I am the light of the world

I am the light of the world, Whoever follows me will never walk in darkness.

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்”
யோவான் 8:12.

=========================
எனக்கு அன்பானவர்களே!

ஜீவ ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பல வருடங்களுக்கு முன்பு, ரஷ்யா நாட்டிற்கு சென்று திரும்பிய ஒருவர் இப்படி கூறுகின்றார். ஒரு நாள் அந்த நாட்டில் கடுங்குளிரில் அவர் நடந்து சென்ற பொழுது, ஓர் ரஷ்ய அம்மையாரை சந்தித்தாராம்.

இவர் தேவனுடைய ஊழியத்தைச் செய்கிறார் என்று அந்த அம்மையார் அறிந்த பொழுது, தன் அனுபவம் ஒன்றை அவரிடம் பகிர்ந்து கொண்டார்களாம்.

“ஐயா, திடீரென ஒருநாள் என் இரண்டு நுரையீரல்களும் பழுதுபட்டுவிட்டன.
வலி தாங்க முடியாமல் துடித்தேன். பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றும் வேதனை குறையவேயில்லை. இந்த உலகத்தில் வாழ்வதைவிட சாவதையே நான் விரும்பினேன்.

ஒருநாள் என்னையுமறியாமல், “தேவனே, நீர் இருப்பது உண்மையானால், ஏன் எனக்கு உதவி செய்யக் கூடாது?” என்று கதறினேன். திடீரென்று இரண்டு பிரகாசமான ஒளிக்கதிர்கள் இறங்கி, என் மார்பினுள் நுழைந்து, நுரையீரல்களுக்குள் ஊடுருவி சென்றதை உணர்ந்தேன்.

உடனே என் சரீரத்திலிருந்த வலி முற்றிலுமாக மறைந்தது. பின்பு நான் வைத்தியர்களிடம் சென்று, “என்னை சோதித்துப் பாருங்கள்; எனக்கு வலியே இல்லை; இப்படி ஒரு காட்சியைக் கண்டேன்” என்று சொன்னேன்.

அவர்கள் என்னை சோதித்துப் பார்த்து, “அம்மா, என்ன நடந்ததோ தெரியவில்லை; உங்கள் சரீரத்தில் உண்மையாகவே இரண்டு புதிய நுரையீரல்கள் இப்பொழுது இருக்கின்றன” என்று ஆச்சரியத்தோடு கூறினார்கள்.

இந்த அதிசய அனுபவத்தை அனைவரிடமும் சொல்லி மகிழ்ச்சியடைந்தேன். எனினும், இந்த இறைவன் எப்படி இருப்பார்? இந்த ஒளிக்கதிர்கள் எங்கிருந்து வந்தன? என்பது தான் என்னுடைய கேள்விகளாக இருந்தன.

ஒருநாள் நான் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். ஜனங்கள் திரள்திரளாக ஒரு கூட்டத்திற்கு செல்வதைக் கண்டேன். அவர்களிடம் நான், எங்கே போகிறீர்களென்று விசாரித்தேன்.

அவர்கள் “இயேசுவைப் பற்றி அங்கே கூறுகிறார்கள்” என்றார்கள். நானும் அவர்களோடு அங்கு விரைந்தேன். அங்கு தேவனுடைய செய்தியை வழங்கிய ஊழியர், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்” யோவான் 8:12 என்று இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தையை பிரசங்கித்துக் கொண்டிருந்தார்.

அந்த செய்தியின் மூலம், “இயேசு தான் அந்த ஜீவ ஒளி; அவர் தான் அன்று ஒளிக்கதிராக வந்து என் வாழ்வில் அற்புதத்தை செய்திருக்கிறார்” என்று அறிந்து கொண்டேன்.

இப்பொழுது, அந்த மெய்யான ஜீவ ஒளி என் வாழ்விலுள்ள குறைகள் யாவற்றையும் அகற்றி, தெய்வீக அமைதி, மகிழ்ச்சி, சமாதானம், சந்தோஷத்தினால் என் உள்ளத்தை நிறைத்திருக்கிறது” என்று அந்த அம்மா மிகுந்த பரவசத்தோடு கூறினார்களாம்.

வேதத்தில் பார்ப்போம்,

என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
யோவான் 12 :46.

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
மத்தேயு 4 :15.

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.
1 யோவான் 1 :5.

பிரியமானவர்களே,

உங்கள் குடும்பத்தின் மேல் உள்ள பாவத்தின் கட்டுகளை உங்களால் அறுக்க முடியவில்லையே என ஏங்குகிறீர்களா??

