனஸ்தாப படும்போது , நம் அன்பின் ஆண்டவர் மன்னிக்கிறவராகவே அன்றும் இன்றும் இருக்கிறார்.
வேதத்தில் நினிவே பட்டணத்தின் ஜனங்களின் அக்கிரமம் தேவனுடைய சமுகத்தை எட்டினது என்று கூறுகிறது. எனவே தேவன் நினிவே பட்டணத்தின் ஜனங்களை எச்சரிக்கும்படி யோனாவை அனுப்பினார். யோனா எழுந்து கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்.
நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம் பண்ணி: இன்னும் நாற்பது நாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போம் என்று கூறினான்.
யோனா 3:3-4
நினிவே ஜனங்கள் தங்களுடைய தப்பிதங்களை உணர்ந்து தேவனுடைய நியாத்தீர்ப்பை குறித்து அறிந்த உடனே தங்களை தாழ்த்தி தேவன் பக்கமாய் தங்களுடைய முகத்தை திருப்பினார்கள்.
அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ் செய்யும் படிக் கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள்.
இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப் போட்டு, இரட்டை உடுத்திக் கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.
மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம் பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமல் இருக்கவும்,
மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள்.
யாருக்குத் தெரியும். நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தை விட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச் சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். யோனா 3:5-10 என்று பார்க்கிறோம்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் பெருமையும், தாழ்மையும் உண்டு. ஆனால் எல்லா தீமைக்கும் வித்தாகிய பெருமை மனுஷனுடைய இருதயத்தில் ஆழமாக பதிந்துள்ளது.
நமது உள்ளத்தில் வீணான பல மேன்மை பாராட்டுதலை கொண்டு வருகிறது. பெருமையோ ஒருவனுடைய வாழ்க்கையை அழித்து விடுகிறது.
தாழ்மை என்பது தேவன் நமக்கு அளிக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஆயுதமாகும்.
வேதத்தில் பார்ப்போம்,
அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்ட போது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்க மாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
2 நாளா12 :7.
உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னை தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்.
2 இரா 22 :19.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
2 நாளா 7:14.
பிரியமானவர்களே,
நினிவேக்கு நடந்த காரியம் தேவன் நம் மேல் கொண்டுள்ள இரக்கத்தை வெளிப்படுத்துகிறது. மனிதன் எவ்வளவு பெரிய பாவங்களையும், அக்கிரமங்களையும் செய்திருந்தாலும் அவன் மனந்திரும்பி தேவன் பக்கமாய் திரும்பும் போது தேவன் அவர்களுடைய அக்கிரமங்களை மன்னித்து தம்முடைய இரக்கத்தை வெளிப்படுத்துகிறார்.
நினிவே பட்டணத்தின் இராஜா முதல் எல்லா ஜனங்களும் தங்களை தாழ்த்தி மனந்திரும்பிய போது தேவனுடைய கிருபையை பெற்றார்கள்.
நினிவே அழிவிலிருந்து தம்பியது.
இன்று நம் வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமில்லாத பொல்லாத பாவ வழிகள் என்ன என்பதை சோதித்து பார்த்து மனந்திரும்புவோம்.
யோனா நினிவே அழிக்கப்படும் என்று பிரசங்கித்தான். ஜனங்கள் மனந்திரும்பிய போது காரியங்கள் மாறுதலால் அமைந்தது.
இன்று, பாவத்திற்குள் கிடக்கும் நமது தேசத்துக்காய் ஜெபிக்க நாம் தான் கடமைப்பட்டிருக்கிறோம். நம்மில் எத்தனை பேருக்கு தேசத்துக்காய் ஜெபிக்கும் பாரம் உண்டு!
தொலைக் காட்சியில் செய்திகளைக் கேட்டு, தேசத்துக்காய் பாரத்தோடு ஜெபிக்கும் வயதான தாயார் ஒருவரை அறிவேன். நம் தேசத்துக்கு ஷேமம் வேண்டுமாயின் முதலாவது, நாம் நம்மை தாழ்த்த வேண்டும். தாழ்மையான ஜெபமே தேவ சமுகத்தை அசைக்கும்.
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்.
2நாளா 7:14. என்று அன்பின் ஆண்டவர் வாக்குக் கொடுக்கிறார்.
இப்படிப்பட்ட ஜெபத்தை நம்மாலே தான் செய்ய முடியும். அழிவை நோக்கி வெகுவேகமாகச் சென்று கொண்டிருக்கும் நமது தேசம் பாவக்கட்டுக்குள் அகப்பட்டு இன்னமும் மெய்த் தேவனை அறியாமல் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கும் நமது மக்கள் ஏராளம்.
இவற்றைக் குறித்து நாம் பாரமற்றிருப்பது எப்படி? நாம் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு ராஜாக்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் ஜெபம்பண்ண வேண்டும் 1தீமோ.2:1,2. இப்படியிருக்க நமது நிலையென்ன?
நாம் நமது தேசத்திற்காக இன்னும் அதிகமாய் ஜெபிப்போம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் நாம் மன்றாடும் போது நம் ஜெபத்தை கேட்டு நம் தேசத்திற்கு நிச்சயம் க்ஷேமத்தை கட்டளையிடுவார்.
ஆமென்.