I am the living bread that came down from heaven
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்;
யோவான் 6:51.
========================
எனக்கு அன்பானவர்களே!
இனிமையானவராம் இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
“ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது ஒரு பழமொழி. அதாவது வெறும் ஏட்டு கல்வி வாழ்க்கைக்கு உதவாது. அனுபவ படிப்பே வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதே இந்த பழமொழியின் பொருள்.
நாம் ஒவ்வொருவரும் கடையில் சென்று வாசனைத் திரவியங்களை வாங்கும் போது, அதை முகர்ந்து பார்த்து தான் தேர்வு செய்கிறோம்.
ஆடை எடுக்கச் செல்லும்போது அணிந்து பார்த்து தான் முடிவு செய்கிறோம்.
உணவு எப்படி இருக்கிறது என்பதை சுவைத்துப் பார்த்து தெரிந்து கொள்கிறோம்.
எதுவுமே நாம் அனுபவித்துப் பார்க்கும் போது தான் அதன் உண்மையான சுவையும், இனிமையும் விளங்கும்.
அப்படித் தான், இறைவனைச் சுவைக்காமல் இறைவனை முழுமையாய் அறிந்து கொள்ளவும் முடியாது.
சாது சுந்தர்சிங் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர்.
எட்டு வயதிலேயே பகவத் கீதையைப் படித்து முடித்தவர்.
பதின்மூன்று வயதில் வேதங்களை நன்கு அறிந்தவர்.
கிறிஸ்தவனின் நிழல் தன் மீது விழுந்ததற்காய் ஓடிப் போய்க் குளித்தவர்.
நண்பர்களோடு சேர்ந்து பைபிளை எரித்து சிரித்து சிரித்து மகிழ்ந்தவர்.
அவரை ஒருநாள் இயேசு சந்தித்தார்.
அவர் பைபிளை வாசிக்க ஆரம்பித்தார்.
இயேசுவை சுவைக்க ஆரம்பித்தார். பின்னாளில் அவர் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை நாம் நன்கு அறிவோம் !
இந்தியாவில் நற்செய்தி அறிவிப்பில் அவருடைய பங்களிப்பை கிறிஸ்தவ உலகம் அறியும்.
இயேசுவை ருசிப்பவர்கள்,
பொது வாழ்வில் இருந்தாலும்
புது வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள்.
மகாத்மா காந்தி பைபிளை வாசித்தபோது அவருக்குள் புதிய மாற்றங்கள் நிகழ்ந்ததாக ஒருமுறை குறிப்பிட்டார்.
இயேசுவை சுவைத்தவர்கள் அந்த சுவையில் லயிக்காமல் இருக்க முடியாது.
ஜாதி, மத, இன, மொழி, பால் பேதங்களைக் கடந்து யாவரையும் ஆட்கொள்ளும் வசீகரம் இறை உணவுக்கு உண்டு.
வேதத்தில் பார்ப்போம்,
நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
யோவான் 6:51.
வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.
யோவான் 6:58.
இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
யோவான் 6 :35.
பிரியமானவர்களே,
ஒரு உணவை நாம் பார்த்ததும் அதை சுவைக்க வேண்டுமெனில் அதன் மேல் நமக்கு பசியோ, தாகமோ எடுக்க வேண்டும். அதைப்போலவே நாம்
இயேசுவைச் சுவைக்க நமக்குள் ஆன்மீக பசியும், தாகமும் இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் சுவைக்க முடியும்.
இயேசுவைச் சுவைத்தல் என்பது, அவரது வார்த்தைகளின் படி வாழ்தல்.
அவரைப் போல மாறுதல், அவரை பிரதிபலித்தல்.
இயேசுவைச் சுவைக்கும் போது தான் அவர் நம்மை எத்தனை அருமையாய் பாதுகாத்தார் . அவர் எவ்வளவு மகத்துவமானவர் என்று நமக்கு புரியும்.
அவர் நமக்கு செய்த நன்மைகள், கிருபை, இரக்கங்கள், தயவு இவைகளை நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது, தான் அவர் நமக்கு எவ்வளவு நல்லவராக எப்பொழுதும் இருந்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
“தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்” சங் 36:7. என்று வேதம் சொல்லுகிறது.
கர்த்தர் நல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் நாம் ருசித்துப் பார்த்து, அதன் அடிப்படையில் வாழும் போது தான் கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் எத்தனை மேலான காரியங்களைச் செய்து இருக்கிறார் என்பது புரியும்.
கர்த்தர் நல்லவர் என்பதை நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்கு அனுபவிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து வாழ்பவர்களாக காணப்படுவோம் .
நாம் எப்படி இயேசுவை அறிவது என்றால்,
வேத வார்த்தையின் மூலமாக நாம் இயேசுவை அறிய முடியும். அவரின் அன்பை உணர முடியும்.அவர் எவ்வளவு இனிமையானவர் என்பதை நாம் உணரமுடியும்.
இத்தகைய இனிமையான இயேசுவை நாம் மட்டும் சுவைத்தால் போதாது. நம்மை போல் அநேகர் புசிக்க நாம் வழி வகை செய்வோம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபையும், பெலனையும் தந்து ஆசீர்வதித்து காப்பாராக.
ஆமென்.