நீங்கள் மாத்திரம் இயேசுவை உங்கள் உள்ளத்திலே ஏற்றுக்கொண்டு, இந்தப் பாவத்தினின்றும் வியாதியினின்றும் எங்களை விடுவியும் என்று சொல்லி கேட்போமானால், அவர் நமது பாவக் கட்டுகளை நிச்சயம் அறுப்பார்.

நம்மேல் இருக்கிற சாத்தானின் ஆளோட்டியின் கோலை முறித்துப் போடுவார். நீங்களும் உங்கள் வீட்டார் அனைவரும் இரட்சிக்கப்படுவீர்கள்இதை தான் இயேசுவின் பிறப்பு உலகத்திற்கு சொல்லுகிறது.

இதுவரையிலும் சுவிசேஷம் இல்லாமல் இருந்தது. ஒரு நற்செய்தி இல்லாமல் இருந்தது. இன்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், உங்கள் பாவக்கட்டிலிருந்து விடுபட நமக்கு ஒரு இரட்சகர் பெத்லகேமிலே பிறந்தார்.

சாத்தானின் தலையை நசுக்க ஸ்திரீயின் வித்தானவர் பூமியிலே மனிதனாக பிறந்திருக்கிறார். அவருடைய நாமம் நித்திய பிதா. அவர் நித்தியத்திற்கும் பிதா, நம்மை நித்தியத்திற்கு கொண்டு சேர்க்கும் பிதாவும் அவர் தாம்.

“சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் வந்தேன்” என இயேசு சொன்னார்.

அவரை நாம் பற்றிக் கொள்வோம் என்றால் இந்த உலகத்தோடு நாம் அழிந்து போவதில்லை. நித்திய நித்தியமாய் அவரோடுகூட மகிழ்ச்சியாய் இருக்கலாம். அவர் நம் மகிழ்ச்சியைப் பெருகப் பண்ணுவார்.

எனக்கு அருமையானவர்களே

இன்றைக்கு நீங்கள் ஆண்டவரே, இருளில் இருக்கிற என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வாரும்; என் கட்டுகளின் சிறையிருப்பிலிருந்து என்னை விடுவியும் என ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்யுங்கள்.

அப்படிச் செய்யாமல் ஏன் இன்னும் இருளிலே இருந்து உழலவேண்டும். ஆண்டவரிடத்தில் திரும்புவோம். அவர் மனதுருக்கமுள்ளவர்; உங்களை நேசிக்கிறவர்; உங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி உங்களை மீட்டுக் கொண்டவர்.

அவர் உங்களை பாவத்தின் கட்டுகளிலிருந்தும் பிசாசுகளின் கட்டுகளிலிருந்தும் விடுவித்து உங்களை நித்திய நித்தியகாலமாய் பரம ராஜ்யத்தில் வைத்துக்கொள்வார். உங்களது நொறுங்குண்ட இருதயத்திலிருந்து புறப்படும் உண்மையான ஜெபத்தை அவர் ஒரு நாளும் அலட்சியம் பண்ணமாட்டார்.

அந்த அம்மையார் தெய்வீக சுகத்தை பெற்றுக் கொண்டது போல, நாமும் நாம் அன்பான இயேசு கிறிஸ்துவை நோக்கி அந்த தெய்வீக சுகத்தை எனக்கும் தந்தருளும் கேட்போமானால் அவர் நிச்சயம் தருவார்.

நம் ஒவ்வொருவருக்கும் சுகத்தையும்,
சமாதானத்தையும் தருவதற்காகவே, தேவாதி தேவன் மனுவுருக் கொண்டு ‘இயேசு’ என்ற பெயரில், இந்த பூமிக்கு இறங்கி வந்தார். இந்த உலகத்தில் நோய், சரீரப்பாடுகள், உள்ளத்தில் சமாதானமின்மை, தீய எண்ணங்கள் இப்படிப்பட்ட பலவிதமான இருள் நம்மை சூழும் பொழுது, இயேசுவை நோக்கிக் கூப்பிடுங்கள்.

அப்பொழுது உலகத்திற்கு ஒளியாயிருக்கிற இயேசு, ஜீவ ஒளியாக உங்களுக்குள் இறங்கி வருவார்.
உங்களுக்கு அற்புதம் செய்து உங்களை வாழ வைப்பார்.

நம் வாழ்வை வளமாக்கும் ஜீவ ஒளியானவராம் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்போம்.பரிபூரண ஆசீர்வாதத்தையும், சுகத்தையும், சமாதானத்தையும் இந்த ஓய்வு நாளிலே பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *